பிளஸ் 2-ல் 1000க்கும் மேல் மார்க்கை அள்ளிய மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவச் செல்வங்கள்!

2

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேரில், 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 94.1 சதவீத மாணவிகளும், 87.7 சதவீத மாணவர்களும் அடங்குவர்.

மாணவர்களின் மன உளைச்சலைத் தவிர்க்க ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டும் ரேங்க் முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதேநேரத்தில் தடைகளை தவிடு பொடியாக்கி அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள சிறந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தவறவில்லை.

அதன்படி, பல்வேறு இன்னல்களைத் தாண்டி தங்கள் சோதனைகளை எல்லாம் சாதனைகள் ஆக்கிய சில மாணவச் செல்வங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பனியன் நிறுவனங்களில் மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே குடும்பச் சூழல் வறுமையின் காரணமாக வேலைக்கு சென்ற 8 குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். 

இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய அம்மாணவர்கள் 8 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த தரணிதரன் என்ற மாணவர் 1093 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் மருத்துவம் படித்து ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் தரணியின் லட்சியமாம்.

Photo credit: Dinamani
Photo credit: Dinamani

இதேபோல், திருப்பூரைச் சேர்ந்த கஸ்தூரி என்ற சிறுமி குடும்பச் சூழல் காரணமாக 8ம் வகுப்போடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு, பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றார். தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட இச்சிறுமி, திண்டுக்கல் காந்திகிராமம் கஸ்தூரிபாய் சேவிகா ஆசிரமப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவர் தற்போது 820 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். எதிர்காலத்தில் சி.ஏ. படித்து ஆடிட்டராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியைப் போன்றே குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றவர் தான் திருப்பூரைச் சேர்ந்த லாவண்யாவும். இவரை தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீட்டு, கடலூர் மாவட்டம் இறையூரில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தனர். இவர் இந்தாண்டு 734 மதிப்பெண்கள் பெற்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். நர்சிங் பயின்று சிறந்த செவிலியராக வேண்டும் என்பது தான் லாவண்யாவின் ஆசையாம்.

குடும்பச் சூழல் காரணமாக பெற்றோருடன் மீன் கழுவும் வேலைக்குச் சென்றவர் தான் அபிதா. கடந்த 2009ம் ஆண்டு இவரை மீட்ட அதிகாரிகள், முதலில் சிறப்புப் பள்ளியிலும் பின்னர் சாதாரண பள்ளியிலும் படிக்க வைத்தனர். 

இவர் 1105 மதிப்பெண்கள் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். பி.காம் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது தான் அபிதாவின் எதிர்காலத் திட்டம் ஆகும்.

கடந்த 2010ம் ஆண்டு காஞ்சிபுரம் மெக்கானிக் பட்டறை ஒன்றில் தொழிலாளியாக மீட்கப்பட்டான் அருண்குமார். இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய அருண், 1090 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். பி.காம் படித்து ஆடிட்டராக வேண்டும் என்பது தான் அருணின் லட்சியமாம்.

இதேபோல், சைக்கிள் கடையில் இருந்து மீட்கப்பட்ட ஸ்ரீராம், 1057 மதிப்பெண்களும், வீட்டு வேலையில் இருந்து மீட்கப்பட்ட பாரதி 1009 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

பல்வேறு சோதனைகளுக்குப் பின் மீண்டும் கிடைத்த கல்வி கற்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ள இந்த மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தந்தையின் மதுப்பழக்கத்தால் மனமுடைந்து, மதுக்கடைகளை எல்லாம் மூட வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாணவர் தினேஷ், பன்னிரண்டாம் வகுப்பில் 1,024 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது தெரிய வந்துள்ளது. 

தினேஷின் இந்த மதிப்பெண்களை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மாடசாமி, கதறிக் கதறி அழுதார். ”இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மகனை இழந்துவிட்டேனே, அவன் படித்து எதிர்காலத்தில் மருத்துவராகி சேவை செய்வான் என்று நினைத்திருந்தேன். என் மதுப்பழக்கத்திற்கு அவன் பலியாகி விட்டானே,” என கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

Stories by jayachitra