நகை வடிவமைப்பில் சிறகடிக்கும் சுச்சி பாண்டியா!

0
“இந்தியாவில் இருபது வயது பெண்ணாய் நிதி திரட்டுவது என்பது நிச்சயம் சவாலான ஒன்று, அதிலும் மறுக்கமுடியாத கேள்வியாய் ‘நீங்கள் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது உங்களுக்கு குழந்தைகள் பிறந்தாலோ இந்த வியாபாரத்தின் நிலை என்ன’ என முதலீட்டாளர்கள் உங்களிடம் கேட்டால்? அப்பொழுதுதான் முதலீட்டாளர்கள் எனக்கு தகுந்தவர்கள் அல்ல என நான் அறிந்தேன். எனக்கு சரியான முதலீட்டாளரை தேர்ந்தெடுக்கும் போது, மிகவும் முக்கியமாய் அமைவது, என்னோடு பணிபுரிபவர், வியாபாரத்தின் வளர்ச்சியில், என்னுடைய ஈடுபாட்டில் நம்பிக்கை உள்ளவராய் இருப்பது” என்கிறார் சுச்சி பாண்டியா, பீப்பா+பெல்லாவை நிறுவியவர்.

அண்மையில் சிங்கப்பூர் சார்ந்த லயன் ராக் கேப்பிடல், ராஜேஷ் சாஹ்னே, டெருஹைட் சாடோ, மற்றும் ரூப்பா நாத் ஆகியவரிடமிருந்து 650000 டாலர் நிதி திரட்டியிருக்கிறார். இந்நிறுவனத்தின் ஆலோசகர்களில், ஜி.எஸ்.எஃப் -ன் நிறுவனர் ராஜேஷ் சாஹ்னே, மற்றும் முன்னாள் ஃப்ரீகல்டர்.காம்-ன் சி.இ.ஓ சுஜல் ஷாவும் இதில் அடக்கம்.

"பீப்பா+பெல்லா" (Pipa+Bella) பெண்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நகை தொகுப்பினை குறைந்த விலையில் அளிக்கிறது. பீப்பா என்பதற்கு ஸ்பானிஷ் மொழியின் வழக்கில் தைரியமான துணிந்து காரியங்களை செய்கிற என்றும், பெல்லா என்பதற்கு இத்தாலியில் சிறப்பான அழகுடைய என்றும் அர்த்தம். நாங்கள் எங்களுடைய தொழிற் சின்னமும், நகைகளும் இந்த இரண்டு அம்சங்களையுமே பிரதிபலிக்க வேண்டும் எனவும் அதனை அதே அம்சங்கள் நிறைந்த பெண்களுக்கு விற்க வேண்டும் என விரும்பினோம்.

சமீபத்தில் கிடைத்த பணத்தை கொண்டு சுச்சியும் அவரது குழுவும் வேலைக்கு ஆட்களை அமர்த்தவும், தொழில்நுட்ப மேடையைக் கட்டமைக்கவும், வாடிக்கையாளர் தளத்தை விரிவாக்கவும் முடிவு செய்தனர்.

மும்பையை அடிப்படையாகக் கொண்ட அவர்களுக்கு சிங்கப்பூரிலும் கிளை உண்டு. “எங்களது கவனம் இந்தியாவில் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இங்குள்ள வர்த்தகம் வேகமாக வளர்கிறது, நாங்கள் இன்னும் சில நாடுகளில் இதனை விரிவுபடுத்த நினைத்தாலும் எங்களுடைய முழு இலக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இந்தியா தான்” என்கிறார் சுச்சி.

நகை வடிவமைப்பு

நகை, சுச்சியின் இரத்தத்தில் ஊரிய ஒன்றாக இருந்ததுதான், இந்தத் துறை அவரை ஈர்த்ததற்கான காரணம். அவர் மும்பையில் நகை வியாபாரிகளின் குடும்பத்தில் வளர்ந்தவர். அங்கே எப்பொழுதும் உணவு மேடை உரையாடல்கள், வியாபார நடவடிக்கைகளை பற்றியும், வியாபாரத்தின் மூலம் மதிப்பை உண்டாக்குதல் பற்றியே அமைந்திருக்கும். சுச்சி நியூ யார்க் பல்கலைகழகத்தில், ஸ்டெர்ன் பள்ளியில் சந்தைபடுத்துதல் படித்துக் கொண்டிருந்த பொழுது சிறு வயதில் கற்ற பாடங்கள் அவருக்கு நினைவில் வந்தது.

நாடு திரும்பிய பிறகு தனது குடும்ப தொழிலை கவனித்தார். “தயாரிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தும் சுற்றுச்சூழலில் முன் அனுபவம் இருந்தது, விலை நிர்ணயம் மற்றும் விற்பனையின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள எனக்கு உதவியாய் இருந்தது” என்கிறார்.

2010-ல் எம்.பி.ஏ படிப்பதற்காக வார்ட்டன்(wharton) பள்ளியில் சேர்ந்தார். “இங்கே தான் எனக்கு பீப்பா பெல்லா பற்றிய யோசனை வந்தது, மேலும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய வியாபாரத்தை தொடங்குகையில் நான் எதன் மேல் கவனம் செலுத்த வேண்டும் என புரிந்து கொள்ள தொடங்கினேன்.” வார்ட்டன் பள்ளிக்கு சென்ற அவர், எட்டு வார வகுப்பொன்றில் ஒரு வியாபாரத்தை அமைப்பது, அடித்தளமிடுவது என்பதை பற்றி கற்றார். அதுமட்டுமின்றி நிதி, கணக்கியல் மற்றும் குறியீடுகள்(coding) வகுப்புகளுக்கும் சென்றார்.

“மிகவும் அற்புதமான அறிவுரையாளர்களுடைய சரியான வழிகாட்டுதலுடன் பீப்பா+பெல்லா தோன்றியது.”

அவருக்கு இந்த துறையை பற்றி அதிகம் தெரிந்திருந்ததாலும், இத்துறையில் முன் அனுபவம் இருந்ததாலும், இதனை இணையத்தில் கட்டமைத்தல் சிறந்த முயற்சியாக இருக்கும் என எண்ணினார்.

“நகை வாங்குவது உணர்ச்சிகள் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது, ஏனென்றால் அதனை எளிமையாக போட்டுப்பார்க்க முடியும். அதைவிட முக்கியமானது ஃபேஷன் நகையின் தேவை அதிகரித்து கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினர் நகைகள் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்க பட்டிருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர், நல்ல தரமான நகைகள் கட்டுப்படியான விலையில் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்கின்றனர், ஆனால், தங்கம் மற்றும் வைரத்தின் ஏற்ற இறக்கங்களை கவனிப்பதில்லை.”

புதுமை

இத்துறையில் பலத்த போட்டி இருந்தாலுமே, ‘புதுமையின்’ காரணத்தால் தாங்கள் தனித்தன்மையோடு விளங்குவதாய் சுச்சி நம்புகிறார். “நாங்கள் ஒரு வாரத்தில் நூறு வடிவமைப்புகளை வெளியிடுவோம். மேலும், எங்கள் இணையதளத்தில், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கும் பிரிவினை விரிவுபடுத்தி கொண்டிருக்கிறோம், அப்பொழுதுதான் வாடிக்கையாளர்களாலும் அவர்களது வடிவமைப்புகளை எங்களுக்கு அனுப்ப முடியும்.”

பன்னிரெண்டு பேர் கொண்ட குழு அவர்களுடையது. விவரப்பட்டியலை அடிப்படையாக கொண்டு வணிகம் இயங்கினாலுமே, தொழில்நுட்பத்தை சார்ந்த முறைகளால் விநியோகம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பிலிருந்து அவர்களிடம் கொண்டு சேர்ப்பது வரை, 21 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

பாரம்பரியமாக தொழிற்சின்னத்தால் இயக்கப்படாத ஒரு தயாரிப்பிற்கு, வாய்மை தவறாமையையும், வாடிக்கையாளர்களிடம் இணையும் தன்மையையும் அமைப்பது, மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கிறது. “ஆவலை உருவாக்கும், ஆனால், கட்டுபடியாகிற ஒரு தொழிற்சின்னத்தை உருவாக்க வேண்டி இருந்தது. ஆனால், சில சமயம், நல்ல தரமும், குறைந்த விலையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்வதில்லை. அதிர்ஷ்டவசமாக, நகை உற்பத்தியில் எங்களுக்கு இருந்த அனுபவம், விநியோகம் செய்வதை மேம்படுத்த உதவியது. மேலும், வணிகர்களுடன் நெருக்கமாக பழகுவதால், எங்கள் தயாரிப்பில் சிறப்பான தரமும், வடிவமைப்பும் இருப்பதை உறுதி செய்கிறோம்.”

பணியமர்த்துதலும் சவால் தான். இன்று, நல்ல திறனும், தங்கள் வேலை மேல் ஆர்வம் உள்ளவர்களையும் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார் சுச்சி. துடிப்பான, படைப்பாற்றல் மிக்க, கடின உழைப்பாளிகளான சுச்சியின் குழு நண்பர்களும், எந்த சவாலையும் எளிமையாக கையாளும் அவர்களது திறமையும் சுச்சிக்கு புத்துணர்வு அளிப்பதாய் இருக்கின்றன.

வெகு விரைவிலேயே தயாரிப்புகளை விரிவு செய்யவும், ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். மேலும், வாடிக்கையாளர்களுக்காக, அவர்களின் தளங்களில் நம்பிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவிருக்கிறார்கள். தீவிர கவனமும், ஒழுக்கமுமே தொழில் மந்திரமாக வைத்திருக்கும் சுச்சி, ஒரு சமயத்தில் பல காரியங்களை செய்வது ஒத்துழைக்காது என்கிறார். “உங்கள் திறமையிலேயே கவனம் செலுத்தி, அதை புதுமைக்கு அடித்தளமாக பயன்படுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்”.

நிதி அறிவுரை

சமீபத்தில் நிதி திரட்டியிருக்கும் அவர், இதே பாதையில் செல்லவிருப்பவர்களுக்கு சொல்லும் அறிவுரை :

முதலாவது : வேகமாக தொடங்குங்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட காரியங்கள் நடக்க அதிக நாட்கள் ஆகும். நீங்கள் மூதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே பணம் தீர்ந்து போவதை நிச்சயம் விரும்ப மாட்டீர்கள்.
இரண்டாவது : முதலீட்டாளர்களுடன் நேர்மையாக இருங்கள், நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் பற்றி வெளிப்படையாக பேசுங்கள். அவற்றை மறைத்து, வேறெதாவது வழியில் அது முதலீட்டாளர்களை சென்றடைந்து, அவர்களின் நம்பிக்கையை இழப்பதைவிட, இது சிறப்பான அணுகுமுறை தான்.
மூன்றாவது : மதிப்பிடுதலை விட விதிமுறைகள் முக்கியமானவை. விதிமுறைகள் தான் ஒவ்வொரு தினமும் நீங்கள் எப்படி வேலையை நடத்துகிறீர்கள் என்பதையும், உங்கள் மகிழ்ச்சியை உருவாக்குவது அல்லது உடைப்பதாகவும் இருக்கும். இதற்கு நல்ல ஒரு வழக்கறிஞரின் உதவியைப் பெறுங்கள்.
நான்காவது : நீங்கள் எதற்காக நிதி திரட்டுகிறீகள் என்பதையும், அதை எப்படி செலவிடப்படும் என்பதையும் அறிந்துக் கொள்ளுங்கள்.
ஐந்தாவது : உங்களுக்கு பணம் கொடுக்க எத்தனிப்பவர்கள் அனைவரும், சிறந்த முதலீட்டாளர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களை பற்றிய விபரங்களை சரிபார்த்துக் கொண்டு, அவர்களுடன் வேலை செய்வது எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

ஆக்கம் : Tanvi Dubey

தமிழில் : Sneha