பெண் தொழில்முனைவர் பிரத்யேக ‘ஸ்டார்ட்-அப் பயணம்’ அறிவிப்பு!

2

கோவையைச் சேர்ந்த ‘ஸ்டார்ட்-அப் பயணம்’ குழு தற்போது பெண் தொழில் முனைவோர்களுக்கான பிரத்யேக பயணத்தை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 8 மற்றும் 9-ம் தேதி சென்னை, கோவை மற்றும் ஈரோட்டில் இந்த பெண்கள் ஸ்டார்ட் அப் பயணம் நடக்க உள்ளது. 

ஸ்டார்ட்-அப் பயணம் என்றால் என்ன?

ஒரு மனிதன் தன் இலக்கை அடைய சில கரடு முரடான சாலைகள், குறுகிய பாதைகள், வேகத்தடைகள், போக்குவரத்து குறிகளை கடக்க வேண்டியது இருக்கும். இலக்கை விட இலக்கை அடைவதற்கான பயணமே முக்கியமாகும். ஸ்டார்ட் அப் பயணத்தின் இலக்கும் அதுவே. அனுபவசாலிகளிடம் நேரடியாக சென்று அவர்களின் ஸ்டார்ட் அப் பயணத்தை பற்றிய முழு விவரங்களை அவரை பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்ளலாம்.

தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள், உத்திகள், சிக்கல்களிலிருந்து மீண்டு வரும் அனுபவங்கள் பற்றிய விவரங்கள் ஸ்டார்ட்-அப் பயணத்தில் விளக்கப்படும். இது ஆர்வமுள்ள தொழில்முனைவர்களை ஊக்குவித்து, தொழில்முனைவுச் சூழலின் நன்மைகளைப் பற்றி நேர்மையாக வெளிப்படுத்தும் ஸ்டார்ட் அப் சமுதாயத்தின் ஒரு முயற்சியாகும்.

இப்பயணத்தில் தொழில்முனைவில் ஈடுபாடுள்ள இளம் பெண்கள், மாணவிகள் மற்றும் வளர்ந்துவரும் பெண் தொழில்முனைவோர் கலந்து கொள்ளலாம். இவர்கள் தொழில் முனைவில் வெற்றி கண்டுள்ள பெண்கள் மற்றும் தொழில் ரீதியில் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டு அறியமுடியும். 

இதுவரை ஸ்டார்ட்-அப் பயணம் 5 பயணங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இப்பயணங்கள் 200-க்கும் அதிகமான சிஇஒ, 450-க்கும் அதிகமான ஸ்டார்ட்-அப்கள் மற்றும் 150-க்கும் அதிகமான வெற்றிக்கதைகளை கண்டுள்ளது. ஸ்டார்ட்- அப் பயணத்தின் முடிவில் 25 புதிய நிறுவனர்கள் உருவாகியுள்ளனர், 3 முதலீட்டு வாய்ப்புகளும் 150-க்கும் மேற்பட்ட தொழில் கூட்டமைப்பும் உருவாகியுள்ளது இதன் சிறப்பு. 

இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள பெண்கள் ஸ்டார்ட்-அப் பயணம், தமிழ்நாடு  தொழில்முனைவோர் வளர்ச்சி கழகம் (EDII–Entrepreneurship Development & Innovation Institute, GOVT of TN) உடன் இணைந்து நடத்தப்படுகிறது. இப்பயணத்தில் கலந்துகொள்ளவிருக்கும் வல்லுனர்களும் பெண்களே. இரண்டு பயணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயணம் சென்னை-கோவை வழியே நடைப்பெறும். இதில் 40-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் இருப்பார்கள். 35-க்கும் அதிகமான வெற்றிப்பெற்ற மூத்த பெண் தொழில்முனைவோர்களும், பேச்சாளார்களும், வழிகாட்டிகள் கலந்து கொள்கின்றனர். பெண்களை தொழில்முனைவில் அதிகம் ஊக்குவிக்கும் முக்கிய முயற்சி இதுவாகும். 

‘ரெளத்ரா’ என்ற இளைஞர்கள் சார்ந்த மற்றொரு அமைப்பும் இப்பயணத்தை இணைந்து நடத்துகிறது. பெண்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இப்பயணம் அமையும். வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி பெண்கள் தினத்தை முன்னிட்டு, 25 புது பெண் தொழில்முனைவோர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான வழிகாட்டுகள், முதலீட்டு வாய்ப்புகள், தொடர்புகளை ஏற்படுத்தித் தரவும் இவ்வமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். பெண்கள் மேம்பாட்டிற்கான முக்கிய முயற்சி இதுவாகும்.

யுவர்ஸ்டோரி தமிழ் பெண்கள் ஸ்டார்ட்-அப் பயணத்தின் மீடியா பார்ட்னராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் ஸ்டார்ட்-அப் பயணம் பதிவு செய்ய: www.startuppayanam.in | pro@startuppayanam.in