போட்டோஷாப் பிறந்த கதை தெரியுமா?

0

போட்டோஷாப் பிரபலமான மென்பொருள் தான். நீங்களும் போட்டோஷாப் பற்றி அறிந்திருக்கலாம். புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர் எனில் பலமுறை போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தியிருக்கலாம். நேரடியாக இந்த மென்பொருளை பயன்படுத்தாவிட்டாலும் கூட, போட்டோஷாப் மூலம் மெருகேற்றப்பட்ட படங்களை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பலமுறை பார்த்து ரசித்திருக்கலாம்.

புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் திருத்தவும், மெருகேற்றவும் இந்த மென்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொய்யான தோற்றத்தை தரும் புகைப்பட ஒட்டு வேலைகளும் கூட போட்டோஷாப் கைவண்ணம் தான்.

எல்லாம் சரி போட்டோஷாப் வரலாறு பற்றி உங்களுக்குத்தெரியுமா? 

அடைமொழியோடு அழைக்கப்படும் அரசியல் தலைவர் அல்லது நட்சத்திர நடிகர் போல, இந்த மென்பொருளும் எப்போதும் ’அடோப்’ போட்டோஷாப்' என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே, இது அடோப் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை எளிதாக யூகித்துவிடலாம். ஆனால், போட்டோஷாப் அடோப் நிறுவனத்திற்கு உரியதே தவிர அந்நிறுவனத்தால் உருவாக்கட்டதல்ல. அதனால் கையகப்படுத்தப்பட்டது.

போட்டோஷாப், அடோப் நிறுவனத்தால் வாங்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மென்பொருள் என்பது கூட பரவலாக அறியப்பட்ட தகவல் தான். ஆனால், இதன் பின்னே சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஒரு பழைய விளம்பரம் மூலம் பிரபல வலைப்பதிவான ’போயிங்போயிங்’, இந்த வரலாற்றை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பழைய பார்னேஸ்கேன் எனும் நிறுவனம் வெளியிட்ட பார்னேஸ்கேன் எக்ஸ்பி எனும் மென்பொருளுக்கான விளம்பரம் தான் அது.

இந்த விளம்பரத்திற்கும் போட்டோஷாப்பிற்கும் என்ன தொடர்பு என கேட்கலாம். இதில் குறிப்பிடப்படும் பார்னேஸ்கேன் எக்ஸ்பி தான் ஆதிகாலத்து போட்டோஷாப் என்பதே விஷயம். அதாவது போட்டோஷாப்பாக அறிமுகமாவதற்கு முன் இந்த மென்பொருள், பார்னேஸ்கேன் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்கேனருடன் செயல்படக்கூடிய மென்பொருளாக முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகே அது போட்டோஷாப்பாக மாறி அடோப் கைக்குச்சென்றது.

இது கொஞ்சம் புதிய தகவல் தான் என்பது மட்டும் அல்ல, மென்பொருள் உலகமும், அதன் வெற்றிக்கதைகளும் எத்தனை திருப்பங்களை கொண்டதாக இருக்கின்றன என்பதை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கிறது.

புகைப்பட திருத்தங்களை மேற்கொள்வதற்கான மிகப்பிரபலமான மென்பொருள் சேவையான போட்டோஷாப், ஜான் நோல் மற்றும் தாமஸ் நோல் எனும் சகோதரர்களால், 1980 களில் உருவாக்கப்பட்டது. இருவரும் அமெரிக்காவைச்சேர்ந்தவர்கள். அப்போது ஜான் நோல், இண்டஸ்டிரியல் லைட் அண்ட் மேஜிக் எனும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஸ்டார் வார்ஸ் பட வரிசையை உருவாக்கிய ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் லூகாசுக்கு சொந்தமான லூகாஸ் பிலிமின், பிரிவாக செயல்பட்டு வந்த நிறுவனம் இது.

அதே காலகட்டத்தில் ஜானின் சகோதரர் தாமஸ் நோல், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இமேஜ் பிராசஸிங் படித்துக்கொண்டிருந்தார். 1987 ல் தாமஸ் ஆப்பிளின் மேக் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கினார். அந்த கால தொழில்நுட்ப பித்தர்களைப்போல அவரும் ஆப்பிளின் மேக் அபிமானியாக இருந்தாலும், அந்த அற்புதமான கம்ப்யூட்டரில் கிரே ஸ்கேன் படங்களை காட்சிப்படுத்த முடியாத குறை இருப்பதை உணர்ந்தார்.

தாமஸுக்கு கோடிங் திறனும் உண்டு என்பதால், மேக் கம்ப்யூட்டரில் கிரே ஸ்கேன் படங்கள் தோன்றச்செய்யும் வகையில் ஒரு சிறிய புரோகிராமை தானே எழுதினார். விடுமுறையில் அவரைப்பார்க்க வந்த ஜான், சகோதரரின் இந்த மென்பொருளை பார்த்து வியந்து போனார். லூகாஸ் நிறுவனத்தில் தாங்கள் மேற்கொண்டு வந்த பணிக்கு நிகரான அந்த மென்பொருள் செயல்பாடும் இருந்ததாக உணர்ந்த ஜான், சகோதரருடன் இணைந்து அதை இன்னும் மேம்படுத்தினார். விரிவான வசதிகள் கொண்ட அந்த புரோகிராமுக்கு ‘டிஸ்பிளே’ என பெயர் வைத்தனர்.

அடுத்த கட்டமாக ஜான், வண்ண அம்சங்களை அதில் இணைக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ச்சியாக கோப்புகளை சேமிப்பது, வண்ண திருத்தம் உள்ளிட்ட பல வசதிகளை அவர் கோரினார். இதனால் தனது படிப்பு வேலைகள் பாதிக்கப்படுவதாக தாமஸ் அலுத்துக் கொண்டாலும், சகோதரர் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.

1988 ல் இந்த மென்பொருளுக்கு இமேஜ் புரோ என பெயர் சூட்டினர். இந்த மென்பொருள் உள்ளடக்கியிருந்த அம்சங்கள் விரிவாகவும், செழுமையாகவும் இருந்ததால், ஜானுக்கு இதை வர்த்தகரீதியாக விற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் தாமஸ் கொஞ்சம் தயங்கினார். அவர் தன் படிப்பிற்கான ஆய்வு வேலையை இன்னும் முடித்திருக்கவில்லை. வர்த்தக நோக்கில் மென்பொருளை அறிமுகம் செய்வது என்றால், இன்னும் பல அம்சங்களை சேர்க்க வேண்டியிருக்கும். அது அதிக நேரத்தை விழுங்கிவிடும் என அஞ்சினார். ஆனால், சந்தையில் அப்போது இருந்த போட்டி மென்பொருள்களை பார்த்த போது அவருக்கு தங்கள் சேவையின் தரம் பற்றி நம்பிக்கையும் உற்சாகமும் உண்டானது.

இதனையடுத்து சகோதர்கள் தங்கள் மென்பொருளை வாங்கக் கூடிய ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு வலைவீசினர். இதனிடையே தாமஸ் அதன் பெயரை போட்டோஷாப் என்று மாற்றியிருந்தார். சோதனையாக பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் போட்டோஷாப்பை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. பல நிறுவனங்கள் அதே போன்ற ஒரு மென்பொருளை உருவாக்க முயன்றதும் ஒரு காரணமாக இருந்தது. அடோப் நிறுவனம் மட்டும் தான், கொஞ்சம் ஆர்வம் காட்டியது, ஆனால் அந்நிறுவனத்துடன் சரியான உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் தான் பார்னேஸ்கேன் எனும் நிறுவனம் சகோதரர்கள் ஆக்கத்தால் ஈர்க்கப்பட்டது. இந்நிறுவனம், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான ஸ்கேனர் சாதனத்தை விற்பனை செய்து வந்தது. புகைப்படங்களை தரமாக ஸ்கேன் செய்யும் ஆற்றல் கொண்டிருந்தாலும், இந்த ஸ்கேனர் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஏனெனில் ஸ்கேன் செய்த புகைப்படத்தை என்ன செய்வது எனத்தெரியவில்லை. உண்மையில் ஸ்கேன் செய்யப்பட்ட தரத்தில் படத்தை பார்க்கும் வசதி கூட இருக்கவில்லை. இது விற்பனைக்கு தடையாக இருந்தது.

இந்த காரணத்தினால், பார்னேஸ்கேன் நிறுவனத்திற்கு போட்டோஷாப் மென்பொருள் பிடித்திருந்தது. இந்த மென்பொருளை இணைத்து விற்பனை செய்தால், ஸ்கேன் செய்யப்படும் புகைப்படத்தை திருத்தலாம், மேம்படுத்தலாம் என்றும் இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்றும் அந்நிறுவனம் நம்பியது. அதே நம்பிக்கையோடு, அந்த மென்பொருளை தனது ஸ்கேனர்களுடன் இணைத்து விற்பனை செய்தது. பார்னேஸ்கேன் எக்ஸ்பி எனும் பெயரிலான மென்பொருளாக இதை அறிமுகம் செய்தது.

கம்ப்யூட்டர்களுக்கு போட்டோரியலிசத்தை கொண்டு வருவதாக அந்நிறுவன விளம்பரத்தில் இது பற்றி வர்ணிக்கப்பட்டிருந்தது. பயணர்களுக்கும் இது மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஸ்கேனரை விட இந்த மென்பொருள் பிரபலமானது.

பார்னேஸ்கேன் வசமே போட்டோஷாப் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், என்ன நடந்தது என்றால், பார்னேஸ்கேன் போட்டோஷாப் பென்பொருள் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்காமல், அதன் மேம்படுத்தப்பட்ட மாதிரியை மட்டும் வாங்கி பயன்படுத்தியது. இதனிடையே அடோப் நிறுவனம் மற்றும் நோல் சகோதரர்களிடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டு அந்நிறுவனம் போட்டோஷாப்பை வாங்க முன் வந்தது.

இதன் பின் என்ன நடந்தது என்பது இணைய வரலாறு. ஆரம்பத்தில் மேக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே இருந்த போட்டோஷாப் பின்னர் விண்டோஸ் கம்ப்யூட்டர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு, மேலும் புதிய அம்ங்கள் இணைக்கப்பட்டு, இணைய உலகம் அதிகம் பயன்படுத்தும் புகைப்பட திருத்த மென்பொருள் சேவையாக உருவானது.

போட்டோஷாப் வரலாறு பற்றி மேலும் அறிய: https://www.creativebloq.com/adobe/history-photoshop-12052724