2022 விண்வெளி திட்டம்: இஸ்ரோ அறிமுகப்படுத்தி உள்ள விண்வெளி உடை மற்றும் கேப்ஸ்யூல்!

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் விண்வெளி ஆய்வு திட்டத்தில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சியின் ஆறாவது எடிஷனில் இஸ்ரோ கேப்சியூலுடன்கூடிய அதன் மாதிரி விண்வெளி உடையைக் காட்சிப்படுத்தியது. இந்த உடையும் கேப்ஸ்யூலும் இஸ்ரோவின் 2022 விண்வெளி திட்டமான ’ககன்யான்’ திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் மாதிரி உடை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெணி நிலையத்தால் உருவாக்கப்பட்டது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் 60 நிமிடங்கள் வரை சுவாசிக்க உதவும் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை வைக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆடை ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவில் முதல் முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமாகும். இதில் மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்ல உள்ளனர். இந்த திட்டம் வெற்றியடைந்தால் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடிக்கும். இந்த முயற்சிக்கான காலக்கெடு 2022-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ’தி ஹிந்து’ தெரிவிக்கிறது.

ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த 9,000 கோடி ரூபாய் வரை ஆகும் என மதிப்பிடப்படுகிறது.

இஸ்ரோ இந்த திட்டத்திற்காக ஏற்கெனவே இரண்டு ஆடைகளை உருவாக்கிய நிலையில் மூன்றாவது ஆடையின் தயாரிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. அத்துடன் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி குழுவிற்கான கேப்ஸ்யூல் மாதிரியும் அவர்கள் தப்பிப்பதற்கான மாதிரியும் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. விண்வெளி ஆராய்ச்சி குழுவிற்கான மாதிரியை இஸ்ரோ ஏற்கெனவே சோதனை செய்துள்ளது.

இஸ்ரோ உருவாக்கியுள்ள இந்த கேப்ஸ்யூல் மாதிரி பூமியின் சுற்றுப்பாதையைச் சென்றடைய 16 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இதில் செல்லும் மூன்று விண்வெளி  வீரர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் அங்கே இருப்பார்கள். பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் பயணிக்கும் விதத்தில் இந்த கேப்ஸ்யூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்ப கவசம்

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டத்திற்கு திரும்பும்போது ஏற்படும் உராய்வின் காரணமாக கேப்ஸ்யூல் எரியத் துவங்கும். கேப்ஸ்யூலின் மேற்பரப்பு வெப்பநிலை 1,649 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். இந்த வெப்பநிலை கேப்ஸ்யூலில் இருக்கும் விண்வெளி வீரர்களை தாக்காமல் இருக்க இஸ்ரோ புதிய வெப்ப கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளது. கேப்ஸ்யூலின் வெளிப்புற வெப்பநிலை எதுவாக இருப்பினும் இந்த  கவசம் கேப்ஸ்யூலின் உட்புற வெப்பநிலையை 25 டிகிரிக்கும் குறைவாக வைத்திருக்கும் என நியூஸ்18 தெரிவிக்கிறது.

பிரெஞ்சு விண்வெளி ஏஜென்சியான CNES விண்வெளி மருத்துவம், விண்வெளி சுகாதார கண்காணிப்பு, வாழ்க்கை ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளி குப்பைகள் பாதுகாப்பு, தனிப்பட்ட சுகாதார அமைப்பு போன்ற பகுதிகளில் இஸ்ரோவிற்கு உதவ உள்ளது.

ஒவ்வொரு 90 நிமிடங்களிலும் கேப்ஸ்யூல் பூமியை சுற்றி வரும் நிலையில் விண்வெளி வீரர்கள் நுண்ணோக்கி மீது ஆய்வு செய்வார்கள். இந்த கேப்ஸ்யூல் குஜராத் கடற்கரைப்பகுதி அருகே அரேபியக் கடற்கரையில் உள்ள நிலப்பரப்பில் பூமிக்கு திரும்பிவர 36 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அந்த சமயத்தில் உதவுவதற்காக இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் தயார்நிலையில் இருப்பார்கள் என ’இண்டியா டுடே’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL