ஓலா, ஊபர் ஆட்டோ மற்றும் இ-ரிக்‌ஷா சேவையில் கவனம் செலுத்துவது ஏன்?

0

இந்தியாவில் போக்குவரத்தில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் எங்கும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 60 ஆண்டுகளாக வெவ்வேறு வகையான ஆட்டோரிக்‌ஷாக்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெடல் மூலமாக இயங்கும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள், பிரபலமான மூன்று சக்கர வாகனங்கள், தற்போது பிரலபமாகி வரும் மின் ரிக்‌ஷாக்கள் என ஆட்டோக்கள் எப்போதுமே சிறப்பாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

”ஆட்டோக்கள் எளிமையானது. தெருக்களில் இறங்கி எளிதாக ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்லலாம். அவசரமாக எங்காவது செல்ல வேண்டுமானால் விரைவாக எளிதாக எந்தவித சிரமமும் இன்றி ஆட்டோவில் ஏறி பயணிக்கலாம்,” என்றார் பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான மார்க்கெட்டிங் நிர்வாகி ஒருவர்.

வசதியான பயணத்திற்கு கார் மற்றும் பேருந்திற்கு இணையாக ஆட்டோவும் இருப்பதால் பல ஆண்டுகளாக ஆட்டோரிக்‌ஷாக்கள் பயன்பாட்டில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

பெங்களூருவைச் சேர்ந்த வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனமான ஓலா 2014-ம் ஆண்டு ஆட்டோ சேவையை ஒரு தனிப் பிரிவாக அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஊபர் நிறுவனம் நகரின் ஒரு சில பகுதிகளில் ஊபர் ஆட்டோவை சோதனை முயற்சியாக மறு அறிமுகம் செய்தது. ஜுக்னூ எனும் சண்டிகரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் ஆட்டோ பிரிவில் கவனம் செலுத்துகிறது. 

வளர்ந்து வரும் துறை

மூன்று சக்கர வாகன சந்தை அடுத்த சில ஆண்டுகளில் மில்லியன் கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்யும் என துறை சார்ந்தவர்கள் கருதுகின்றனர். 2019-2020-ம் ஆண்டில் உள்ளூர் சந்தை ஆறு லட்சம் முதல் ஏழு லட்ச யூனிட்களை எட்டும் என செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. அத்துடன் அதே காலகட்டத்தில் பயணிகளின் போக்குவரத்துக்கான மூன்று சக்கர வாகனங்கள் அரை மில்லியன் அளவை தாண்டும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஓலா ஆட்டோ பிரிவின் தலைவர் சித்தார்த் அகர்வால் கூறுகையில்,

“போக்குவரத்து வசதியை நாடும் பில்லியன் கணக்கானோருக்கு வசதியான போக்குவரத்து தீர்வை வழங்குவது அவசியமாகும். 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்டோ சேவையை அறிமுகப்படுத்தியபோது பயனர்களின் பயணத்தை எளிதாக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. பயணம் செய்பவருக்கு உதவும் வகையில் கூடுதல் சேவைகளை இணைத்து வருகிறோம். ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் விதத்தில் வைஃபை சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் ஓலா ஆட்டோ மட்டுமே.

ஓலா அதன் ஆட்டோ ஓட்டுநர்கள் பலனடையும் விதத்தில் ஆட்டோ உன்னதி (Auto Unnati) என்கிற திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்கள் எப்பேர்பட்ட சூழலிலும் வருமானம் ஈட்டவேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக சித்தார்த் தெரிவித்தார்.

ஓலா ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ உன்னதி திட்டம் சலோ பேஃபிகார் (Chalo Befikar) என்கிற பெயரில் புதிய சலுகைகளை வழங்குகிறது. இதில் ஓட்டுநரின் திறமையின் அடிப்படையில் 40,000 ரூபாய் வரை நிதி உதவியும், குடும்ப நலன் மற்றும் காப்பீட்டு திட்டங்களும் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஓட்டுநர்களுக்கு 5,00,000 ரூபாய்கான காப்பீடும் வழங்கப்படும்.

”ஓட்டுநர்கள் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றுகிறார்கள் என்பதை அவர்களிடம் பேசுகையில் தெரிந்துகொள்ளலாம். இந்த தினக்கூலித் தொகையைக் கொண்டே அவர்கள் குடும்பத்தை நடத்துகின்றனர். ஆட்டோவை ஒரு தனிப்பிரிவாக உருவாக்க விரும்பினால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்,” என்றார்.

சவாரிகள் அதிகரிக்கப்பட்டு டிஜிட்டல் முறையாக்கப்பட்டது

2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ஆட்டோ சவாரியின் அளவானது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது. 2016-ம் ஆண்டில் ஆட்டோ சவாரிக்கான ஆன்லைன் புக்கிங் 3 சதவீதமாக இருந்ததாகவும் 2017-ம் ஆண்டில் 10 சதவீதமாக அதிகரித்ததாகவும் ரெட்சீர் அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தகைய அதிகரிப்பிற்கான முக்கியக் காரணம் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம். என்றபோதும் போக்குவரத்திற்கு மக்கள் ஆட்டோவையே பெரிதும் விரும்புகிறார்கள் என்பதும் உண்மை. ஓலா, ஊபர், ஜுக்னூ போன்ற தளங்கள் செயல்படுத்தியது நெறிப்படுத்தப்பட்டு ஆட்டோவை அணுகும் விதம் டிஜிட்டல் முறையாக்கப்பட்டது.

”ஆட்டோவில் பயணிப்பது எளிதாகவும் விலை மலிவாகவும் உள்ளது. நான் ஆட்டோவை ஒரு வாரம் பயன்படுத்தியபோது ஆட்டோவில் பயணிப்பது விலை மலிவானது என்பதை உணர்ந்தேன்,”

என்கிறார் 32 வயதான ஆலோசகர் ஒருவர். விலை மலிவாக இருப்பதுடன் ஆட்டோ வசதியாகவும் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளாக பலர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர்.

”வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆட்டோவை புக் செய்யும் முறைக்கு எளிதாக மாறலாம். இவர்கள் ஆட்டோவில் பயணித்து பழக்கப்பட்டவர்கள். செயலியின் தேவை குறித்து இவர்கள் கேள்வியெழுப்பினாலும் சேவையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கு செயலி அவசியமாகிறது,”

 என்கிறார் ஒரு ஆய்வாளர்.

ஓலா சார்பாக தற்போது 2,00,000 ஆட்டோக்கள் செயல்பட்டு வருகிறது. ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ள ஓட்டுநர்கள் தங்களது வருவாய் கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

”நெகிழ்வான வேலை நேரமும் சவாரியும் எனக்குக் கிடைக்கிறது. அனைத்திற்கும் மேலாக தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து, சவாரிக்காக காத்திருந்து பேரம்பேசவேண்டிய அவசியமில்லை,” என்கிறார் 35 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

மேலும் ஓட்டுநர்கள் பணியின்றி இருக்கும் நேரம் 35 சதவீதம் குறைந்துள்ளதாகவும் எரிபொருள் கட்டணம் 22 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஓலா தெரிவிக்கிறது.

பழைய ஆட்டோவிலிருந்து மாறுதல்

பொது போக்குவரத்து மையங்களிலிருந்து இறுதியாக சேரவேண்டிய இடத்தைச் சென்றடையும் ’கடைசி மைல்’ பயணத்திற்கு ஆட்டோ ஏற்றதாகும். குறிப்பாக மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் இத்தகைய பயணத்திற்கு ஆட்டோ உகந்ததாக இருக்கும். ஆட்டோ பல பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

ஜுக்னூ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ சமர் சிங்லா குறிப்பிடுகையில்,

ஆட்டோ ஒரு பிரிவாக மேலும் வளர்ச்சியடையவேண்டும். வெறும் பயணத்திற்காக ஆட்டோவை பயன்படுத்துவது பெரிதாக பலனளிக்காது. ஆகவே அவற்றை விநியோகத்திற்காக குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பயன்படுத்துகிறோம். ஏற்கெனவே விநியோகம் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு ஓலா சார்பாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த குறிப்பிட்ட மாதிரிக்கான வரவு மற்றும் செலவு சிறப்பாக நிர்வகிக்கப்படும்.

போக்குவரத்து முறையில் ஆட்டோ தேக்க நிலையிலேயே உள்ளது. இ-ரிக்‌ஷா இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இ-ரிக்‌ஷா பிரிவில் ஓலா ஏற்கெனவே தனது சோதனை முயற்சியை நாக்பூரில் துவங்கியுள்ளது. ஜுக்னூவும் இதே முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

2030-ம் ஆண்டிற்குள் 31 மில்லியன் மின்சார வாகனங்களை பயன்பாட்டில் கொண்டு வர அரசு ஊக்குவித்து கவனம் செலுத்தி வருகிறது. இதனால் மாற்றம் பெரியளவில் உள்ளது.

”மின்சார ஆட்டோக்கள் சுற்றிலும் மூடப்பட்டிருப்பதால் மாசில்லாமல் பயணிக்கலாம். இதனால் இதை மக்கள் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்,” என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிடுகிறார். 

அத்துடன் கட்டணமும் கணிசமான அளவு குறையும். பொது போக்குவரத்து மையங்களிலிருந்து இறுதியாக சேரவேண்டிய இடத்தைச் சென்றடையும் ’கடைசி மைல்’ பயணத்திற்கு இ-ரிக்‌ஷாக்கள் ஏற்றதாக இருக்கும். நான்கு இருக்கைகள் கொண்ட இந்த இ-ரிக்‌ஷாக்கள் அதிக தூரம் செல்லக்கூடியதாகும். டெல்லியைச் சேர்ந்த ஸ்மார்ட்ஈ (SmartE) இந்தப் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2022-ம் ஆண்டிற்குள் 1,00,000 இ-ரிக்‌ஷாக்களை பயன்பாட்டில் கொண்டு வரும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

தற்போது இ-ரிக்‌ஷாகள் வளர்ந்து வரும் மையமாக டெல்லி விளங்குகிறது. 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017-ம் ஆண்டு மார்ச் வரை நகரில் பதிவு செய்யப்பட்ட இ-ரிக்‌ஷாக்களின் எண்ணிக்கை 29,123 ஆக உள்ளது. ஆனால் பதிவு செய்யப்படாத வாகனங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என செண்டர் ஆஃப் சிவில் சொசைட்டி அறிக்கை தெரிவிக்கிறது.

Gayam Motor Works போன்ற நிறுவனங்கள் பேட்டரி மாற்றும் வகையிலும் லித்தியம் அயன் பேட்டரியைக் கொண்டும் இ-ரிக்‌ஷாக்களை உருவாக்கி வருகின்றன.

எனினும் காரீய அமில பேட்டரிக்களைக் கொண்டு இயங்கும் சுமார் 6,00,000 இ-ரிக்‌ஷாக்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) அறிக்கை தெரிவிக்கிறது. கைனடிக் ஹோண்டா, மஹிந்திரா & மஹிந்திரா போன்ற போட்டி நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. 

மொத்தத்தில் ஆட்டோக்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் போக்குவரத்திற்கு அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்