சென்னை மீள்வது எப்போது?

0

டிசம்பர் 1-ம் தேதி முதல் பெய்த பேய் மழையால் சுழற்றி அடிக்கப்பட்ட சென்னை ஏழாவது நாள் ஆகியும் பல இடங்களில் முழுமையான இயல்பு வாழ்கைக்கு திரும்பவில்லை.

வெள்ளம் வடிந்தோடிய சில பகுதிகளில் மின் இணைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்னும் மின்சாரம் இல்லாததால் சமைக்க, குளிக்க, துவைக்க தண்ணீர் இல்லாமலும், தொலைபேசிக்கு வழி இல்லாமலும் மக்கள் திண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பல வங்கிகளில் சர்வர்களே முடங்கிக்கிடக்கிறது. பல நிருவனங்களில் கடந்த மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை.

மழையும் அவ்வப்போது வந்து மக்களை பயமுறுத்தி கொண்டிருக்கிறது. மாநகரை விரைந்து சுத்தம் செய்யாவிட்டால் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பும் உள்ளது.

இன்று முதல் அரசு பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் பணிகளுக்கு செல்லத் தொடங்கினர். பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம். பலரது இருசக்கர வாகனங்கள், கார்கள் வெள்ளத்தில் மூழ்கியும், அடித்து செல்லப்பட்டும் செயல் இழந்து கிடக்கிறது. அவற்றை சரி செய்ய வொர்க் ஷாப்கள் திறந்து செயல்படும் வரை காத்திருக்க வேண்டும். இன்சூரன்ஸ் இழப்பீட்டு பிரச்சனைகள் ஒருபக்கம் உருவாகும்.

எனவே, அலுவலகங்கள் செல்லவும், பிற பயணங்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்காவது அரசு பஸ்களையும், மின்சார, மெட்ரோ ரயில் சேவைகளை மட்டுமே சென்னை மக்கள் நாட வேண்டி உள்ளது. நகர போக்குவரத்துக்காக மக்கள் அலை மோதும் வாய்ப்பு இருப்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளை அரசு இப்போதே செய்யத் தொடங்கினால்தான் நிலைமையை சமாளிக்க முடியும்.

பல வீடுகளில் வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், மிக்சி, கிரைண்டர், என்று மின் சாதனங்களும், நாற்காலிகள், கட்டில் படுக்கை, உடைகள் என்று சகலமும் தண்ணீரில் முழ்கி சேதமாகி உள்ளது. மாணவர்களின் புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ் புத்தகங்கள், பாஸ்போட் இப்படியான ஆவணங்களை கூட மீட்க முடியாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்தவர்கள் பலர். 

இவர்களின் வாழ்க்கை சீராக பல நாட்கள் அல்ல மாதங்களே ஆகலாம். அரசு இயந்திரமும் விரைந்து செயல்பட்டால்தான் இயல்பு நிலை சீக்கிரம் திரும்ப சாத்தியம் உள்ளது.

செய்தி தொகுப்பு: ஜெனிட்டா

படங்கள்: நிஷாந்த் க்ரிஷ்