பைன் மர இலைகளை சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிபொருளாக மாற்றும் புதுமையான திட்டம்!

0

பைன் மர இலைகளால் ஹிமாச்சல பிரதேசத்தின் இமாலய பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பரவும். ஆனால் ஐஐடி-மண்டியின் புதுமையான திட்டம் பைன் இலைகளை மற்ற பயோமாஸ்களுடன் இணைத்து அதைs சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாக மாற்ற உதவுகிறது.

ஹிமாலய வாழ்வாதார மேம்பாட்டு மையத்தின் தலைமை ஆய்வாளர் டாக்டர் ஆர்த்தி காஷ்யப் தலைமையிலான இந்த திட்டத்தில் பைன் இலைகள் கட்டிகளாகவும் சிறு உருண்டைகளாகவும் மாற்றப்பட்டு குடியிருப்புவாசிகள் மழைக்காலத்தில் வெப்பமூட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.

தி ட்ரிப்யூன் உடனான நேர்காணலில் டாக்டர் காஷ்யப் கூறுகையில், 

“இந்த கட்டிகள் குறைவான விலையில் கூடுதல் வெப்பத்தை வழங்குகிறது. மரம் அல்லது கரியுடன் ஒப்பிடுகையில் இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. பல சிறிய மற்றும் பெரியளவிலான தொழிற்சாலைகளில் மரம் மற்றும் கரிக்கு பதிலாக இந்த கட்டிகள் பயன்படுத்தலாம். சமையல் செய்யவும் பயன்படுத்தலாம்,” என்றார்.

இந்த நிறுவனம் அதன் வளாகத்தில் கட்டிகள் மற்றும் உருண்டைகள் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. ஆலையின் மூலதன செலவுகளுக்காக ஹிமாச்சல பிரதேச அரசாங்கம் மானியமாக 50 சதவீதம் அல்லது 50 லட்ச ரூபாய் மானியமாக வழங்குகிறது.

”பிராந்திய வன அதிகாரி அலுவலகத்திற்கு கடிதத்தை அனுப்பி இந்த உதவியைப் பெறலாம்,” என்றார் டாக்டர் காஷ்யப்.

பைன் இலைகளை சேகரிக்கும் செயல்முறையில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதால் பைன் இலைகளை சேகரிக்கும் உள்ளூர் நபர்களும் உதவித்தொகையைப் பெற்றுப் பயனடையலாம் என தி பெட்டர் இண்டியா குறிப்பிடுகிறது.

பைன் இலைகள் காட்டுத்தீ பரவக் காரணமாக இருப்பதுடன் அழுகுவதற்கும் அதிக நேரம் எடுக்கும். இந்த புதுமையான முயற்சியானது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுவதுடன் உள்ளூர் சமூகத்தினருக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.

ஐஐடி மண்டி ஒரு பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் சமூகத்தினர் பைன் இலை சார்ந்த தொழிற்சாலையை அமைப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA