பள்ளி ப்ராஜெக்டிற்காக சகோதரர்கள் உருவாக்கிய தேசிய விருதுகள் அள்ளிய குப்பை சேகரிக்கும் இயந்திரம்!

0

ஒரு பேருந்து நிறுத்தத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குப்பைகளை சேகரிப்பதைக் கண்டு வேதனையடைந்தனர் ராஜஸ்தானின் சிறிய நகரைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரர்கள். இதற்கு ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டறிந்தனர். 

திப்தான்சு மற்றும் முகுல் மால்வியா இருவரும் ராஜஸ்தானின் சிரோஹி பகுதியிலுள்ள செயிண்ட் பால் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். இவர்கள் துப்புரவு பணியாளர்கள், நகராட்சி நிறுவனங்கள், காலனி வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள், மற்ற பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பெரியளவில் உதவக்கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

சற்றும் சிந்திக்காமல் இங்கும் அங்கும் குப்பைகளை தூக்கி எறிவது எளிதான செயல். ஆனால் கீழே குனிந்து அவற்றை எடுப்பது கடினமான வேலை. இது எவ்வளவு கடினமானது என்பதைத்தான் இந்த இளம் சகோதரர்கள் பேருந்து நிலையத்தில் உணர்ந்தனர். திப்தான்சுவும், முகுலும் நடுத்தர வயதுடைய துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அட்டைகள், பேப்பர் துண்டுகள், பைகள், போன்றவற்றை சுத்தப்படுத்துவதைக் கண்டனர். அப்போதுதான் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய குப்பைகளை சேகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

பள்ளி ப்ராஜெக்டிற்காக உருவான இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை சாதனம் மோட்டாரில் இயங்கக்கூடியது. எளிதாக பயன்படுத்தக்கூடியது. பராமரிப்பதும் எளிது. சுழலும் அடிப்பாகத்துடன் இரண்டு நெகிழ்வான உருளக்கூடிய பொருள் இணைக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தி இயந்திரம் தரையிலிருக்கும் குப்பைகளை எடுத்து ஒரு தொட்டியில் சேகரிக்கும். 

”தரை மட்டத்திலிருந்து சில மில்லிமீட்டர் அளவு மேலே ப்ரஷ்கள் பொருத்தப்பட்டிப்பதால் தூசுகள் சேகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. வெளியிடங்களில் பார்ட்டிக்குப் பிறகும் தூக்கியெறியப்படும் பேப்பர் ப்ளேட்கள், நேப்கின்கள் போன்றவற்றை சேகரிக்க உகந்ததாகும்,”

என்று ’தி ட்ரிப்யூன் பேட்டியில் தெரிவித்தார் முகுல்.

முகுல் தற்போது பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். திப்தான்சு வருங்காலத்தில் இஸ்ரோவில் பணிபுரிய விரும்புகிறார். இவர்கள் கண்டுபிடித்த சாதனத்தின் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என்பதை அங்கீகரித்த நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் இவர்கள் இருவரும் இந்த மாதிரியை மேலும் சிறப்பாக வடிவமைக்க உதவினர். திப்தான்சு மற்றும் முகுலின் புதுமையான கண்டுபிடிப்பு IGNITE விருதை பெற்றுத்தந்தது. 

அத்துடன் 2015-ம் ஆண்டு புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்கு இருவரும் வாய்ப்பு கிடைத்தது.

2017-ம் ஆண்டு நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷனிடமிருந்து தேசிய விருது பெற்றனர். இவர்கள் நிலையாக செயல்படவும், பணமாக்கவும், ஆரம்ப நிலையில் இருக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை வாங்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்தவர்களை சென்றடையவும் தேவையான ஆதரவை இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பு வழங்குகிறது.

கட்டுரை : Think Change India