மிருக வதையை தடுத்து மாற்று தயாரிப்புகளை வழங்கும் நிறுவனம் நடத்தும் அபே ரங்கன்!

0

விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் பின்னணி குறித்த அறியாத பதின்பருவத்தில் இருந்த அபே ரங்கன், மிருகங்களை வதைப்படுத்தாமல் பால் தயாரிப்புகளுக்கான மாற்று தயாரிப்புகளை Veganarke என்கிற தனது ஸ்டார்ட் அப் வாயிலாக வழங்குகிறார்.

ஐஸ்க்ரீம், தயிர், பால், மாமிசம் ஆகியவை நமது அன்றாட உணவில் ஒரு பகுதியாகி விட்டது. பால் துறையில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிருகங்கள் வதைக்கப்படுவது கண்டுகொள்ளப்படுவதில்லை. வதைக்கப்படுவதை வெகு சிலரே தெரிந்துகொண்டுள்ளனர். அதிலும் ஒரு சிலரே மிருக வதைக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். 20 வயதான பொறியியல் மாணவரான அபே ரங்கன் தனது வீகன் (Vegan) முயற்சி மூலம் மிருக வதைக்கு எதிராகப் போராடுகிறார்.

சைவம் நோக்கிய பயணம்

அபேயின் பெற்றோர் ஏழு வருடத்திற்கு முன்பு தங்களது திருமண நாளின் போது வீகனாக மாற முடிவெடுத்தனர். மிருகங்களின் உரிமைக்கு ஆதரவளிக்கும் பயணத்தை அப்போதுதான் அவர்களது குடும்பத்தினர் துவங்கினர். அபே இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு இது உந்துதலளித்தது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அவரும் அவரது சகோதரியும் அவர்களது பெற்றோரைப் போலவே வீகனாக மாற தீர்மானித்தனர். அப்போதிருந்து அவரது குடும்பம் இப்படிப்பட்ட முடிவிற்காக எப்போதும் வருந்தியதில்லை.

”முன்பெல்லாம் மிருக வதைக்கு எதிராக இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ஒருவர் மிருக வதையைத் தடுக்க எத்தனையோ விஷயங்கள் செய்ய முடியும். உள்ளூர் மிருக உரிமை கழகத்தில் தொடர்புகொள்ளலாம். தன்னார்வலர்களாக செயல்படலாம். சொந்த வென்சரை துவங்கலாம். நீங்கள் பங்களிக்க நூற்றுக்கணக்கான வாய்ப்புகள் உள்ளது,” என்றார் அபே.

லாபநோக்கமற்ற நிறுவனம் மற்றும் ஸ்டார்ட் அப்

அபே 16 வயதில் SARV (Society for Animal Rights and Veganism) என்கிற லாபநோக்கமற்ற நிறுவனத்தைத் துவங்கினார். பல தன்னார்வலர்களை ஒன்றிணைக்கவும் வீகனிசம் மற்றும் மிருக உரிமைகள் குறித்த பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் SARV உதவியது. தன்னார்வலர்களின் உதவியுடன் SARV 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

”ஒரு சமூகத்தை உருவாக்குவது, நிதி உயர்த்துவது, மக்களை நிர்வகிப்பது, மேடைப்பேச்சில் தன்னம்பிக்கையுடன் பேசுவது போன்ற விஷயங்களில் SARV-யில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு உதவியது. SARV-யில் நாங்கள் சந்தித்த சவால்கள் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி. எங்களது தாவரம் சார்ந்த முயற்சிகளுக்கு நாங்கள் கற்ற பாடங்கள் உதவும்.”

விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் மிருகங்களை வதைக்கின்றனர். இவ்வாறு துன்புறுத்துபவர்களுக்கு நிதியுதவி செய்வதை தடுக்கவேண்டும் என்று SARC பிரச்சாரம் செய்தது. அந்த பிரச்சாரத்தின் போது அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் அவ்வாறிருக்கும் ஒரு சில வழிகளும் விலையுயர்ந்தவை ஆக இருப்பதையும் கவனித்தார் அபே. எனவே Veganarke என்கிற வீகன் ஸ்டார்ட் அப்பை துவங்கினார். இதன் மூலம் குறைவான விலையில் எளிதாக கிடைக்கக்கூடிய வீகன் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வாய்ப்புகளை ஆராய்ந்தார். 

தற்போது மிகவும் மலிவான, ஊட்டச்சத்துகள் நிறைந்த வேற்கடலை தயிர் மற்றும் பாதாம் பால் போன்ற பால் சம்பந்தப்பட்ட மாற்று பொருட்களை அவர்களது வலைதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். இந்தப் பொருட்களை தயாரிக்கும் அபேயின் அம்மாவின் ஆதரவுடன் Veganarke தற்போது பெங்களூரு முழுவதும் தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகிறது. சுய நிதியில் இயங்கி வருகிறது. அபேவும் அவரது அம்மாவை விநியோகம் செய்வதற்கு ஊழியர்களை நியமித்துள்ளனர். வீகன் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுடன் நிறுத்திவிடாமல் மேலும் விரிவடைய திட்டமிட்டுள்ளனர்.

Veganarke தயாரிப்புகளின் வாடிக்கையாளரான அனுபமா ஸ்ரீநி கூறுகையில், “Veganarke–வில் கிடைக்கும் தயிரும் பாதாம் பாலும் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. வேர்கடலையை ஊறவைப்பதிலிருந்து தயிராக மாற்றும் செயல்முறை வரை கவனமாக சிந்தித்து திட்டமிட்டுள்ளனர். ஸ்மூத்தி தயாரிப்பதற்கும் லஸ்ஸி தயாரிப்பதற்கும் இந்த கெட்டியான தயிர் நன்றாக இருக்கிறது. விருந்தினர்களுக்கு பரிமாறுகையில் பால் சேர்க்காதது குறித்து எவரும் கேள்வி எழுப்பியதில்லை. தஹி பூரி போன்ற சாட் தயாரிப்புகளுக்கு இந்த கெட்டி தயிர் பயன்படுத்தினால் சுவை கூடுகிறது. இப்படிப்பட்ட சுத்தமான பாதாம் பால் கிடைப்பது அரிது. அனைத்துவிதமான பேக்கிங் தேவைகளுக்கும் மிகச்சரியாக பொருந்துகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது, என்றார்.

விலங்குகள் உரிமைக்காக பங்களித்ததால் அபேவுக்கு வீகன் சொசைட்டி சார்பாக ‘வீகன் ஆஃப் தி இயர்’ விருதும் PETA வின் ’மிகச்சிறந்த ஆர்வலர்’ விருதும் 2014-ம் ஆண்டு கிடைத்தது. 2016-ம் ஆண்டு தாவரம் சார்ந்த உணவின் எதிர்காலம் குறித்து TedxYouth ப்ரூக்ஃபீல்டில் பேசினார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக புதுமை குழுவில் (Stanford University Innovation Fellow) ஒருவரான அபே தனது கல்லூரியான CMR தொழில்நுட்பக் கல்லூரியில் புதுமை மற்றும் தொழில்முனைவிற்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விலங்குகள் உரிமை, தாவரம் சார்ந்த உணவு, வீகனிசம் ஆகியவை குறித்து இந்தியா மற்றும் அமெரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். கர்னாடக இசை பயின்று கச்சேரிகளிலும் பங்கேற்கிறார்.

தாவரம் சார்ந்த தயாரிப்புகள் அனைவருக்கும் எளிதாக கிடைக்கவேண்டும் என்பதே அபேவின் நோக்கம். “பால் தயாரிப்புகளுடன் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளோம். நாங்கள் பணம் ஈட்டுவதற்காக வீகன் முயற்சியை மேற்கொள்ளவில்லை. வீகன் முக்கிய சந்தை என்பதால் உணவுப் பிரிவில் இது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கப்போகிறது. விலங்குகளின் உரிமையை பாதுகாப்பதற்காக இதில் ஈடுபட்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் வழிகாட்டிகள் என ஒரு அற்புதமான சூழல் கிடைக்கும் நல்லதிர்ஷ்டத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.”

ஆங்கில கட்டுரையாளர் : சிரீஷா தமர்லா