ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளை அளிக்கும் சென்னை 'ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ்'

2

சந்தையில் கிடைக்கும் நம்கின் வகைகளால் அதிருப்தி அடைந்த சென்னையை சேர்ந்த மூன்று ஆரோக்கியப் பிரியர்கள் ஒன்று சேர்ந்து 'ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ்' (SnackExperts) துவக்கினர்.

இந்தியா இப்போது ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. வழக்கமான எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளுக்கு பதில் கலோரி மதிப்பை கொண்ட புதிய வகை உணவுகள் பிரபலமாகி வருகின்றன. பல உணவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதை செய்து வருகின்றன. சென்னையை சேர்ந்த ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ் இந்த வரிசையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கோட்பாடு எளிமையானது- சில நேரங்களில் தேநீர் நேர உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகி எந்த அளவு நொறுக்குத்தீனி (ஸ்னாக்ஸ்)சாப்பிடுகிறோம் என்பதே மறந்துவிடுகிறது. இந்த அம்சம் தான் மூன்று ஆரோக்கிய பிரியர்களை இந்தியா முழுவதும் ஆரோக்கியமான ஸ்னாக் ரகங்களை வழங்கும் ஆன்லைன் ஸ்டோரை துவக்க வைத்தது.

அந்த தருணம்

ஒருநாள் அருண் பிரகாஷ், அருள் முருகன் மற்றும் மேரி சியாமளா, தேநீர் அருந்த சந்தித்த போது ஆரோக்கியமான ஸ்னாக் வாய்ப்புகள் அதிகம் இல்லாததை உணர்ந்தனர்.

”பல வகையான உடல் நல கோளாறுகளுக்கு காரணமாக இருக்கும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதன் மூலம் நாம் உடல் நலத்தை பாழாக்கிக் கொள்கிறோம். இந்த பிரபலமான நொறுக்குத்தீனிகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்திருந்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. நொறுக்குத்தீனிகளை விட்டுவிடலாம் தான், ஆனால் அது சாத்தியமில்லை” என்கிறார் அருண். அதன் பிறகு இவர் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை தேடிச்சென்றார். இந்த நிர்வாகவியல் அதிகாரி சென்னையில் பல இடங்களில் தேடியும் வெறுங்கையுடன் திரும்பினார்.

"இந்த அனுபவத்தால் ஏமாற்றம் அடைந்த நாங்கள் ஏதாவது செய்ய தீர்மானித்தோம். ஆரோக்கியமான நொறுக்குத்தீனியை தயாரிக்க விரும்பினோம். அம்மா சிறந்ததை தான் தருவார் என உங்களுக்கு தெரியும் என்பதால் எந்த கவலையும் இல்லாமல் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட முடிவது போல இதை தயாரிக்க விரும்பினோம். எங்களைப் போன்றவர்களுக்கு இது போன்ற நொறுக்குத்தீனியை அளிக்க முற்பட்டோம்” என்கிறார் அருண்.

ஸ்னேக் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனர்கள்
ஸ்னேக் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனர்கள்

2014 ஆகஸ்ட்டில் இந்த எண்ணம் உண்டானது. அடுத்த சில மாதங்களில் செயலில் இறங்கினர் இந்த மூவர். வேலையை விட்டு விட்டு இதை முழுநேர பணியாக எடுத்துக்கொண்டனர். திண்டுக்கல்லில் தரக்கட்டுப்பாடு மேலாளராக பணியாற்றிய அருள் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அதிலிருந்து ஆன்லைனில், ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது.

திட்டத்தில் மாற்றம்

ஆரம்பத்தில் இக்குழு பழங்கள், வறுத்த அவரை வகை மற்றும் பழ சாலெட் ஆகியவற்றை அளிக்க விரும்பியது. ஆனால் இந்த வகை பொருட்களுக்கான போக்குவரத்து சிக்கலாக இருக்கும் என்பதால் உலர் நொறுக்குத்தீனிகளுக்கு மாறினர்.

“நாடு முழுவதும் உள்ள உணவு பிரியர்களுக்கு, 30-40 நாட்கள் வரை வாங்கி வைத்து பயன்படுத்தக்கூடிய நொறுக்குத்தீனியை அளிக்க விரும்பினோம்” என்கிறார் அருண்.

நிறுவனம் 20-25 ஐட்டம்களுடன் துவங்கியது. இவை பெரும்பாலும் பேக் செய்யப்பட்டவை. பின்னர் மெதுவாக புதிய வகைகளை சேர்த்துக்கொண்டனர். ஊட்டச்சத்து வல்லுனரான ரஞ்சனி ராமன், அவர்களின் தயாரிப்பில் டயட் தேவை பூர்த்தியாகும் படி உதவினார்.

இப்போது, ராகி சேவ், ஓட்ஸ் மற்றும் உலர் பழ லட்டு, சர்க்கரை இல்லா பிரவுனீஸ், பலாப்பழ பிரிட்டர் மற்றும் பலவகையான கேக் உட்பட 40 வகை நொறுக்குத்தீனிகளை ஸ்னாக் எக்ஸ்பர்ட்ஸ் அளிக்கிறது. இவற்றை தாங்களே தயாரிக்காமல் தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த சமையல் அறைகள் மூலம் தயார் செய்கின்றனர்.

என்ன சிறப்பு?

இவர்களைப்பொருத்தவரை வாடிக்கையாளர்கள் தான் ராஜா. "வாடிக்கையாளர்கள் கருத்துக்களுக்கு ஏற்ப புதிய பொருட்களை சேர்த்து வருகிறோம். ஒரு சில தயாரிப்புகள் சுவை குறைவாக இருந்தால் அல்லது வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காமல் போனால் உடனே அதன் செய்முறையை மாற்றுகிறோம். அப்படியும் அவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் அதை கைவிட்டுவிடுகிறோம்” என்கிறார் அருண்.

இந்த ஸ்னாக்ஸ் பெட்டி (750 கிராம் எடை) ரூ.699 விலை கொண்டது. வாடிக்கையாளர்கள், அதை தங்கள் விருப்பம் போல தேர்வு செய்யலாம். பின்னர் இவை கூரியர் மூலம் அனுப்பப்படுகின்றன. சென்னையில் இவர்களே டெலிவரி செய்கின்றனர்.

ஸ்னேக் எக்ஸ்பர்ட்ஸ் குழு சென்னை அலுவலகத்தில்
ஸ்னேக் எக்ஸ்பர்ட்ஸ் குழு சென்னை அலுவலகத்தில்

சந்தை எப்படி?

பிஎஸ் மார்கெட் ரிஸர்ச் அறிக்கை படி, இந்த வகை உணவுக்கான சர்வதேச சந்தை 2014 ல் 111.1 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் 166.6 மில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த பிரிவில் வளர்ச்சி இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வருகிறது என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த அறிக்கை, மக்கள் எப்படி பழங்கள், பழச்சாறு போன்ற ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறிவருகின்றனர் என்பதையும் குறிப்பிடுகிறது. இதனால் நிறுவனங்கள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பல தொழில்முன்முயற்சி நிறுவனங்கள் இந்த பிரிவில் செயல்பட்டு வருகின்றன. தி கிரின் ஸ்னாக் கோ (The Green Snack Co), ஸ்னாக்கோசவுர் (Snackosaur), மற்றும் ஸ்பூன் ஜாய் (Spoonjoy. )ஆகியவை ஏற்கனவே இத்துறையில் கால் பதித்துள்ளன.

எதிர்கால திட்டம்

சமூக ஊடக முயற்சி தவிர இந்நிறுவனம் மார்கெட்டிங்கில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றாலும் நாடு முழுவதும் 500 ஆர்ட்களை பூர்த்தி செய்துள்ளது.

இந்த குழு சமீபத்தில் ஐஐடி பாம்பே தொழில்முனைவு பிரிவு நடத்திய "தி 10 மினிட் மில்லியன்" போட்டியில் ரூ.10 லட்சம் வென்றது. அஜீத் குராணா, தாஹா நபீ, விசி கார்திக், மற்றும் ரவி குருராஜ் ஆகிய முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பெற்றது.

"எங்கள் நொறுக்குத்தீனிகள் மூலம் இந்த பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்ற விரும்புகிறோம். முதலில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறோம்” என்று கூறும் அருண், தனது குழுவினருடன் இணைந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இணையதள முகவரி: SnackExperts

கட்டுரையாளர்: Aparna Ghosh