கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இசை மூலம் உதவும் 'சம்பூர்ணா'

0

கவிதா, கணேஷ் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து உருவாக்கிய கிலிகிலி அறக்கட்டளையின் ஒரு பகுதியாக சம்பூர்ணா அமைந்துள்ளது. கிலிகிலி (கன்னட மொழியில் குழந்தையின் சிரிப்பொலி என அர்த்தம்) பெங்களூருவில் உள்ள பூங்காக்கள் அனைத்து குழந்தைகளும் அணுக கூடியதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் மாநகராட்சியின் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பூங்காக்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அணுக கூடியதாக அமைந்துள்ளன.

கவிதா கிருஷ்ணமூர்த்தி
கவிதா கிருஷ்ணமூர்த்தி

கிலிகிலியின் புதிய முயற்சி-சம்பூர்ணா

கவிதா மற்றும் கணேஷ் தம்பதியின் மகன் ஆனந்த், ஆட்டிச குறைபாட்டுடன் பிறந்தார். 3 வயது வரை பேசாத மற்றும் பொம்மைகளில் ஆர்வம் காட்டாத குழந்தையாக இருந்த ஆனந்த் இசையில் ஆர்வம் காட்டினார். முதலில் தனக்கு பிடித்த வரிகளை முணுமுணுக்கத்துவங்கியவர் பேச்சு வந்ததும் அவற்றை பாடத்துவங்கினார். 'ஒரே தன்மை கொண்ட பாடல்களை கண்டுகொள்ளத்துவங்கியவர், ஒரே ராகத்த்தை சேர்ந்த பாடல்களையும் அடையாளம் காணும் திறன் பெற்றார். இப்போது 13 வயதாகும் ஆனந்த் சென்னையில் படித்தபடி கர்நாடக இசை பயில்கிறார்.

ஆனந்த் இசையில் ஆர்வம் காண்பித்து, அதை தனது அடையாளமாக ஏற்கத்துவங்கியதும் கவிதா மற்றும் கணேஷ் இவைரப்போன்ற மற்ற குழந்தைகளுக்கும் உதவ தீர்மானித்தனர். ஆட்டிசம் எனப்படும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக கிலிகிலி அறக்கட்டளையின் கீழ், 2013 ம் அண்டு சம்பூர்ணா துவக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை சென்றடைய இசை சிகிச்சையை சம்பூர்ணா பயன்படுத்தி வருகிறது. சம்பூர்ணாவில், குழந்தைகளுக்கு உதவ இசை சிகிச்சை அளிப்பவர், இசை கலைஞர் மற்றும் பாடகர்கள் இருக்கின்றனர். 4 முதல் 14 வயது வரையான குழந்தைகள் பள்ளி முடிந்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வகுப்பில் பங்கேற்கின்றனர்.

எஸ்.ஏ.பி லேப்ஸ் அமைப்பு 2012 ல், நிதி திரட்டும் மற்றும் சரியான திட்டத்தை கண்டறியும் நோக்கத்துடன் இந்தியா இன்குலுஷன் சம்மிட் நடத்தியது துவக்கமாக அமைந்தது. "அவர்கள் நிதி திரட்டி, சம்பூர்ணாவை துவக்குவதற்கான செலவை ஏற்கத்தயாராக இருப்பதாக கூறியது இந்த அமைப்பை துவங்க உதவியாக இருந்தது என்கிறார் கவிதா.

சம்பூர்ணா அளிக்கும் இசை சிகிச்சை

கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான வளர்ச்சி இலக்கை கொண்டதாக சம்பூர்ணாவின் இலக்குகள அமைந்துள்ளன. கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இசை மூலமான சிகிச்சை உதவியாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கற்றல் குறைபாடு கொண்டவர்களுக்கு இசை சிகிச்சை அளிப்பதன் மூலம் வேறு பல பலன்களும் உண்டாகின்றன. அவர்கள் உரையாடலுக்கு பதில் அளிப்பதுடன், கவலையின் அளவும் குறைகின்றன.

இணைப்பு பாலம்

இந்த மையத்திற்கு வருகை தரும் குழந்தைகள் இசைக்கு நல்லவிதமாக எதிர்வினை செய்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். "யாருக்குமே அடுத்து என்ன செய்வது என்று தெரிவதில்லை. இங்கு வகுப்பில் இசை தொடர்பாக ஏதோ நடப்பதை பார்த்து குழந்தைகளை சேர்க்க முன்வருகின்றனர். வகுப்பில் சேருவதற்கு முன் குழந்தைகளுக்கு இசையில் அதிக பரிட்சயம் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம்” என்கிறார் கவிதா. ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான இசை அறிமுகம் செய்யப்பட்டு அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என கண்டறியப்படுகிறது.

தகவல் தொடர்பு

குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவுடன் அடுத்த கட்ட தொடர்பை நோக்கி முன்னேறுகின்றனர். கற்றல் குறைபாடு கொண்ட குழந்தையை தொடர்பு கொள்ள வைப்பது தான் மிகவும் முக்கியமானது. "இசையின் மூலமான உத்வேகம் வலுவாக இருப்பதால், மற்ற சிகிச்சை முறையில் காண முடியாத வகையில் அவர்கள் தொடர்பு கொள்ளத் துவங்குகின்றனர்” என்கிறார் அவர். பேச முடியாத குழந்தைகள் கூட தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வழிகளை கண்டு கொள்கின்றனர் என்கிறார் அவர். "குழந்தை டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார் என பாட விரும்பினால், சிகிச்சையாளர் இந்த பாடலை பாடத்துவங்கியதுமே குழந்தை அதற்கேற்ப சைகை செய்கிறது.

பேச்சு, சைகை, பார்வை, சுட்டிக்காட்டுவது, ஒரு பாடலின் மீது கவனம் அல்லது குழந்தையின் கவனத்தை ஈர்க்கும் இசைக்கருவி என எல்லாவகையான தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம். பேசக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளை இந்தக்குழு வார்த்தைகள் மூலம் கேட்க பயிற்சி அளித்து தொடர்ந்து வாசகங்களை பேசி முடிக்க கற்றுத்தருகிறது.

மாற்றம்

கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள் விநோதமான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கலாம். "உதாரணமாக குழந்தை கையில் எதையாவது வைத்து அடித்துக்கொள்ளும் வழக்கம் கொண்டிருக்கலாம். இந்த பழக்கத்தை இசைக்கருவி வாசிக்கும் வகையில் பழக்குகிறோம்” என்கிறார் கவிதா. இந்த செயலியில் தான் முழு அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றும் இதை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொல்கிறார்.

சமூக பண்புகள்

குழந்தைகளுக்கு வாரம் இரண்டு வகுப்புகள் உண்டு. ஒன்று தனிப்பட்ட வகுப்பு, இரண்டாவது மற்றவர்களுடன் குழுவாக செயல்படுவது. ஒரு பாடல் முடிந்ததும் கைத்தட்டுவது போன்ற சமூக குறிப்புகளை புரிந்து கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. எல்லாமே இசை சார்ந்து இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு எப்படி பார்வையாளர்களாக இருப்பது என்று தெரிவதில்லை. எனவே இந்தக்குழு இசை மூலம் குழந்தைகளுக்கு புரிய வைக்கிறது. அவர்கள் பாடும் முறை வரும் போது மட்டும் கேட்கும் முறையை புரிய வைக்கின்றனர்.

இசை வழியில்

இந்த பயிற்சியில் குழந்தை முழுமையாக ஈடுபாடு காட்டத்துவங்கும் போது, இதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகலாம், குழுவிற்கு குழந்தையின் ஆர்வம் மற்றும் புரிதல் பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கிறது. இதன் பிறகு குழந்தைகள் இசைக்கருவியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. இந்த இசைக்கருவியை கற்றுத்தரும் நபர் இல்லாவிட்டால், அதை கற்றுக்கொள்வதற்கான வகுப்பு பரிந்துரை செய்யப்படுகிறது. சம்பூர்ணாவில் சேர்ந்த குழந்தைகள் கீபோர்ட், வாய்ப்பாட்டு, டிரம்ஸ் உள்ளிட்டவற்றை கற்று வருகின்றனர்.

கடந்த 2.5 ஆண்டுகளில் இந்த அமைப்பு 50-60 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. குறிப்பிட்ட காலத்தில் மையத்தில் 10-14 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர்.

சவால்கள்

இசை சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர்கள் போதுமான அளவு இல்லாமல் இருப்பதே பெரும் சவால் என்கிறார் கவிதா. பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இன்னொரு சவால் என்கிறார். "இசை வகுப்பில் சேரும் குழந்தை இசைக்கருவியை வாசிக்க அல்லது பாட கற்றுக்கொள்ளும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். நமக்கு இது தான் இலக்கு, ஆனால் குழந்தைகளுக்கு இது இலக்கே அல்ல. இதன் காரணமாக பெற்றோர் குழந்தைகளை விலக்கி கொள்ளலாம் அல்லது குழந்தையின் பழக்க வழக்கம் மாறும் வரை பொறுமை இல்லாமல் இருக்கலாம்” என்கிறார் அவர். நிதி உதவி முன்றாவது சவால். எஸ்.ஏ.பி அளித்த நிதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு உதவியது. ஆனால் செலவுகளுக்கு ஈடாக இல்லை. தொடர்ந்து செயல்படுவது சிக்கலாக இருக்கிறது என்கிறார் கவிதா. சம்பூர்ணாவில் சேர கட்டணம் செலுத்த வசதி இல்லாத குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் அளிக்க கிலிகிலி அறக்கட்டளை நிதி திரட்டி வருகிறது. இசைக்கருவிகளை மாற்ற அல்லது பழுது பார்க்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.” மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி, மேலும் அதிக பெற்றோர் மற்றும் குழந்தைகளை சென்றடைய விரும்புகிறோம்” என்கிறார் கவிதா.