பல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது' 

ஊருணி ஃபவுண்டேஷன்’ 100 உழைக்கும் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது...

0

நம்மிடையே உள்ள ஐம்பது சதவிகித திறமையை வெளியில் காண்பித்தாலே திறமைக்கான போரே இங்கு நடக்கும். அந்த அளவிற்கு பெண்கள் தடைகள் பல கடந்து பல துறைகளிலும் முன்னேறியதுடன் அவர்களுக்கென தனி முத்திரையையும் பதித்துள்ளனர். 

சாதித்த பெண்களைக் கொண்டாடிய  நாம், அன்றாடம் பணிக்குச் சென்று பல துறைகளில் சத்தமில்லாமல் சாதிக்கும் அல்லது தங்களின் செயல் மூலம் முன்னோடியாகத் திகழும் பெண்களை அவ்வளவாக ஊக்குவிப்பதில்லை.

பெண்கள் பல வேலைகளை கையாளுவதில் வல்லவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் வீட்டிலோ, அல்லது அலுவலகத்திலோ பெரும்பாலான பெண்களின் திறனை எவரும் அங்கீகரிப்பதில்லை. வேலைக்கு செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பல துறைகளிலிருந்து நூறு உழைக்கும் பெண் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து  ’ஊருணி ஃபவுண்டேஷன்’ விருதுகள் வழங்கி அவர்களை கெளரவித்துள்ளது.  

வொர்கிங்  வுமன் அச்சீவர்ஸ் அவார்ட் (WWAA)

வேலைக்கு செல்லும் பெண்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வை பற்றி ஊருணி ஃபவுண்டேஷேன் நிறுவனர் ரத்தினவேல் ராஜன் கூறுகையில்,

”அதிமுக்கியமான கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றில் ஊருணி கவனம் செலுத்துகிறது. எங்களின் செயல்பாடுகளில் தன்னலம் கருதாத பல பெண்களை சந்தித்துள்ளோம். அன்றாடம் பல இன்னல்களை கடந்து வந்து பணிபுரியும் இவர்களின் அற்புதமான தன்மை எங்களை வியக்க வைத்துள்ளது. இவர்களை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதே இந்த விருதுகள்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில் நாமினேஷன் முதல் விருது வரை அனைத்து விண்ணப்பங்களும் விருதுக்கு தகுதியுடையவை என்றாலும் அதிலிருந்து  நூறு சிறந்த பெண்களை, பனிரெண்டு பெண்கள் கொண்ட ஜூரி குழுவினர்  தேர்ந்தெடுத்தனர் என்றார். 500 விண்ணப்பங்கள் பெற்று அதில் இருந்து பெண் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றார். 

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி.கே.குமாரவேல், விண்ணப்பித்த 500 பெண்களுமே வெற்றியாளர்கள் என்றார். போட்டி இருந்தால் மட்டுமே ஒருவர் தன்னுடைய சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும்.

“பெண்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த, அதிகாரத்தை காண்பிக்க காத்திருக்கக் கூடாது. ஒரு ஆண் அவருக்கு உறுதுணை புரியவேண்டும் என்று எதிர்ப்பார்க்கக்கூடாது. அவர்களாகவே தங்களின் விருப்பத்துறையை தேர்வு செய்து திறமையை வெளிப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே பெண் முன்னேற்றம் முழுமை அடையும்,” என்றார்.

பெண்கள் ஜூரி

பல துறைகளிலிருந்து உள்ளடக்கிய  பனிரெண்டு பெண்கள் கொண்ட ஜூரி அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, இறுதியாக நூறு பெண் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். உமா ஸ்ரீனிவாசன், பாரத் மேட்ரிமோனி ; கல்வியாளர் வித்யா ஸ்ரீனிவாசன் ; புற்று நோய் கவுன்சலர் மற்றும் ஊக்க பேச்சாளர் நீர்ஜா மாலிக் ; சைக்லிஸ்ட் பத்மபிரியா ; ஐபிஎம் நிறுவனத்தின் Dr.சுபா ராஜன், யுவர் ஸ்டொரி துணை எடிட்டர் இந்துஜா ரகுநாதன் ; லெனாஃஸ் இந்தியா நிறுவனத்தின் ஹேமா மணி ; பெண்கள் வழக்கறிஞர் அமைப்பு செயலாளர் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தி ; இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தீபிகா நல்லதம்பி; நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் HR துணை பொது மேலாளர் - மாலினி சரவணன்,  சமூக சேவகர் மூகாம்பிகா ரத்னம் மற்றும் கியூப் சினிமாஸ் கல்பனா குமார் ஆகியோர் ஜூரியில் இடம் பெற்றிருந்தர்.

விருது விழா

உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஆர்.மகாதேவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்த விருது விழாவில், நேச்சுரலஸ் நிறுவனர் சி.கே.குமாரவேல், திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் தாமரை செந்தூரபாண்டி, வழக்கறிஞர் மற்றும் பேச்சாளர் பாரதி பாஸ்கர், மாநில பெண்கள் கமிஷன் தலைவர் கண்ணகி மற்றும் மாற்றம் ஃபவுண்டேஷன் நிறுவனர் சுஜித் குமார், ஆகியோர் பங்கு பெற்று விருதுகளை வழங்கியும் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.

வாழ்நாள் சாதனை விருது

’சுயம்  அறக்கட்டளை’ நிறுவனர் டாக்டர். உமா வெங்கடாச்சலம் கடந்த 25 ஆண்டுகளாக செய்து வரும் சமூக தொண்டை பாராட்டி அவருக்கு ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு கீழ்நிலை மக்களுக்கு கல்வி வழங்குவதை பிரதானமாகக் கொண்டு அவர் சுயம் அறக்கட்டளையை துவங்கினார். இன்று குறிப்பாக நாடோடி மக்களின்  அடிப்படை உரிமையை நிலை நாட்டவும் அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருவதிலும் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.

துணை தாஷில்தார் அபர்னா, முதல் திருநங்கை காவல் அதிகாரி ப்ரித்திகா யாஷினி, கோவை போஸ்ட் ஆசிரியர் வித்யாஸ்ரீ, சுடுகாடு நிர்வகிக்கும் பெண் ப்ரவீனா சாலமன், மரீனா பீச் உணவு அங்காடி நடத்தும் சுந்தரி அக்கா, நியூஸ்7 தொலைக்காட்சியின் சிறப்பு செய்தியாளர் சுகிதா, நடிகர் மற்றும் மேக் அப் கலைஞர் திருநங்கை ஜீவா, பரதநாட்டியக் கலைஞர் ந்ருத்யா பிள்ளை ஆகியோர் உள்பட பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு விழாவில் விருது வழங்கப்பட்டது.

பெண்களுக்கு வாய்ப்பினை கொடுக்கத் தேவையில்லை, அவர்களுக்கான வாய்ப்பினை பறிக்காமல் தடை செய்யாமல் இருந்தாலே போதுமானது.  பெண்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடுபவர்கள். விருது அவர்களுக்கு மகுடம் சூடும்படி அமைந்தாலும், அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு தோள் கொடுத்து அவர்களின் இலக்கை அடையச்செய்வது ஒவ்வொரு ஆண் மகனின் கடமையாகும் என்பதே இவ்விருது விழாவின் முக்கிய நோக்கமாகும். 

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Related Stories

Stories by Sandhya Raju