சொந்த மண்ணில் தொழில் முனைந்து வெற்றி அடைய உழைக்கும் மதுரை இளைஞர்கள்!

5

"எங்கள் மண்ணிற்கும், சமூகத்திற்கும் நாங்கள் பெருமை சேர்க்க விரும்புகிறோம். மதுரையில் தரமான பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் தரமான நிலையான வேலை மட்டும் ஒரு கேள்விக்குறியாவே இருக்கிறது. என்னுடன் கல்வி பயன்ற 65 மாணவர்களில் இருவர் மட்டுமே மதுரையில் பணிபுரிகிறார்கள். பெரும்பாலானோர் சென்னை, பெங்களூர் முதலிய பிற வெளியிடங்களுக்கு வேலை பார்க்கச் சென்று விடுகின்றனர். மதுரையில் பொறியியல் படித்து முடித்த பலரும், இங்கேயே இருந்து தொழில் தொடங்கவும் விரும்புவதில்லை. ஆனால் மதுரையில் ஒரு நிறுவனத்தை நிறுவி, இறுதிவரை இங்கேயே இருந்து, எங்களின் தனி முயற்சியில் சொந்தமாக வளர்ந்து வெற்றி அடையவேண்டும் என்ற நோக்கில் தொழில்முனைவில் ஈடுபட்டதாக கூறுகின்றனர் அஸ்வின் மற்றும் அருண். இந்த இளம் தொழில்முனைவர்கள் தொடங்கிய, 'டெடுஸ்லி' (Deducely) என்ற நிறுவனத்தை நிலைக்க செய்வதே இவர்களின் நோக்கம். 

'டெடுஸ்லி' நிறுவனர்கள் அஸ்வின் வயிரவன் (இடது) மற்றும் அருண் (வலது)
'டெடுஸ்லி' நிறுவனர்கள் அஸ்வின் வயிரவன் (இடது) மற்றும் அருண் (வலது)

முதலீடு இன்றி சாதகமாக நிறுவன நிதியை பெறும் 'டெடுஸ்லி' நிறுவனத்தின் புத்திசாலி கதை இதோ!

'டெடுஸ்லி' தொடக்கமும்-நோக்கமும்

ஒரு நிறுவனமானது தொடக்க நிலையில் இருந்தாலும் சரி அல்லது வளரும் நிலையில் இருந்தாலும் சரி, அந்நிறுவனத்தை அணுகும் வாடிக்கையாளர்களில் சரியானவர்களை, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பவர்களைக் கண்டறிவது எளிதான விஷயம் அல்ல. சரியான வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுக்க, அவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க நடைபெறும் பணி கடினமான ஒன்றாகும். ஆனால் அப்பணியை மிக சுலபமாக்கி, நிறுவனத்தின் தயாரிப்பு வளர்ச்சியில் முன்னேற்றம் காண உதவுகிறது "டெடுஸ்லி".

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தான் 'டெடுஸ்லி' தொடங்கப்பட்டது. 2014-இல் மதுரையில் பொறியியல் படிப்பை முடித்த அஸ்வின் வயிரவன் மற்றும் அருண் இணைந்து டெடுஸ்லி-யை நிறுவினர். தற்போது ஆறு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துவருகின்றனர். இப்போது இவ்விருவர் மட்டுமே இந்நிறுவன குழுவும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்தமாக நிதி திரட்டியதன் வியூகம்

'அனுபவம் இல்லாத இளைஞர்கள் நீங்கள் எவ்வாறு தொழில்முனைந்து, நிதி திரட்டி, அதுவும் மதுரையில் எப்படி வெற்றி காண போகிறீர்கள், இது சரி வாராது' என்று தொடக்க நிலையில் பலர் நம்பிக்கை இன்றி பேசினார். பல இடங்களில் நிராகரிப்பை மட்டுமே சந்திதோம்.

முதல் நான்கு, ஐந்து மாதங்கள் பெரும் சவாலாய் இருந்தது. ஒரு மாதத்திற்கு கணினி சர்வர் செலவு மட்டுமே 30,000 - 40,000 ரூபாய் ஆனது.

நிதி தேவைக்காகவே முதலீட்டார்களுடன் கூட்டமைக்கும் நிலை வருமோ என்று எண்ணி இருந்த சமயத்தில், தக்க தருணத்தில் உதவியது மைக்ரோசாப்டின் 'பிஸ்ஸ்பார்க் திட்டம்' (BizSpark Program). அதில் எங்கள் நிறுவனம் சிறப்பான ஒன்றாய் தேர்வு செய்யப்பட்டதால், மூன்று வருடத்திற்கு மைக்ரோசாப்ட் எங்கள் சர்வர் செலவை ஏற்றுக்கொள்ளகிறது. மேலும், மைக்ரோசாப்ட் மென்பொருட்களுக்கு இலவச அணுகலும் தந்துள்ளனர். அது எங்களால் மறக்கமுடியாத நிகழ்வு என்று பகிர்ந்துகொண்டார், அஸ்வின்.

தொடக்க நிறுவனங்களுக்கு முதலீடு பெற உதவும் tracxn.com இணையதளம், ஒரு சிறப்புமிக்க நிறுவனமாய் எங்களை நிர்ணயித்ததால், பலர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார். ஆனால் ஒரு சொந்த நிறுவனமாக கொண்டு செல்லவேண்டும் என்பதால் நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் 'அமேசான்-இன் ஏ.டபிள்யு.ஸ் அக்டிவேட்' (Amazon AWS activate) திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்டதால், 15,000 டாலர் நிதியை வென்றுள்ளோம். அத்துடன் அமெரிக்க 'ஸ்ட்ரைப் அட்லஸ்' திட்டத்தின் மூலம், டெடுஸ்லி.இன்க் நிறுவனம் அமெரிக்காவிலும் ஒரு நிறுவனமாய் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று தங்கள் வெற்றிப் பாதையை அடுக்கிக்கொண்டே போனார் அஸ்வின். 

தரும் பயன்களும், இனிவரும் சேவைகளும்

ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் மேலாண்மை தொடர்புக்கு (CRM) 'டெடுஸ்லி' மென்பொருள் ஒரு கருவியாக உதவும்.

பொதுவாக இருக்கும் சமூக மன்றங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தானியக்கியாக வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டு தகவல்களை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு (Artificial Intelligence), டெடுஸ்லி குறுகிய நேரத்தில் சேகரித்துத் தரும். இது, ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பணியையும் நேரத்தையும் சிரமத்தையும் குறைத்துவிடும். இவர்களது ஒரு வாடிக்கையாளரான 'அன்தால்' நிறுவன அதிகாரிகள், இரண்டே நிமிடத்தில் அவர்களின் சரியான வாடிக்கையாளர்கள் தகவலை டெடுஸ்லி அளித்ததைக் கண்டு அசந்துவிட்டனர் என்றார், அருண்.

நிருவனத்தை மேலும் மேம்படுத்தி, வாடிக்கையாளர்களின் சரிபார்க்கப்பட்ட இ-மெயில் ஐடி-யை தரும் வகையிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வடிவமைப்பு, கோடிங், மார்கெடிங் முதலிய பணிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். அதற்காக வருங்காலத்தில் பணியாட்களை பணியமர்த்தும் திட்டமும் கொண்டுள்ளனர்.

வெற்றி வார்த்தைகள்

இத்தனை உறுதியோடும் ஊக்கத்தோடும் எங்கள் நிறுவனம் இயங்க எங்கள் பள்ளி, கல்லூரி சீனியர்கள் முக்கிய காரணமாவார்கள். அதே சமயம் தொழில்முனைவில் குடும்பத்தின் துணை இன்றியமையாதது ஆகும்.

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உடன் அஸ்வின்-அருண்
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உடன் அஸ்வின்-அருண்

அஸ்வினுக்கு அவரது முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, கிரிஷ் மாத்ருபூதம் அவர்களும், அருணுக்கு தொழில்முனைவோரான அவரது தந்தையும் தொழில் முன்மாதிரிகள் என்றனர். தமிழ்நாட்டில் பிறந்து இன்று உலங்கெங்கும் புகழ்சேர்த்து கொண்டிருக்கும் 'ஜோஹோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு எங்கள் ஹீரோ என்றனர். சமீபத்தில் அவரைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசியது கனவு நனவாகியது போல் இருந்தது என்றார், அஸ்வின்.

எங்கள் முயற்சியில் நல்வழி கண்டதன் முக்கியக் காரணம், நிறுவன செலவை கட்டுப்படுத்த எளிதான புது வழிகளை கண்டறிய தொடங்கியது தான். அது எங்களுக்கு வெற்றிக்கான வழியைக் காட்டியது. நிதி இல்லை என்று துவண்டு போகாமல், அச்சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தொழில்முனைவோர் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், என்றனர் இருவரும்.

இறுதியாக,

நிதி அல்லது முதலீடு பெறுவது மட்டுமே ஒரு நிறுவனத்தின் சாதனை ஆகிவிடாது; சொந்த முயற்சியில் சிறிதளவு வருமானம் அல்லது இலாபம் கண்டாலும் அது வெற்றி தான். சொந்த முயற்சியில் நிறுவனத்தை நிலைநாட்டுவதும் சாத்தியமே! என்று இருவரும் உத்வேகத்துடன் கூறினர்.   

இணையதள முகவரி: Deducely

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan