ஆம் எனக்கு  சில விஷயங்கள் தெரியாது! அதில் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை!

0

சில நாட்களுக்கு முன் CXO-க்களுக்கான செமிகன்டெக்டர் மீட்டிங்கிற்காக பெங்களூருவின் ஷாங்கிரி-லா ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். மீட்டிங் நடந்தது ஒரு சிறிய அறையில். நான் அறைக்குள் நுழைந்தேன். அறை நிரம்பியிருந்தது. அதிர்ஷ்டவசமாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் வரிசையில் மேடைக்கு மிக அருகில் ஒரு இருக்கையை எனக்காக கொடுத்தனர். வழக்கமாக நிகழ்ச்சிகளுக்கு தாமதமாக வரும்போது கடைசி இருக்கைதானே கிடைக்கும்? எப்படியோ குழு விவாதத்தை கவனிக்க ஆரம்பித்தேன். விவாதம் செமிகன்டெக்டர் துறையின் புதிய போக்கு குறித்தது. துறையில் நுழைவதற்கு இந்தியா தயாராக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைப் பற்றிய தகவல்களை நிபுணர்களிடமிருந்து தெரிந்துகொள்ளத் தயாரானேன். குழுவில் இருந்தவர்கள் துறைசார்ந்த நிபுணர்கள், IIT பேராசிரியர், வெளிநாட்டில் வாழும் இந்திய தொழிலதிபர்கள் சிலர் மற்றும் கார்ப்பரேட் முதலீட்டாளர்.

நடந்தது என்ன?

செமிகன்டெக்டர் துறையின் புதுமைகளை புரிந்துகொள்ள முயற்சித்தேன். ஆனால் என்னால் விவரங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. பேச்சாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதே எனக்குப் புரியவில்லை. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஒரு காது வழியாக சென்று மறு காது வழியாக விவரங்கள் வெளியேறின. சுற்றி இருந்தவர்களைப் பார்த்தேன். அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். பயங்கர ஈடுபாடு. அடுக்கடுக்காக கேள்விகள். தலையசைப்புகள். சிரிப்பலைகள். மற்றவர்களை பார்ப்பதை விடுத்து பேச்சாளர்களையே கவனிக்கலாம் என்று மேடையை நோக்கி கவனத்தை திருப்பினேன். சிறிய அறை. மேடைக்கு மிக அருகில் இருக்கை. வேறு வழியில்லை. புரிந்துகொள்ள முயற்சித்தே ஆகவேண்டும். பேச்சாளர் என் கண்களை உற்றுநோக்கிப் பேசினார். ஒருவர் கண்களை நேரடியாகப் பார்த்து பேசுவதன் முக்கியத்தை ஒரு பேச்சாளராக நான் உணர்ந்தேன். 

ஒரு கவனம் மிகுந்த பார்வையாளரைப்போல நானும் சிரித்தேன். தலையசைத்தேன். எனக்கே நான் ஒரு முட்டாள் என்று தோன்றியது. இதுவரை இப்படி ஒரு மனநிலையில் நான் இருந்ததில்லை. பேச்சாளர் அதிகமாக என்னைப் பார்த்துப் பேசப்பேச, நான் ஒரு முட்டாள் என்ற எண்ணம் என் மனதில் அதிகரித்துக்கொண்டே வந்தது. கடவுளே! அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் எங்கே போயிற்று? உரையின் ஒரு பகுதி கூட எனக்குப் புரியவில்லையே. செமிகன்டெக்டர் துறை குறித்து அதிகமாக தெரிந்துகொள்ளத்தானே இங்கே வந்தேன்? எனக்குப் புரியவில்லை என்பதை பேச்சாளர்கள் உணர்ந்திருப்பார்களா? என்னைப்போல ஒன்றும் புரியாதவர்கள் ஏன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பார்களா? யோசிக்க யோசிக்க வியப்பாக இருந்தது. ஒன்றுமே புரியாமல் ஒரு கூட்டத்தின் மத்தியில் உட்கார்ந்திருக்கும்போது இப்படித்தான் சித்தப்பிரமை பிடித்தவர் போல யோசிக்கத் தோன்றியது.

விவாதம் முடிந்து நன்றியுரை தொடர்ந்தது. நிம்மதியாக இருந்தது. மக்கள் ஒருவரோடொருவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் நானும் பேசினேன். வழக்கமாக நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அனைவருடனும் ஒருங்கிணைவேன். மாறாக இங்கே ஒரு மூலையில் நின்றுகொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். திடீரென்று எனக்கு பரிச்சயமான இருவர் வந்தனர். அறையிலிருந்த சில தொழில்முனைவோரை எனக்கு அறிமுகப்படுத்தினர். ஒருவழியாக என் மூச்சு சீரானது. செமிகன்டெக்டர் எனக்கு தெரியாத ஒன்று. ஆனால் தொழில்முனைவு எனக்கு பிடித்த ஒன்று. செமிகன்டெக்டர் தொழில்முனைவோரை அதிகம் சந்திக்க சந்திக்க என் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. தொழில்முனைவோர் அவர்களின் கதைகளை என்னுடன் பகிர விரும்பினர். நிறைய தெரிந்துகொள்ள விரும்பினர். என்னைச் சூழ்ந்துகொண்டனர். என் நம்பிக்கை அதிகரித்தது. ஏனென்றால் தொழில்முனைவு குறித்த கதைகளை கேட்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது இதுகுறித்து யோசித்துக்கொண்டே சென்றேன். மகளிர் தின விழாவில் நடந்த சம்பவம் சட்டென்று என் நினைவிற்கு வந்தது. தினம் தினம் பல நிகழ்ச்சிகள், பல சந்திப்புகள்.

டெல்லியில் நாங்கள் நடத்திய மகளிர் தின மாநாட்டில் சிறப்பான பெண் தொழில்முனைவோரும், ஆர்வமும் லட்சியமும் நிறைந்த பல தொழில்முனைவோரும் கலந்துகொண்டனர். தொழிலை திறம்பட நடத்தத் தேவையான பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். பல நிபுணர்கள் பேசினார்கள். நிதி, மதிப்பீடு, ஸ்ட்ரக்சரிங் போன்ற பல விஷயங்கள் குறித்து பேசினர். அனைத்தும் பேச்சாளர்களுக்கு பொதுவான விஷயம். ஆனால் பங்கேற்பாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பலரும் பலவிதமான கேள்விகள் கேட்டனர். “எனக்கு நிதி குறித்து அவ்வளவாக தெரியாது. என்னால் முடியுமா? நான் தொழில்நுட்பத்தில் நிபுணர் இல்லை. என்னால் தொழில்நுட்பத் துறையில் தொழில்தொடங்க முடியுமா? மதிப்பீடு குறித்து அவ்வளவாக தெரியாது. நிதி திரட்டும் முறையும் தெரியாது. ஆனால் என்னால் நிதி திரட்டவும் சரியான மதிப்பீடு செய்யவும் முடியுமா?

அவர்களுக்கான என் பதில் இதோ : நான் நிதி குறித்து நிறைய எழுதிக்கொண்டிருக்கிறேன். பலவிதமான நிதி திரட்டும் கதைகளை கேட்டிருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி திரட்டுவதில் முதல் சுற்று நடக்கும் வரை எனக்கு நிதி திரட்டுதல் குறித்து எனக்குச் சரிவர தெரியாது. நான் கதைகள் நிறைந்த உலகில் வாழ்கிறேன். பல அறிவுசார்ந்த தத்துவங்களை என்னால் எளிதில் சொல்ல இயலும். ஆனால் நிஜ வாழ்வில் அனைத்தையும் அனுபவத்தில்தான் தெரிந்துகொண்டேன். நீங்களும் ஒவ்வொன்றையும் அப்படித்தான் கற்றுக்கொள்வீர்கள். வேறு வழியில்லை. அவசியமானதை தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டும் இல்லையா? மற்றதை வக்கீலிடமும் கணக்காளரிடமும் ஒப்படைத்துவிடலாம். அத்தியாவசியமானதை புரிந்துகொண்டேன். எனக்கு ஒப்பந்தத்தில் என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டேன். அடிப்படை நிலையில் எனக்குத் தெரியாததை வழக்கறிஞரிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர்களே முட்டி மோதி பேச்சுவார்த்தை நடத்தட்டும். தொடர் மீட்டிங் ஏற்பாடு செய்யட்டும். தொலைபேசி அழைப்புகளை ஏற்கட்டும்.

நான் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கவேண்டுமா? நிச்சயமாக இல்லை. திறமையுள்ள நிபுணர்களை பணியிலமர்த்தி அவர்கள்மேல் நம்பிக்கை வைக்கலாமல்லவா? ஆமாம். 

தெரியுமா அல்லது தெரியாதா என்ற கேள்வி முளைத்தது. நிபுணர்களும் திறமைசாலிகளும் நிறைந்த உலகம் இது. அப்படியிருக்க ப்ரொஃபஷனலாக இருப்பதற்கோ வெற்றிகரமான தொழில்முனைவோராக இருப்பதற்கோ நமக்கே அனைத்தும் தெரிந்திருக்கவேண்டுமா என்ன? எனக்கு அப்படித் தோன்றவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நமக்கு தெரியவில்லை என்கிற விஷயத்தை தெரிந்துகொள்வதே ஒரு மிகப்பெரிய வரம். பலமுறை நாம் பல விஷயங்களைச் செய்ய முயன்று திணறியிருப்போம். பல கேள்விகளுக்கு பதிலளிக்க திணறியிருப்போம். மாறாக “எனக்குத் தெரியாது. நீங்கள் எனக்கு புரியவைக்கிறீர்களா?” என்று கேட்கலாமல்லவா? 

அப்படிச் செய்யுங்கள். அதுதான் நல்லது. நம்மைச் சுற்றி திறமைசாலிகள் பலர் இருகிறார்கள் அல்லவா? எனக்குத் தெரியாது என்ற உண்மையை ஒப்புக்கொள்வதாலேயே நாம் நிச்சயம் தனித்து நிற்போம்.

ஸ்டார்ட் அப்பை பொறுத்தவரை சரியான நபரை பணியிலமர்த்துங்கள். பணிக்கு தேவையான திறமை நிறைந்த ஒரு நிபுணரைத் தேர்ந்தெடுங்கள். இந்த வருடம் என் நிறுவனத்திற்கு நானும் அப்படித்தான் செய்திருக்கிறேன். சிறந்த குழுத்தலைவரை தேர்ந்தெடுத்து பணியிலமர்த்தியிருக்கிறேன். அவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளியிடுவதை அமைதியாக கவனித்துக்கொண்டிருக்கிறேன். 

நான் இதற்குமுன் CNBC-ல் பணிபுரிந்தேன். என்னுடைய மேலதிகாரி மிகவும் சுவாரஸ்யமான நபர். நாங்கள் இருவரும் சேர்ந்து மீட்டிங்கிற்கு செல்வோம். அதற்குமுன் நாங்கள் செல்லவிருக்கும் நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களையும் என்னைச் சேகரிக்கச் சொல்வார். மீட்டிங் நடக்கும்போது நிறுவனத்தினரிடம் “நீங்கள் எந்த மாதிரியான நிறுவனத்தை நடத்துகிறீர்கள் என்று எனக்கு விரிவாகச் சொல்லமுடியுமா?” என்று கேட்பார். அதன் இயக்கம் குறித்த அனைத்தையும் தெரிந்துகொள்ளும்வரை அவரது கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவை தேவையற்றவையாக எனக்குத் தோன்றும். நான் சேகரித்துக் கொடுத்த தகவல்களை அவர் நம்பவில்லையோ என்று தோன்றும். பள்ளிமாணவனைப் போல கேள்விகள் கேட்கிறாரே? இவ்வளவு விவரங்களை தெரிந்துகொள்கிறாரே? ஒரு சின்ன குழந்தைக்கு அவர் விளக்கமளிக்கப் போகிறாரா என்ன? பின்னர் தெரிந்துகொண்டேன். நடுநிலை தவறாத முன் அபிப்ராயமற்ற ஒரு மனநிலையில் அவர் மீட்டிங்கிற்கு வருகிறார். தகவல்களை மிகவும் எளிமையாக அவர் தெரிந்துகொள்ளும்விதம் தான் மீட்டிங்கிற்கு அவர் அளிக்கும் உண்மையான மதிப்பாகும். இதுபோன்ற திறந்த மனம் கொண்ட தொழில்முனைவோர் சிறந்த தீர்வுகளை அடையமுடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். மீட்டிங்கிற்கு MD எனும் பதவியை மனதில் நிறுத்திக்கொண்டு செல்லமாட்டார். எதுவும் தெரியாது, சரியாக தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தை மனதில் நிறுத்திக்கொண்டுதான் செல்வார்.

நீங்களே சற்று யோசித்துப்பாருங்கள். நாம் எத்தனை பேருடன் உரையாடி இருப்போம். எத்தனை அபிப்ராயங்களை மனதில் உருவாக்கி வைத்திருப்போம். ஒரு மனிதனைப் பற்றியோ, நிறுவனம் குறித்தோ, தொழில் குறித்தோ எதுவாக இருந்தாலும் அதன் உண்மையான அடிப்படை விஷயம் குறித்து தெரியாமலேயே நாமாக அனுமானங்களை உருவாக்கியிருப்போம்.

ஊடகங்களாகட்டும், நிபுணர்களாகட்டும், உடன் பணிபுரிவோராகட்டும் உங்களைப்பற்றிய ஒரு அனுமானம் மக்களுக்கு நிச்சயம் இருக்கும். ஒவ்வொருநாளும் உங்களைப்பற்றிய அபிப்ராயங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். சில அனுமானங்கள் வேடிக்கையாகக்கூட இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு உதவி செய்துகொள்வோம். ஒருவரையொருவர் உற்சாகமாகவும் பெருமையாகவும் தழுவிக்கொள்வோம். நமக்கு ஒரு நபரைப்பற்றி ஒன்றும் தெரியாது எனும் மனநிலையிலேயே அவரை அணுகுவோம். அவரே தன்னைக்குறித்து விவரிக்கும் வரை எந்த அபிப்ராயமும் இல்லாமல் இருப்போம். இது ஒரு சுதந்திரமான விடுவிக்கும் போக்கு. இதுதான் மந்திரம். இவ்வாறு நாம் செய்தோமானால் நம்மால் நல்ல உறவுமுறைகளை உருவாக்கமுடியும். பல ஒப்பந்தங்களை வெல்லமுடியும். பலரின் ஆதரவைப் பெறமுடியும்.

நாம் தோல்வியிலும் சில சமயம் வெல்வோம். அதேபோல் தெரியாது எனும் மனநிலையில்தான் நமக்கு பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 

(யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதியுள்ள கட்டுரைகள்:

பாராட்டவும் அன்பு செலுத்தவும் நாம் தயங்குவது ஏன்?

வாழ்த்துக்கள்! உங்களிடம் இல்லாதது தான் வெற்றிக்கு வித்திடக்கூடியது!