மார்ச் 2019-க்குள் 8500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி: இந்திய ரயில்வே துறை

1

இந்திய ரயில்வே துறை தனது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, காலத்துக்கு ஏற்ற வசதிகளையும் செய்ய ஆயத்தமாக உள்ளது. இந்திய அரசு டிஜிட்டல் தளத்தை ஊக்குவித்து வரும் வேளையில் இணையம் மூலம் அரசுச் சேவைகளை வழங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வே துறையும் ரயிலினுள் கட்டவேண்டிய கட்டணம், கூடுதல் தொகை மற்றும் அபராதப் பணத்தை டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட் மூலம் பெற வசதிகளை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் முதல் பகுதியாக, ரயில்வே துறை, 8500 ரயில் ஸ்டேஷன்களில் வைஃபை வசதியை செய்ய முடிவெடுத்துள்ளது. 110 மில்லியன் டாலர் அதாவது 700 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுடன் இந்த சேவையை வழங்க பணிகளை துவங்கியுள்ளது. குறிப்பாக ஊரக மற்றும் கிராமப்புற பகுதி ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதியை தர திட்டமிட்டுள்ளது. 

இந்திய ரயில்வே துறை அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில்,

“இண்டெர்நெட் சேவை என்பது தற்போது தினசரி தேவையாகி விட்டது. அதனால் ரயில் நிலையங்களில் நாடு முழுதும் வைஃபை வசதியை தர பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது,” என்றார். 

ஊரக பகுதிகளில், சிறப்பு பூத் அமைத்து டிஜிட்டல் பேன்கிங் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். மேலும் இது பற்றி எண்டிடிவி செய்தியில் பேசிய அவர்,

“ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கியாஸ்க் தனியார் மற்றும் அரசு சேர்ந்து நடத்தி அங்குள்ள மக்களுக்கு சேவைகளை அளிக்கும். இது குறித்து டெலிகாம் அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது,” என்றார். 

இன்றைய நிலவரப்படி, 216 முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி உள்ளது. இது மார்ச் 2018-க்குள் மேலும் 600 ஸ்டேஷன்களுக்கு வழங்க திட்டம் உள்ளது. மார்ச் 2019-க்குள் 8500 ரயில் நிலையங்களில் இணைய சேவை வழங்க ரயில்வே துறை இலக்கு வைத்துள்ளது.

கட்டுரை: Think change India