பல தலைவர்கள், பிரபலங்களை  உருவாக்கிய ஹைதராபாத் பள்ளி!

0

பரபரப்பான பேகம்பேட் சாலையில் அமைந்துள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளி (HPS), வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் சாதாரண கட்டிடம் அல்ல. உலகின் மிகச்சிறந்த வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், தொழில்முனைவோர் போன்றோரை உருவாக்கிய இடம். இது 1923-ம் ஆண்டு ஹைதராபாத் ஏழாம் நிஜாம் அவர்களால் ’ஜாகிர்தார் கல்லூரி’யாக நிறுவப்பட்டது. 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, அடோப் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாராயண், மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் சிஇஓ அஜய் பங்கா போன்ற பிரபலங்களும் முன்னாள் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரான அசோக் கஜபதி ராஜு, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிருஷ்ண குமார் ரெட்டி போன்ற பிரபல அரசியல்வாதிகளும் இங்கு பயின்றுள்ளனர்.

HPS உயர்குடியைச் சேர்ந்தோரின் மகன்களுக்காக 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தப் பள்ளி லண்டனில் இருக்கும் ஈடன் கல்லூரியை (Eton college) மாதியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என ’பிசினஸ் இன்சைடர்’ அறிக்கை தெரிவிக்கிறது. 

நவாப்களின் நிலமான ஹைதராபாத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகம் 1990 முதல் இயங்கி வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகரான நாதெல்லா பள்ளிப் பருவத்தில்தான் விளையாட்டில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். 

’ஒருவர் தன்னிடம் இருக்கும் திறனில் முழுநம்பிக்கை கொள்ளவேண்டும். அதே சமயம் தொடர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும். இவை இரண்டையுமே முறையாக சமன்படுத்த உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளரிடமிருந்தே தான் கற்றுக்கொண்டதாக ’வார்டன் பிசினஸ் ஸ்கூல்’ நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். நாதெல்லா தனது மனைவி அனுபமாவை அப்பள்ளியில் தான் சந்தித்தார்.

152 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளி வளாகம் டெக்கான் ஓஸ்மானியன், சமகால கட்டிடக்கலைஞர்கள் ஆகியோரைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இங்கு ஐசிஎஸ்ஈ பாடதிட்டம் பின்பற்றப்படுகிறது. எஜுகேஷன் வேர்ல்ட்-ன் இந்தியாவின் சிறந்த போர்டிங் அல்லாத மற்றும் போர்டிங் வசதியுடன்கூடிய பள்ளிகளில் (Day-cum-boarding schools) மூன்றாவதாகவும் மாநில அளவிலும் நகர அளவிலும் முதலாவதாகவும் மதிப்பிடப்படுவதாக டெக்கான் க்ரோனிக்கல் அறிக்கை தெரிவிக்கிறது.

டயானா ஹெய்டன், ராம் சரண் தேஜ், ரானா தக்குபாடி, விவேக் ஓபராய் போன்ற திரைப்பிரபலங்களும் ஹர்ஷா போக்லே, நிகில் சின்னப்பா போன்ற பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களாவார்கள்.

கட்டுரை : THINK CHANGE INDIA