ஞாபகத்தை இழந்தாலும் தன் நம்பிக்கையை இழக்காத டிசைனர் வின்சி ராஜ்.
வேலையை நேசிப்பவர்கள் தான் எந்நேரத்திலும் எந்த சூழ்நிலைகளிலும் தனது வேலையை சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். தனக்கு பிடித்த கிரியேடிவ் டிசைனிங் வேலையை, தொழிலாய் எடுத்ததால் தான் என்னவோ; விபத்தால் ஞாபக மறதி ஏற்பட்ட பிறகும் கபாலி பட போஸ்டரை அற்புதமாய் வடிவமைத்து உலகப் புகழ் பெற்றார் டிசைனர் வின்சி ராஜ்.
கபாலியை தொடர்ந்து ரஜினிகாந்தின் ’காலா’ பட போஸ்டரை வடிவமைத்து தற்போது அதிகமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறார். சென்னையைச் சேர்ந்த வின்சி ராஜ் பி.சி.ஏ படிப்பை முடித்தவிட்டு எம்.பி.ஏ முடித்தார். ஆனால் வின்சிக்கு கிரியேடிவ் தொழிலில் ஈடுபடவே அதிக ஆர்வம் இருந்தது. அதனால் தன் கனவை தொடர லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பை மேற் கொண்டார்.
மேல் படிப்பை முடித்த பிறகு பல விளம்பர நிறுவனங்களுடன் பணி புரிந்து, கலை இயக்குனராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமின்றி பல விளம்பரப் படங்கள் இயக்கி பல விருதுகளை பெற்றுள்ளார், இதில் 2010-ல் இவர் பெற்ற மதிப்புக்குரிய “கென்னஸ் விருது” அடங்கும்.
“விளம்பர படத்திற்கு வேலை செய்வதே எனக்கு பிடித்த ஒன்று, விளம்பரம் மூலம் சமூகத்துக்கு தேவையான பல பிரிச்சனைகளை பேச முடியும். இது உலகளவில் பல மக்களை சென்றடையும்,”
என்கிறார் சமூக அக்கறையுடன் வின்சிராஜ்.
அதன் பின் பட வாய்ப்புகள் கிடைத்து. ’அட்டக்கத்தி’ படத்திற்கு போஸ்டர் வடிவமைத்தார். இதனை தொடர்ந்து ’சூது கவ்வும்’ போன்ற பல படங்களுக்கு வடிவமைத்துள்ளார்.
இது அனைத்தும் வின்சி ராஜின் முதல் பாதியே. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் தன் ஞாபகம் முழுவதையும் இழந்தார் வின்சிராஜ். ஆனால் அதே சமயத்தில் அவரின் வாழ்க்கையை மாற்றப்போகும் வாய்ப்பும் வீடு தேடி வந்தது. அதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவந்த ’கபாலி’ திரைப்பட போஸ்டர் டிசைன் வாய்ப்பு. தன் மனைவியை மட்டுமே வின்சிக்கு ஞாபகம் இருந்த நிலையில், டிசைனிங் பற்றிய அத்தனையையும் மறந்த அவர் கபாலி வாய்ப்பை வேறு வழியின்றி மறுத்தார். ஆனால் சில சூழ்நிலைகளாலும், கபாலி திரைப்பட இயக்குனர் ரஞ்சித்தின் உந்துதலாலும் அந்த வாய்ப்பை ஏற்க முடிவெடுத்தார் வின்சிராஜ்.
“ஒரு மாதம் நேரம் கேட்டு மீண்டும் முதலிலிருந்து டிசைனிங்கை கற்றுக் கொண்டேன். அதன் பின்னரே கபாலி படத்தில் இணைந்தேன். நான் ஞாபகத்தை இழந்த போதிலும் என் நம்பிக்கையை எப்பொழுது இழந்ததில்லை,” என்கிறார்.
கபாலி படம் வின்சி ராஜின் இரண்டாவது பாதியின் துவக்கம். அனைவரும் துவண்டு போகும் இந்த சூழலில் தன்னம்பிக்கை மற்றும் டிசைனிங் துறையில் இருந்த பேரார்வம் காரணமாக தொடர்ந்து பணிபுரிந்தார்.
“இன்னமும் எனக்கு படிப்பதில் சிரமம் உள்ளது, ஆனால் இருப்பது ஒரு வாழ்க்கையே அதை நாம் இறுதிவரை வாழவேண்டும். சில சரிவுகள் வாழ்க்கையில் இருந்தாலும் நமக்கு எது சந்தோஷம் என அறிந்து நாம் அதை நோக்கி செல்ல வேண்டும்,”என்கிறார்.
அனைத்தையும் முதலில் இருந்து கற்று கபாலியில் கலக்கிய வின்சி ராஜ் தற்பொழுது ’காலா’ படத்திற்கும் போஸ்டர்கள் வடிவமைத்துள்ளார்.
“மீண்டும் ரஜினி சாருடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது; என் பொறுப்பு இன்னும் அதிகமாயிற்று. அதிக அழுத்தம் இருந்தாலும் காலா படத்தில் வேலை செய்தது எனக்குக் கிடைத்த மிக பெரிய வாய்ப்பு.”
“இன்று நான் பல சிக்கல்களில் இருந்து மீண்டு எழுந்துள்ளேன், இன்னும் எனக்கு சிலவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள சிரமாமாக உள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் கற்று என் வாழ்க்கைக்கு மறு வாய்ப்பை நானே கொடுக்கிறேன். நான் எப்போழுதுமே மகிழ்ச்சியாய் இருக்கவே விரும்புவன்,” என்று நம்பிக்கையுடன் விடைப் பெற்றார் வின்சி ராஜ்.
Related Stories
Stories by Mahmoodha Nowshin
August 03, 2017
August 03, 2017
August 03, 2017
August 03, 2017