6 பேக் பேண்ட்: இந்தியாவின் முதல் திருநங்கைகள் இசைக் குழு!

0

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஒய்-ஃபிலிம்ஸ் என்ற யூத் என்டர்டெயின்மென்ட் பிரிவு, '6 பேக் பேண்ட்' (6 Pack Band) என்ற இந்தியாவின் முதல் திருநங்கைகள் இசைக் குழுவை தொடங்கியிருக்கிறது. இது, இந்த ஆண்டில் திருநங்கைகள் சமூகத்துக்குக் கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி என்பது தெளிவு.

ஆஷா ஜெக்தாப், பாவிகா பாட்டீல், சாந்தினி சுவர்ணாகர், ஃபிதா கான், கோமல் ஜெக்தாப் மற்றும் ரவீனா ஜெக்தாப் ஆகியோர் 6 பேக் பேண்ட் உறுப்பினர்கள் ஆவர். விண்ணப்பித்து தகுதிச் சுற்றுகளில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்டவர்களில் தங்கள் அபார திறமைகளால் இந்த ஆறு திருநங்கைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

படம்: எம்டிவி
படம்: எம்டிவி

இந்த முன்முயற்சிக்கு உறுதுணைபுரிய நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் பாடகர் சோனு நிகம் ஆகியோருடன் ஒய்-ஃபிலிம்ஸ் வெற்றிகரமாக கைகோர்த்துள்ளது. இந்த இசைக் குழு வெளியிட்டுள்ள 'ஹம் ஹேன் ஹேப்பி' என்ற முதல் பாடலுக்கு அனுஷ்கா அற்புதமான குரலில் வர்ணனையாளராக பங்கு வகித்துள்ளார்.

இவர்களது இரண்டாவது பாடலாக வெளிவரும் 'ரப் தே பந்தே'-வில் சோனு நிகம் பங்கு வகிப்பார். இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு சோனு நிகம் அளித்த பேட்டியில், "இது ஓர் அபாரமான முன்முயற்சி. இதில் அங்கம் வகிப்பதை கவுரமாகக் கருதுகிறேன். நாங்கள் செய்வது சமூக சேவை இல்லை. ஆனால், இந்த முயற்சியால் பொழுதுபோக்குத் துறையில் மிகப் பெரிய மாற்றம் உருவாவது உறுதி" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒய்-ஃபிலிமிஸ்சில் தலைமை வகிக்கும் ஆஷிஷ் பாட்டீல் இந்த வீடியோ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது ஸ்க்ரால் தளத்துக்கு அளித்த பேட்டியில், "நம் அன்றாட வாழ்க்கையில் டிராஃபிக் சிகன்ல் போன்ற இடங்களில் திருநங்கைகள் பிச்சை எடுப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு பலரும் வேலை கொடுக்க முன்வருவதில்லை. தன் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர்கள் கைவிடப்படுவதால் மரியாதை இழந்து அவதியுறுகிறார்கள்.

பல நேரங்களில் திருநங்கைகள் சமூகத்தினர் பாலியல் துன்புறுத்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களால் பாதிக்கப்படுவதும் நிகழ்கிறது. இந்தச் சூழலில், அந்தச் சமூகத்தில் இருந்து வெளிவரும் முதல் பாடல் வீடியோ, சகிப்புத்தன்மை உலகில் தங்களுக்கு மகிழ்ச்சி கிட்டுவதாக அமைத்திருப்பதும், அவர்களுக்கான உலகத்தை விவரிப்பதும் சிறப்பு" என்றார்.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்