ஊழியர்களை புத்தகம் படிக்க வைக்கும் இணைய சேவை!

0

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், முதலீட்டு மகாராஜா வாரன் பப்ஃபட், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், இவர்களுக்கு எல்லாம் உள்ள ஒற்றுமை என்னத்தெரியுமா? இவர்கள் அனைவருமே தத்தமது துறையில் சாதித்தவர்கள் என்பது மட்டும் அல்ல, தங்கள் வெற்றிக்கு வாசிப்பு முக்கியக் காரணம் என கருதுபவர்கள். அது மட்டும் அல்ல வெற்றி ரகசியமாக இவர்கள் சொல்வது புத்தக வாசிப்பை தான்.

பில்கேட்ஸ் பரிந்துரைக்கும் புத்தகம்: படம் நன்றி குவார்ட்ஸ் 
பில்கேட்ஸ் பரிந்துரைக்கும் புத்தகம்: படம் நன்றி குவார்ட்ஸ் 

பில்கேட்ஸுக்கு வாசிப்பு மீது இருக்கும் ஆர்வத்தை தெரிந்து கொள்ள அவரது கேட்ஸ் நோட்ஸ் (https://www.gatesnotes.com/Books#All ) வலைப்பதிவுக்கு சென்றாலே போதுமானது. இந்த வலைப்பதிவில் கேட்ஸ் தான் வாசித்த புத்தகங்களை பரிந்துரைத்து வருகிறார். பில்கேட்ஸ் பரிந்துரைக்கும் புத்தகங்களை பட்டியல் போட்டும் கட்டுரைகளையும் இணையத்தில் பார்க்கலாம். 

கடந்த 8 ஆண்டுகளில் பில்கேட்ஸ் பரிந்துரைத்த அனைத்து புத்தகங்களையும் குவார்ட்ஸ் இணையதளம் மொத்தமாக பட்டியல் போட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். - 

முதலீடு மூலம் கோடீஸ்வரரான வாரென் பப்ஃபேட்,

புத்தக வாசிப்பை தனது வெற்றிக்கு முக்கியக் காரணமாக சொல்கிறார். டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் பற்றி கேட்கவே வேண்டாம். புத்தகங்கள் தான் தன்னை வளர்த்தெடுத்தன என்று அவர் சிஎன்பிசி பேட்டியில் கூறியிருக்கிறார். 

இவ்வளவு ஏன், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கும், புத்தக வாசிப்பை முக்கியமாக கருதுபவர் தான். 2015 ம் ஆண்டில் அவர் வாரம் ஒரு புத்தகம் வாசிக்கப்போவதாக கூறி, வாசகர்களையும் தன்னோடு இணைந்து வாசிக்க அழைப்பு விடுத்தார்.

இன்னும் பல சாதனையாளர்கள் புத்தகங்களை வாசிப்பதை முக்கியமாக வலியுறுத்துகின்றனர். தொழில்முனைவில் வெற்றி பெற வேண்டும் எனில் நிறைய படியுங்கள் என்பது பலரும் கூறும் அறிவுரையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்டார்ட் அப் துறையில் இருப்பவர்களுக்கு இந்த அறிவுரை தவறாமல் கூறப்படுகின்றன. 

ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் பரிந்துரை அடங்கிய பல பட்டியலும் இருக்கின்றன. வெற்றியாளர்களைப்போல புத்தகங்களை வாசிப்பதற்கான எளிய வழியாக ஐந்து மணி நேர உத்தியும் முன்வைக்கப்படுகிறது. இது பற்றிய யுவர் ஸ்டோரி கட்டுரை.

ஆக, எந்த துறையில் வெற்றி பெற விரும்பினாலும் சரி அதற்கான எளிய வழிகளில் ஒன்று புத்தக வாசிப்பு. பலருக்கு இதுவே கடினமான வழியாக இருக்கலாம். இவர்களுக்கு உதவுவதற்காக என்றே புத்தக சுருக்க சேவைகளும் இணையத்தில் பிரபலமாக உள்ளன. அதாவது அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களின் முக்கிய அம்சங்களை மட்டும் சுருக்கி அளிக்கும் சேவைகள். முழு புத்தகத்தையும் படிக்க பொறுமை இல்லாவிட்டாலும் கூட, சுருக்கத்தை படித்து அந்த புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்பதை உள்வாங்கிக்கொள்ளலாம்.

புத்தக சுருக்க சேவை அளிக்கும் தளங்களில் முன்னிலையில் இருப்பது பிளின்க்லிஸ்ட் (https://www.blinkist.com/en/ ). ஃபோர் மினிட்ஸ் புக்ஸ் (https://fourminutebooks.com/book-summaries/ ), ஆக்‌ஷனபில் புக்ஸ் (http://www.actionablebooks.com/ ) என பல தளங்கள் இருக்கின்றன. இன்ஸ்டாரீட் (Instaread) இந்த பிரிவில் புதிய வரவு. புக்பிஹுக் (https://bookbhook.com/ ), புக்லெட் (Booklet) ஆகிய இந்திய இணையதளங்களும் புத்தக சுருக்க சேவையை அளிக்கின்றன.

ஆனால் புத்தக சுருக்க சேவைகள் எல்லாம், புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கானதே தவிர, அதற்கு மாற்று அல்ல என்பதை உணர வேண்டும். முழு புத்தகத்தையும் படித்துப்பார்க்க முடியாத நேரங்களில் அவற்றின் சாரம்சத்தை தெரிந்து கொள்ள இவை உதவுகின்றன. இது மட்டும் போதும் என்று இருந்துவிட முடியாது. சுருக்கத்தை படித்த பிறகு முழு புத்தகத்தையும் வாசிக்க தீர்மானிக்கலாம்.

இது கொஞ்சம் சவாலானது என நினைப்பவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பெட்டர்புக்கிளப் (https://www.betterbookclub.com/ ) எனும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவைச்சேர்ந்த இந்த இணையதளம் கொஞ்சம் புதுமையான முறையில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கிறது. எப்படி என்றால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் புத்தக வாசிப்பில் ஈடுபடுவதை ஊக்கம் அளிக்க இந்த தளம் உதவுகிறது.

நிறுவனங்கள் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் போது பெரிய விஷயங்கள் நடைபெறும் எனும் கருத்தை அடிப்படையாகk கொண்ட இந்தத் தளம் செயல்பட்டு வருகிறது. அதாவது நன்றாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு பரிசளித்து ஊக்குவிப்பது போல, புத்தகங்களை நன்றாக படிக்கும் ஊழியர்களுக்கு பரிசளித்து ஊக்குவிப்பது.

இப்படி செய்வதன் மூலம், ஊழியர்களை ஊக்குவிக்கலாம், ஊக்கத்தை பரவச்செய்யலாம், ஊழியர்கள் மத்தியில் பொதுவான ஒரு உரையாடலை உருவாக்கலாம் என்று பெட்டர்புக்கிளப் தளம் கருதுகிறது. சுருக்கமாகச்சொன்னால் இதன் மூலம் ஊழியர்களும் வளர்ச்சி அடைவார்கள், நிறுவனமும் வளர்ச்சி அடையும்.

ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் புத்தகங்களை படித்து ஊக்கம் பெறலாம் என்று சொல்வது போல நிறுவன ஊழியர்களும் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு தங்களையும் மேம்படுத்திக்கொண்டு நிறுவன வளர்ச்சிக்கும் கைகொடுக்கலாம் எனும் எண்ணத்தின் அடிப்படையில் இந்த இணையம் அமைந்துள்ளது.

ஊழியர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது நல்ல யோசனை தான் அல்லவா?

சரி, இதை பெட்டர்புக்கிளப் எப்படி செயல்படுத்துகிறது? இது இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானது. இந்த தளம் புத்தகங்களை வழங்கவோ, பரிந்துரைக்கவோ செய்யவில்லை. என்ன புத்தகங்களை வாசிக்க செய்வது என்பதை நிறுவனங்களின் பொறுப்பில் விட்டுவிடுகிறது. நிறுவனங்கள் தங்களுக்கான புத்தகங்களை தேர்வு செய்து ஊழியர்களிடம் அளிக்கலாம்.

அந்த புத்தகங்களை ஊழியர்கள் படிக்க ஊக்கம் அளிப்பதை நிர்வகிக்கும் பணியை தான் பெட்டர்புக்கிளப் செய்கிறது. பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களை வாசித்த பிறகு ஊழியர்கள் தங்கள் வாசிப்பு தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் வாசிப்பை குறித்து வைத்து அதற்கேற்ப புள்ளிகள் அல்லது பரிசிகள் அளிப்பதை நிர்வகிக்கும் சேவையை இந்த தளம் வழங்குகிறது.

இந்த தளத்தின் நிறுவனரான அமெரிக்க தொழில்முனைவோர் ஆர்னி மால்ஹம் (Arnie Malham) சொந்த அனுபவத்தில் உருவான யோசனை இது. ஆர்னி புத்தகங்கள் மீது தீவிர காதல் கொண்டவர். புத்தக வாசிப்பே தன்னை உருவாக்கியதாக அவர் கருதுகிறார். அவரிடம் பெரிய புத்தக கலெக்ஷனும் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வீடு மாறும்போது புத்தகங்களை வைக்க இடமில்லாமல், தனது அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றார். ஊழியர்கள் அந்த புத்தகங்களை ஆர்வத்துடன் படித்துப்பார்ப்பார்கள் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாகும் வகையில் ஊழியர்கள் அதில் ஆர்வம் காட்டவே இல்லை. யாரும் ஊழியர்கள் யாரும் அவற்றை தொட்டுக்கூட பார்க்கவில்லை.

இதனால் வெறுத்துப்போனவர், ஊழியர்கள் புத்தகங்களை படிக்க காசு கொடுக்கவும் தயாராக இருந்தார். இந்த எண்ணத்தை அவர் செயல்படுத்தவும் செய்தார். ஒவ்வொரு புத்தகத்திலும் அதை படித்தால் தரக்கூடிய தொகையை அதன் உள்ளே எழுதி வைத்தார். ஆரம்பத்தில் இதற்கும் வரவேற்பு குறைவாக இருந்தாலும் மெல்ல ஊழியர்கள் புத்தகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்ததாதகவும், பின்னர் அதுவே பழக்கமாக மாறியதாகவும் ஆர்னி குறிப்பிடுகிறார். 

20 ஆண்டுகளில் இப்படி புத்தக வாசிப்பிற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் வழங்கியிருக்கிறார். ஆர்னி ஒரு எழுத்தாளரும் கூட என்பதால் புத்தகங்கள் தரும் பலனை நன்கு உணர்ந்தவர். அவரது அனுபவத்தை கேள்விப்பட்ட மற்ற வர்த்தக நிறுவனங்களும் இந்த வழியை பின்பற்ற உதவி கோரின. இதன் பயனாக, 2014 ல் இதை ஒரு இணைய சேவையாகவே பெட்டர்புக்கிளம் மூலம் வழங்கத்துவங்கினார்.

நிறுவனங்கள் ஊழியர்களுக்கு புத்தகங்களை வழங்கி அவற்றை படிக்க ஊக்குவிப்பது தான் இதன் அடிப்படை. ஆனால் முதலாளியால் ஊழியர்கள் படித்துவிட்டனரா என்று கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இது ஊழியர்களுக்கும் சங்கடமாக இருக்கும். இந்த பொறுப்பை தான் பெட்டர்புக்கிளப் இணையதளம் ஏற்றுக்கொள்கிறது.

ஊழியர்களின் புத்தக வாசிப்பை நிர்வகிப்பதற்கான மென்பொருள் போல அது செயல்படுகிறது. ஊழியர்கள் தாங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம், வாசித்து முடித்த புத்தகம் தொடர்பான கருத்துக்கள் உள்ளிட்டவற்றை இதில் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கேற்ப நிறுவனங்கள் புள்ளிகள் அல்லது பரிசுகளை தீர்மானிக்கலாம். நிறுவனங்கள் எந்த வகையான புத்தகங்களை படிக்க வைப்பது என்பதை தீர்மானிக்கலாம். ஊழியர்களுக்கு வாசிப்புக்கு ஏற்ப ரேட்டிங்கும் அளிக்கப்படும். இதன் மூலம் ஊழியர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது மேலும் வாசிக்கவும் ஊக்கமாக அமையும்,.

புத்தக வாசிப்பு சார்ந்த கலாச்சாரத்தை உருவாக்குவது நிறுவன வளர்ச்சிக்கு பலவிதங்களில் உதவும் என்பதே இதன் பின்னே உள்ள நம்பிக்கை. இலவச திட்டம் மற்றும் கட்டண சேவைகள் மூலம் இந்த தளம் இயங்குகிறது.