“சோப்பு சுந்த(ரி)ரம், எரினின் சுத்தத்தை நோக்கிய புரட்சி”

0

இந்தியாவில் ஏழு கோடிப் பேர் சோப்பை பயன்படுத்துவதில்லை என்கிறது யுனிலீவரின் சமீபத்திய புள்ளிவிபரம். இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவில் ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் இறக்கிறது (அல்லது நம்மால் தடுத்து விடக் கூடிய சுகாதாரக் கேடு காரணமாக நோய் வந்து இறக்கிறது). இதைத் தடுக்க வேண்டியது அத்தியாவசியம். அதற்காகத்தான் நான் இந்தப் பணியை மேற்கொண்டேன் – எரின் ஸாய்கிஸ், 'சுந்தரா' (Sundara) நிறுவனர்.

யோசனை பளிச்சிட்டது

சோப்பு என்றால் என்ன? தாய்லாந்தின் சேரிப்பகுதியில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் எரின் ஸாய்க்கிடம் கேட்ட கேள்வி இது. இந்த இளம் அமெரிக்கர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்ததும் தாய்லாந்துக்குச் சென்றார். குழந்தைக் கடத்தலைத் தடுக்கும் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவன பணிக்காக அவரங்கு சென்றார். தாய்லாந்தில் ஒரு சின்ன கிராமத்தில் ஒரு பள்ளிக்குச் சென்றார் அவர். சூடானின் லைட் பல்ப் இயக்கம் (lightbulb movement) போல, அப்போதுதான் அவருக்கு ஒரு புதிய யோசனை பளிச்சிட்டது. பாத்ரூம் சென்ற அவர் கை கழுவ சோப்பைத் தேடினார். சோப்பு இல்லை. அது மட்டுமல்ல. அங்கு யாருக்குமே அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. பக்கத்து நகரத்துக்குச் சென்று சோப்பு வாங்கிக் கொண்டு திரும்பினார் எரின். “அங்கிருந்தவர்கள் நான் வாங்கி வந்த பார்சலைத் திறந்து சோப்பை வெளியே எடுத்து அதை நகத்தால் சுரண்டிப் பார்த்தனர். ஒருசிலர் அதை முகர்ந்து பார்த்தனர். ஆனால் யாருக்குமே அதை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.” அந்தச் சம்பவத்தை ஆச்சரியத்துடன் நினைவு கூறுகிறார் எரின்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு என் வாழ்க்கையை இந்தப் பிரச்சனைக்காவே அர்ப்பணித்து விட வேண்டும் என்றும் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் முடிவு செய்தேன். நிறையப் பேர் தண்ணீரைப் பற்றிப் பேசுகிறார்கள் – அது சரிதான். ஆனால் சோப்பைப் பற்றியோ சுகாதாரக் கல்வி பற்றியோ அவர்களுக்குத் தெரியவில்லையே? இது அரைகுறையானது” என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார் எரின்.

என் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?

எரின் எப்போதுமே சமூகப் பிரச்சனைகளுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். “ நான் ஒரு ஆவணப்படத்தைப் பார்த்தால், அந்தப் படத்தோடு ஒன்றி விடுவதும், உடனடியாக அந்தப் படத்தில் காட்டப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் நினைக்கக் கூடியவள்” என்கிறார் எரின். “நாம் வெவ்வேறு தேசம், மொழி அல்லது மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவரும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம்” என்பது எரினின் கருத்து. இந்தத் துறையில் அவரது ஆரம்பம், சோப்பு இல்லை. அவர் பணியாற்றியது குழந்தை கடத்தல் தடுப்பு அமைப்பில். அந்த வேலை நிறைவாகத்தான் இருந்தது ஆனால் வேலைபலு அதிகம், சக்தி அத்தனையும் உறிஞ்சி விடுகிறது.

என்னிடம் வரும் அம்மாக்கள், ”எனது குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதற்கு உனக்கு என்ன தைரியம்? நீ ஒருபோதும் உனது புருஷனிடம் அடி வாங்கி இருக்கமாட்டாய், ஒரு மூன்று நாள் தொடர்ந்து பட்டினி இருந்திருக்க மாட்டாய்” என்பார்கள். எனக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் சரிதான் நான் ஒருபோதும் அவர்கள் சொன்னதைப் போல அனுபவத்ததில்லைதான். என்னுடைய கருத்தை அவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும். இதுதான் நான் அந்தத் துறையை விட்டு வெளியேறியதற்கான மிகப் பெரிய காரணம். என்னைச் சூழ்ந்த இந்தக் குழப்பத்தால், அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என நினைத்தேன்.

இதற்கு நேர் மாறாக, சோப்பின் எளிமையும் கையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமும் எரினைக் கவர்ந்தன. மற்றொரு விஷயம் சோப்பை எதிர்ப்பவர்கள், “அவர்கள்தான் என்னை இங்கு இழுத்து வந்தனர். அனைவருமே சோப்பைப் பயன்படுத்தத் தகுதியானவர்கள் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்வோம். சோப்பு அந்தஸ்தைக் கொடுக்கிறது. சுத்தமாக இருப்பதற்கான ஒரு உரிமை அது. 2015ல் இந்தியாவில் அடிப்படையான மருந்துகள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் – இன்னும் சொல்லப்போனால் ஒருவர் கூட - தவிக்கக் கூடாது. குழந்தை மரணம் தடுக்கப்பட வேண்டும். அத்தனை குழந்தைகளும் ஆரோக்கியமாகப் பெரியவர்களாக வேண்டும் என்பதையாவது உறுதி செய்ய வேண்டும். இது ஒன்றும் வெள்ளைக்காரர்களின் கருத்தோ அல்லது இந்தியக் கருத்தோ அல்ல. ஒரு சர்வதேசக் கருத்து.” என்கிறார் எரின்.

சோப்பை மறு சுழற்சி செய்யும் வேலைக்கு எரினை இழுத்து வந்த மற்றொரு காரணம், சோப்புக் கழிவுகள் எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுவது தான். அவை ஏற்படுத்தும் கேடுகளுடன் போராட வேண்டியிருக்கிறது. முதலில் ஓட்டல் கழிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு அரைகுறையாகப் பயன்படுத்தப்பட்ட சுமார் நூறு கோடி சோப்புக் கட்டிகள் தூக்கி எறியப்படுகின்றன. நிலத்தில் கொட்டப்படுகின்றன. இந்திய நிலங்களில் பல இடங்களில் ஊற்றுக் கண் அடைத்துப் போயிருக்கிறது. எனவே சோப்புக் கழிவுகளை அகற்றுவது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும். மேலும் இந்தப் பணியில் சமூகத்தில் உரிய அங்கீகாரம் தரப்படாத சேரிப் பெண்களை அழைத்து வந்து ஒரு நியாயமான சம்பளத்தில் கவுரவமான வேலையை கொடுத்தோம்.

அவர்களை சுகாதாரத் தூதுவர்களாகவும், தலைவர்களாகவும் வளர்தெடுக்க, பொது இடங்களில் பேசுவது, தலைமைப் பண்பு போன்றவற்றில் பயிற்சி அளித்தோம். எல்லோரையும் போல சாதாரண நபர், ஒருவருக்கு சுகாதாரக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது மிக சிறந்தது என்பது என் கருத்து. அப்படிப்பட்டவர்கள் சுகாதாரக் கல்வியைக் கற்றுக் கொண்டால், அவர்களது அனுபவங்களை சாதாரண மக்களின் மொழியில் அவர்களால் விளக்க முடியும். நகரங்களின் குடிசை மற்றும் சேரிப் பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கும், பழங்குடியினர் மத்தியிலும் சுகாதாரக் கல்வியும், சோப்பும் வழங்குவதுதான் எங்களின் மிகப் பெரிய பணி. சுகாதாரக் கல்வியோடு சோப்பையும் கையில் கொடுத்து விடுகிறோம். அதனால் அங்குள்ள குழந்தைகள், ஆரோக்கியப் பழக்க வழக்கங்களோடு பெரியவர்களாக வளர்கின்றனர். சரியாகச் சொன்னால் அவர்கள் சுகாதாரத்தை கையோடு கொண்டு செல்கின்றனர்.

ஒரு ‘அழகு’ கதை

'சுந்தரம்' என்றால் சமஸ்கிருதத்தில் அழகு என்று பொருள். அதனால்தான் எரின் தனது நிறுவனத்திற்கு ‘சுந்தரா’ என்ற பெயரை வைத்தார். “ சுந்தரத்தை நான் கண்டு பிடித்த போது நான் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தேன். என் வயதை ஒத்த பெரும்பாலான பெண்களைப் போலவே அப்போதெல்லாம் எது அழகு என்ற போராட்டத்தில்தான் நானும் இருந்தேன். தாய்லாந்தில் இருந்து அப்போதுதான் நியூயார்க் வந்திருந்தேன். அந்த நேரத்தில் என் தோழிகள் இன்ஸ்ட்ராகிராமில் அழகான ஆடைகளுடன் வலம் வரும் அழகான பெண்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த அழகுப் பெண்களுக்கு ஏகப்பட்ட பின்தொடர்வோர் (followers) இருப்பார்கள். அந்தப் பெண்களைப் போல தாங்களும் எப்படி அழகாவது என்பதைப் பற்றித்தான் என் தோழிகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதுதான் உண்மையான அழகா என்று எனக்குத் தோன்றியது. அந்தக் கணத்தில் நான் சோர்வாக உணர்ந்தேன். ஒல்லியாக பார்ப்பதற்கு குறையில்லாமல் இருப்பதும், அதைப் படமெடுத்துக் காட்டுவதும்தான் உண்மையான அழகா? என்று நினைத்தேன். அப்போதுதான் என் வாழ்க்கையிலேயே அழகான மக்களை கிராமத்தில் பார்த்து விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பின்தொடர்வோர் எல்லாம் இல்லை. இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பெற்ற அங்கீகாரத்தில் ஒரு பகுதி கூட அவர்களுக்கு இல்லை. சுயநலமில்லாத, நல்ல எதிர்காலத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற, தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தியாகம் செய்து கொண்டிருக்கிற மக்கள் அவர்கள். அவர்களைப் பற்றித்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

என் பங்குக்கு உரையாடலை மாற்ற விரும்பினேன். அந்தப் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். உண்மையான அழகு உள்ளத்தில்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வது, ஒரு நல்ல எதிர்காலத்திற்காக போராடுவது போன்றவைதான் அழகு. சுந்தரா அமைப்பில் உள்ள எங்கள் கல்வியாளர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்குள் இருக்கும் அற்புதமான அழகைப் பற்றிச் சொல்லத்தான் நான் விரும்பினேன்” என்கிறார் எரின். 2013ல் இந்தச் சிந்தனையில்தான் சுந்தரா பிறந்தது.

முழுமையான வெற்றி

சுந்தராவின் பணித் திட்டத்தில் உள்ள எளிமைதான் அதன் வசீகரம். “ மும்பையில் உள்ள 12க்கும் மேற்பட்ட சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டல்களில் இருந்து, பெண்கள் அழகு சாதனக் கடைகள் வரையில் தூக்கி ஏரியும் அரைகுறை சோப்புகளை நாங்கள் சேகரித்தோம். அந்த சோப்புக் கழிவுகளை மும்பை புறநகரில் உள்ள ‘கால்வா’ என்ற பகுதிக்கு கொண்டு வருவோம். அங்குதான் அந்த சோப்புகளுக்கு சுத்திகரிப்பு நடக்கும். அந்த வேலைக்கென்றே உள்ளூர் பெண்களை பயிற்றுவித்தோம். பயன்படுத்தப்பட்ட சோப்பின் மேல் தோலை உரித்து விட்டு, குறிப்பிட்ட பசைப் பொருளுடன் சேர்த்து அரைத்து, உரிய அச்சில் ஊற்றி, புதிய சோப்பை அவர்கள் தயாரிக்கின்றனர். இந்த தயாரிப்பு ஏழே நிமிடத்தில் முடிந்து விடும். இங்கு தயாராகும் சோப்புகள் மாதம் ஒன்றிற்கு 30 பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதுதவிர அவர்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து பெரியவர்களுக்கும் சுகாதாரக் கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

சுந்தரா, விற்பனைப் புள்ளியில் (USP) உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு அதன் எளிமை மட்டும் காரணமில்லை. நிலத்தில் கொட்டப்படும் கழிவுகளைக் குறைப்பதன் மூலம் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கிறது. ஹோட்டல்களில் சோப்புக் கழிவுகளை அகற்றுவதன் மூலம், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அவற்றையும் பங்கெடுக்கச் செய்கிறது. நியாயமான ஊதியத்தில் கவுரவமான வேலை மூலம் பெண்களுக்கும் இலவச சோப்பு மற்றும் சுகாதாரக் கல்வியின் மூலம் சமூகத்திற்கும் நன்மை செய்கிறது சுந்தரா. எங்கள் பணி சின்னதாக இருக்கலாம். ஆனால் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்று நான் நினைக்கிறேன். 

"திருமணம் செய்துகொள்"

இந்தியாவில் பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்புப் பிரச்சனை உண்டு. அதுவும் எரின் போன்ற ஒரு அழகான அமெரிக்கப் பெண்ணுக்குக் கேட்கவே வேண்டாம். ஆனால் மும்பையை சுற்றி வரும் அவர் என்னவோ பாதுகாப்பாகத்தான் இருக்கிறார். அன்றாடம் அவர் பல அரசு அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது அவரது சமூக மதிப்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. “ஆண்களுடன் ஏதேனும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேச வேண்டியிருக்கும் போது, சீரியசாகப் பேசுவதைப் போல பேசுவேன். இது ஒரு வகைப் பாதுகாப்பு. கூட்டம் நல்லபடியாக முடிந்துவிடும். அவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி அக்கறையோடு அறிவுறுத்துவார்கள். அவர்கள் சொல்வதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.” என்கிறார் சிரித்து கொண்டே அவர்.

சுந்தரா நிறுவனத்திற்கு நன்கொடைகள் மூலம் நிதி உதவி கிடைக்கிறது. “ஒரு சில பெரு நிறுவனங்கள் எங்களுக்கு நன்கொடை கொடுக்கின்றனர். லிங்க்ட்இன் (LinkedIn) வலைத்தளம் நடத்திய சமூகம் சார்ந்த தொழில் முனைவருக்கான போட்டி ஒன்றில் எங்கள் நிறுவனம் வெற்றி பெற்றது.” என்கிறார் எரின். தற்போது அவர் பணியாளர்களை அதிகரிப்பது, ஹோட்டல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய பணிகளில் தீவிரமாக இருக்கிறார். எரின் தன்னை ஒரு முதலாளி என்று அழைப்பதை ரசிப்பதில்லை. தான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பிரச்சனைகளோடும் அதற்கான தீர்வுகளோடும் வாழும் பலரில் தானும் ஒருவர் என்கிறார் எரின். “கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில தவறுகள், பிறகு அதற்கான தீர்வு என்றுதான் கடந்து போகின்றன. தீர்வு கண்டதற்குப் பிறகு எங்கள் பணிகள் சுலபமாகி விடுகின்றன. சுகாதார விஷயத்தில் நாங்கள் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டிய அம்சம் என்ன என்று எங்களால் கண்டறிய முடிகிறது. ஆனால் இவை எல்லாவற்றையுமே பணியாளர்கள் இல்லாமல் நான் மட்டுமே செய்ய முடியாது. சரியானவர்களைப் பணியமர்த்துவது குறித்து நான் தெரிந்து வைத்திருக்கிறேன் அவ்வளவுதான்” என்கிறார் எரின் தன்னைப்பற்றி.

ஸ்லம் டாக் மில்லியனரும், வெள்ளை ரட்சகர் மனோபாவமும்

எரினுக்கு ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எரின் இந்தப் பணிகளை மேற்கொண்டதன் பின்னணியில் அந்தத் தாக்கம் இருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு, அந்தப் படம் இந்தியாவின் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம் என்ற வருத்தம் உள்ளது. ஆனால் எரினைப் பொருத்தவரையில் அதுதான் தனது கண்ணைத் திறந்தது என்கிறார்.

“ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை இந்தியர்களில் பலர் விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். அந்தப் படம் தங்களது நாட்டை இழிவுபடுத்தி விட்டது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் எனக்கு அதுதான் கண்ணைத் திறந்தது. மற்ற நாடுகளில் உள்ள பிரச்சனைகளை அளவிட்டுப் பார்ப்பற்கு அதுதான் தூண்டியது. ஏனெனில் என்னைப் போல பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு உண்மையான வறுமை எப்படி இருக்கும் என்றே தெரியாது. என்னை நானே பின்னோக்கிப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு எட்டு வருடம் செலவழித்து லத்தீன் படித்தால் என்ன? இணைகரம்(parallelogram) என்றால் என்ன என்று படித்தால் என்ன? வரிகள் பற்றியும் நான் ஒரு தொழில் தொடங்குவது எப்படி என்பது பற்றியும் ஏன் எனக்கு யாராவது சொல்லித்தரக் கூடாது? மேற்கு சூடானில் உள்ள தர்ஃபர் (Darfur) ஏன் பிரச்சனையில் இருக்கிறது? என்று இப்படிப் பலவாறாக நான் யோசிப்பேன்.. எனவே எனது விருப்பம் இதுதான். கல்வி மூலம்தான் நமது கண்கள் திறக்குமே ஒழிய ஹாலிவுட் படங்கள் மூலம் அல்ல. இது மாற வேண்டியிருக்கிறது” என்கிறார் எரின்.

ஒரு படத்தைப் பார்த்து உலத்தைக் காப்பாற்றும் கற்பனை மிகையானதுதான். நாம்தான் உயர்ந்தவர்கள், அனைவரையும் ரட்சிக்க வந்தவர்கள் என்ற ‘வெள்ளை ரட்சகர் மனோபாவம்’ பற்றி எரின் மீதும் விமர்சனங்கள் வந்தன. ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. வெள்ளை ரட்சகர் மனோபாவத்தை தான் வெறுப்பதாக கூறுகிறார் எரின். தனது நிறுவனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், தான் ஒன்றும் கதாநாயகி அல்ல என்கிறார் அவர். “நான் வெறுமனே பணம் தருகிறேன். நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி உண்மையான கதாநாயகிகள் அன்றாடம் இங்கே கஷ்டப்பட்டு பணியாற்றும் பெண்கள்தான். சுகாதாரக் கல்வி என்பது மிகவும் உணர்வுப் பூர்வமான ஒரு விஷயம். குறிப்பாக பருவம் வந்ததற்குப் பிறகு, சேரியில் இருக்கும் குழந்தைகளைப் பார்த்து விட்டு, அவர்கள் எல்லாம் அசுத்தமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மேட்டிமை மனோபாவத்தில் உள்ள வழக்கமான வெள்ளைக்காரப் பெண்ணாக தான் இருக்க விரும்பவில்லை” என்கிறார் எரின்.

அடுத்த ஆண்டிற்குள் மும்பையில் உள்ள 15ல் இருந்து 30 ஹோட்டல்களை தனது வாடிக்கையாளர் பட்டியலுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பது சுந்தராவின் திட்டம். மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சோப்பு மறு சுழற்சி பற்றிக் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை தேடிக் கொண்டிருக்கிறது சுந்தரா.

அறிவுரை

எரினை பொருத்தவரை, தன் மீதே தனக்கு சந்தேகம் வருவதுதான் ஒரு தொழில்முனைவர் கடக்க வேண்டிய மிகப்பெரிய தடை. உதவி கேட்கத் தயங்க வேண்டியதில்லை என்கிறார் அவர். அப்படி என்ன மோசமாக நடந்து விடும்? "யாரும் அதிகம் பயன்படுத்தாத பாதையில் போகிறவர்கள்தான் இந்த உலகிற்கு அதிகம் தேவை. அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருங்கள். அதில் உங்களுக்கு அதிக ஆர்வமிருந்தால், உங்களால் சாதிக்க முடியும்.” என்பது எரினின் வார்த்தைகள்.  

இணையதள முகவரி: http://sundarafund.org/