சேலம் மாவட்டத்துக்கு கிடைத்துள்ள முதல் பெண் கலெக்டர்!

0

ரோஹிணி பாஜிபக்ரே; சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியுள்ள முதல் பெண்மணி. 1790-ம் ஆண்டு முதல் இதுவரை 170 ஆட்சியர்கள் இருந்தும் பெண் கலெக்டர் அம்மாவட்டத்தில் இருந்ததில்லை. 

கலெக்டர் ஆன ரோஹிணி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினார். அதோடு மோஹன் குமாரமங்களம் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் சென்று அங்கு பணிகளை பார்வையிட்டார்.

இதற்கு முன்பு, ரோஹிணி மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி அமைப்பின் ப்ராஜக்ட் அதிகாரியாகவும். கூடுதல் கலெக்டராகவும் பணிபுரிந்தார். 32 வயதாகும் அவர், ஐபிஎஸ் விஜயேந்திர பிடாரி என்பவரை மணந்துள்ளார். 

தி நியூஸ் மினிட் பேட்டியில் பேசிய ரோஹிணி, தான் ஐஏஎஸ் தேர்வுக்காக எந்த ஒரு தனியார் பயிற்சி மையத்திலும் சேரவில்லை என்றும் தானே முழுதும் படித்து பாஸ் செய்ததாக கூறினார்.

“நான் அரசுப் பள்ளியில் படித்தேன். பின் அரசுக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றேன். என் அனுபவத்தில் அரசுப் பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் உள்ளனர் என்பேன், ஆனால் போதிய வசதிகள் மட்டுமே குறைபாடாக உள்ளது என்று உணர்கிறேன். இது சம்மந்தமாக நான் சேலத்தில் சில நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன்,” என்றார்.

தி ஹிந்து செய்திகளின் படி, ரோஹிணி சேலத்தில் போர்ட் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்று அங்குள்ள வசதிகளை மேற்பார்வையிட்டார். மேலும் தண்ணீர் டேன்க் மற்றும் இதர வசதிகளையும் பார்வையிட்டார். தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள மாவட்ட அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதேப்போல் சேலம் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் இருக்க மருத்துவ வசதிகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

கலெக்டர் பொறுப்பு ஏற்ற தருணத்தில் இருந்து ஒரு வினாடியையும் விட்டுவைக்காமல் தன் பணிகளில் தீவிரமாக செயல்படுகிறார் ரோஹிணி. வாரம் ஒருமுறை குறைக்கேட்கும் சந்திப்பு மற்றும் இதுவரை 362 மனுக்களை மக்களிடம் இருந்து பெற்றுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக தனியாக நேரம் ஒதுக்கி, அவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். தன் தந்தையைப் பற்றி பேசிய ரோஹிணி,

“அவரிடம் நான் கலெக்ட்டர் ஆகவேண்டும் என்று முதலில் சொன்னபோது அவர் எனக்கு கொடுத்த அறிவுரை; மக்கள் பிரச்சனையே முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதே ஆகும். அதைத்தான் நான் இப்போது செய்கிறேன்,” என்றார். 

கட்டுரை: Think Change India