10 ஆயிரம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கிய நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

1

கடந்த மாதத்தில், விவசாயிகளுக்கு வானிலை, விநியோகம், சந்தை விலை, பயிர் உற்பத்தி ஆகிய நான்கு அம்சங்களில் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் தகவல்களைத் தரும் 'கிசான் சுவிதா' என்ற புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார்.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக இருக்கிறது. இங்கு 87 மில்லியன் மக்கள் இணையம் பயன்படுத்துகிறார்கள். இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் என்பது பிரதானம். நாட்டின் 60 சதவீத வேலைவாய்ப்புகள் அதன் வழியாகக் கிடைக்கின்றன. இந்த செயலி இந்திய விவசாயத்தின் முகத்தையே மாற்றும் என யூகிக்கப்படுகிறது.

எனினும், சில கவலைக்குரிய விஷயங்களும் இருக்கின்றன. முதலில், ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஸ் இயங்கவைக்கவேண்டும். அடுத்து இந்த தகவல்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் கிடைப்பதால் இந்த செயலி பலரிடமும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பின்னடைவை சந்திக்கிறது. பல திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், அதனால் ஏற்படும் பலன்களை காலம்தான் சொல்லவேண்டும். விரைவாகவும் சரியாகவும் தகவல்கள் சென்று சேரவேண்டும்.

டெல்லியைச் சேர்ந்த 'ஏக்கோன் டெக்னாலஜிஸ்'  (Ekgaon Technologies) நிறுவனர் விஜய் பிரதாப் சிங் ஆதித்யா கூறுவதுபோல,

மொபைல் சார்ந்த சேவைகள் அனைத்தும் பயனளிப்பவை என்று சொல்லமுடியாது. அவை எல்லாம் பொதுவான ஆலோசனைகளை ஒரு ஜன்னலின் வழியாகச் செய்யமுடியாது. 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு அரை மணி நேர நிகழ்ச்சி யாரோ ஒரு விவசாயியின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும், ஆனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. பண்ணை ஆலோசனைகள் திருத்தியமைக்கப்பட்டு சரியாகப் புரிந்துகொண்டு விவசாயிகள் அதனை நிலத்தில் செயல்படுத்தும் வகையில் அளிக்கப்படவேண்டும்.

ஏக்கோன் டெக்னாலஜிஸ் இரண்டு நிலைகளில் விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டது. முதலில் விவசாயிகள் ஏக்கோனின் 'ஒரு கிராமம் ஒரு உலகம்' பிணையத்தில் சேரவேண்டும். அவர்களுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். மொபைல் போன் வழியாக மற்ற தகவல்களும் கிடைக்கும். அவை உற்பத்தியைப் பெருக்குவதற்கும் சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கும் உதவும். அடுத்து இந்த அமைப்பு ஏக்கோன் டாட் காம் என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. அதன் மூலம் விவசாயிகளும் நுகர்வோர்களும் இணைக்கப்படுவார்கள். நுகர்வோருக்கு சுகாதாரமான இயற்கையான சிறந்த ஆர்கானிக் உணவுப் பொருள்கள் கிடைக்கும்.

திருத்தப்பட்ட ஆலோசனைகள் 150 ரூபாய்க்கு கிடைக்கும்

ஏக்கோனின் விநியோக மாதிரி என்பது ‘எனக்குத் தேவைப்படும்போது‘, முக்கியமாக பயிர் செய்யும் சமயத்தில் விவசாயிகளில் கைக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த ஆலோசனை, விளைச்சலை அதிகரிப்பது மற்றும் செலவுகளைக் குறைப்பது பற்றியது.

சிறுவிவசாயிகளுக்கு பயிரிடும் காலத்தில் ஏக்கோனின் சேவை கிடைக்கும். அதன் பெயர் ஒன் ஃபார்ம். அதில் திருத்தப்பட்ட மண் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் மற்றும் பருவநிலைகள், நோய் எச்சரிக்கை மற்றும் சந்தை விலைகள், அத்துடன் முக்கியமான தகவலும் அளிக்கப்படுகிறது. உள்ளூர் நிர்வாகம் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடுகிறது அது எப்போது நிலத்துக்கு வரும் என்பதையும் சொல்கிறார்கள்.

இந்த சேவைகள் திருத்தப்பட்டவை. ஏனெனில் ஏக்கோன் ஒவ்வொரு பயிருக்கும் அதன் வகைகளுக்கும் நெறிமுறைகளை வகுத்திருக்கிறது அதாவது நிலத்தின் அளவு, மண், உயிரியல் - வானிலை மற்றும் பயிரின் வகை என்ற அடிப்படையில். இந்த எல்லா தகவல்களும் விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வழியாக உள்ளூர் மொழியில் அனுப்பப்படும். திட்டமிடப்பட்ட இடைவேளை நேரங்களில் தொலைபேசி அழைப்பும் செய்யப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தகவல் கிடைத்துவிட்டது என்பதை குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது ஏக்கோனுக்கு பட்டனை அழுத்தி தொலைபேசி அழைப்பு விடுப்பதன் மூலமோ உறுதி செய்கிறார்கள். அதன் மூலம் ஏக்கோன் நிறுவனம் விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதோடு, அவர்களை மேன்மைபடுத்த உதவுகிறது.

தற்போது ஏக்கோன், தமிழ்நாடு, மத்தியபிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் 20 ஆயிரம் விவசாயிகளுடன் பணியாற்றுகிறது. கடந்த ஆண்டில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆச்சரியமாக இருந்தன.

"எங்களுடைய கருத்துக்கணிப்பு 10 ஆயிரம் விவசாயிகளிடம் நடத்தப்பட்டது. அவர்களுடைய குறைந்தபட்ச உற்பத்தி ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு 12.05 குவிண்டாலில் இருந்து 24.91 குவிண்டாலாக உயர்ந்திருக்கிறது," என்கிறார் விஜய்.

சந்தையின் நிலை

“நீங்கள் உளுத்தம்பருப்பை எடுத்துக்கொண்டால் மெட்ரோவில் கிலோ விலை 100 முதல் 125 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் ஓராண்டுக்கு முன்னால் கிலோ விலை 65 முதல் 80 ரூபாய் மட்டுமே. மறுபக்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக விலையில் ஒரு ரூபாய்கூட உயரவில்லை. அரசும் குறைந்தபட்ச ஆதரவு விலையைக்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படி விவசாயிகள் வளர்வார்கள்? ” என்று கேட்கிறார் விஜய்.

அவர் பாசுமதி அரிசியை உதாரணம் காட்டிப் பேசுகிறார்,

இரண்டு ஆண்டுகளுக்குள், 900 விவசாயிகள் 5 ஆயிரம் மெட்ரிக் டன்கள் பாசுமதி அரிசியை நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உற்பத்தி செய்தார்கள். அதிக உழைப்பு தேவைப்பட்டது, அது மிகத் தரமான அரசி. ஆனால் அவர்கள் அதை விற்பதற்கு முயற்சி செய்தார்கள். அந்த அரசியை வாங்கும் மிகப்பெரும் வாங்குபவரே மத்திய அரசுதான். எந்த பேரமும் இல்லாமல் கிலோ 14 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டது. ஆனால் அதே அரிசி வெளிச் சந்தையில் கிலோ 100 ரூபாய்.

விஜய் வாடகை வாகன நிறுவனங்களை ஒப்பீடு செய்கிறார்.

உபெர், ஓலா மற்றும் பிற வாடகைக் கார் நிறுவனங்கள் ஒவ்வொருவருக்கும் சிறந்த களத்தை உருவாக்கிவைத்திருக்கின்றன. ஓட்டுநர்கள் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். வாடிக்கையாளர்களும் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்யமுடிகிறது. இதுபோன்ற மாதிரிதான் விவசாயத்திலும் தேவையாக இருக்கிறது.

ஏக்கோனில் ஆன்லைன் சந்தை

கடந்த ஆண்டு, விவசாயிகளுக்கான ஆன்லைன் களத்தைத் தொடங்கினால். அதன் மூலம் அவர்களுடைய விளைபொருள்களை ஏக்கோன் பெயரில் சரியான விலைக்கு விற்கமுடியும். ஓர் ஆண்டுக்குள், அந்த தளத்திற்கு 5 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அதில் 50 சதவீதம் பேர் மீண்டும் வந்தவர்கள்.

ஐம்பது வகையான வேறுபட்ட விளைபொருள்கள் விற்கப்பட்டன – அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சிறு தானியங்கள், மசாலா பொருள்கள், சர்க்கரை மற்றும் பல பொருள்கள். மொபைல் சார்ந்த தகவல் சேவை மற்றும் சந்தை ஆகியவற்றால் விவசாயிகளின் மாத வருமானம் 8,500 ரூபாயாக உயர்ந்தது. 67 சதவீதமாக உயர்ந்தது.

அடுத்த சில ஆண்டுகளில், ஏக்கோன் சில்லறை விற்பனையில் இறங்குவதோடு, மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனங்களும் கைகோர்க்க இருக்கிறது. ஏற்கனவே உள்ள விவசாயிகளோடு, ஏக்கோன் 15 மில்லியன் விவசாயிகளை தொடர்புகொள்ள திட்டமிட்டிருக்கிறது. 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தைப் பார்க்கவும் இலக்கு வைத்திருக்கிறது.

ஆக்கம்: SHWETA VITTA | தமிழில்: தருண் கார்த்தி 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

இந்திய விவசாயிகளின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவரும் 'நமஸ்தே கிசான்' 

விவசாயிகளை இணையத்தில் இணைக்கும் ‘ரெயின்போ அக்ரி’- கோவை இளைஞர்களின் முயற்சி!

விளைபொருட்களை அதிக உற்பத்தி செய்துவிட்டு நஷ்டப்படும் விவசாயிகள்- தீர்வு சொல்லும் ஐடி வல்லுனர்கள்