தங்க நகை கட்டுபாடு: விலக்களிக்கப்பட்ட வருவாய், பாரம்பரிய நகைகளுக்கு வரிவிதிப்பு கிடையாது!

0

மக்களவையினால் நிறைவேற்றப்பட்டு, தற்போது மாநிலங்கள் அவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 2016ஆம் ஆண்டிற்கான வரிவிதிப்பு சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா குறித்து கையிருப்பில் உள்ள, புராதன நகைகள் உள்பட அனைத்து நகைகளும் 75 சதவீத வீதத்தில் வரிவிதிப்புக்கு உட்பட்டது என்பதோடு கூடுதல் வரியுடன் செலுத்த வேண்டிய வரிக்கான 10 சதவீதத் தொகையும் அபராதமாக விதிக்கப்படும் என ஒரு சில வதந்திகள் நாட்டில் பரவி வருகின்றன.

மேலே குறிப்பிட்ட மசோதாவில் நகைகள் மீதான வரிவிதிப்பு பற்றிய எந்த புதிய ஷரத்தும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மசோதா தற்போது நடைமுறையில் உள்ள 1961ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் 115 பிபிஈ பிரிவின் கீழ் விதிக்கப்படத்தக்க வரி விகிதத்தை தற்போதைய 30 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகவும், அதனோடு உபரி வரியாக 25 சதவீதமும் இவற்றின் மீதான கூடுதல் வரி என்ற வகையில் உயர்த்துவதற்கான அனுமதியைப் பெறவே முன்வைக்கப்பட்டுள்ளது. 

விளக்கம் தரப்படாத வகையில் சொத்துக்களில் முதலீடு செய்யப்படும்போது அதன் மீதான வரி விகிதத்தை உயர்த்துவதை தெரிவிப்பதாகவே இந்தப் பிரிவு அமைகிறது. இந்த சொத்துக்களின் மீது வருமானம் என்ற வகையில் வரிவிதிப்பது என்பது 1960 களிலிருந்து நடைமுறையில் இருந்து வரும் (வருமான வரி) சட்டத்தின் 69, 69ஏ, 69பி ஆகிய பிரிவுகளில் அடங்குவதாகும். தற்போதைய மசோதா இந்தப் பிரிவுகளை திருத்த முயற்சிக்கவில்லை. 

115 பிபிஈ பிரிவின்கீழ் உயர்த்துவதற்காக முன்வைக்கப்பட்ட கருத்துரை என்பது விளக்கமளிக்கப்படாத வருமானத்திற்கு மட்டுமே வரிவிகிதத்தை அதிகரிப்பதற்கான கருத்துரை ஆகும். வரிஏய்ப்போர் வெளியிடப்படாத தங்கள் வருமானத்தை வர்த்தகத்தின் மூலமான வருமானம் எனவும், இதர வகைகளில் பெற்ற வருமானம் எனவும் சேர்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என தகவல் வந்துள்ளன. 115 பிபிஈ பிரிவின்கீழ் உயர்த்தப்படும் வரிவிகிதம் என்பது சொத்துக்கள் அல்லது ரொக்கம் ஆகியவற்றை ‘விளக்கப்படாத ரொக்கம் அல்லது சொத்து’ என்ற வகையிலோ அல்லது ஆதாரம் நிரூபிக்கப்படாத வர்த்தக வருமானம் என்ற வகையிலோ அறிவிக்க முயற்சிக்கப்படும் சொத்துக்களின் விஷயத்தில் மட்டுமே, இவ்வாறு வருமான மதிப்பீட்டு அதிகாரி கண்டுபிடிக்கும் நிலையில் மட்டுமே குறிப்பாக பயன்படுத்தப்படும்.

மேலும் தெரிவிக்கப்பட்ட வருமானம் அல்லது விவசாய வருமானம் போன்ற விதிவிலக்களிக்கப்பட்ட வருமானம் அல்லது நியாயமான வீட்டு சேமிப்புகள் அல்லது சட்டப்பூர்வமாக வாரிசுரிமை மூலம் பெற்றவை போன்ற வருமானத்தின் மூலம் வாங்கப்பட்ட நகைகள்/தங்கம் ஆகிய விளக்கமளிக்கப்பட்ட ஆதாரங்களின் மூலம் பெறப்பட்டவை தற்போது நடைமுறையில் உள்ள வரிவிகிதம் அல்லது தற்போது திருத்தம் செய்வதற்காக முன்வைக்கப்பட்ட வரிவிகிதம் ஆகியவற்றின் கீழ் வரி விதிக்கத் தகுந்தவை அல்ல என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் எண். 1916-ஐ உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இதன்படி வருமான வரிச் சோதனையின்போது அக்குடும்பத்திலுள்ள திருமணமான பெண்கள் ஒவ்வொருவருக்கும் தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் அதிகபட்சமாக 500 கிராமும், திருமணமாகாத பெண்களுக்கு அதிகபட்சமாக 250 கிராமும் ஆண் உறுப்பினர்களுக்கு 100 கிராமும் என்ற விகிதத்தில் அத்தகைய சோதனைக்கான கைப்பற்றுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சட்டபூர்வமான வகையில் எந்த அளவிற்கும் நகைகளை இருப்பில் வைத்துக் கொள்வதும் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில், அறிவிக்கப்பட்ட வருமானத்திலிருந்தோ அல்லது விதிவிலக்கு அளிக்கப்பட்ட வருமானத்திலிருந்தோ வாங்கப்பட்ட குடும்பத்திற்கான நகைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் வரிவிதிப்பிற்குரியவை என கவலைப்படும் வகையில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் எவ்வித அடிப்படையும் அற்றவை என்று தெரிவிக்கப்படுகிறது.