இரண்டரை வயதில் ஆசிய சாதனை: இளம் கிரிக்கெட் வீரர் சனுஷை பாராட்டிய தோனி!

2

ஒரு குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும்; படிப்பில் துவங்கி கல்யாணம் வரை பல கனவுகளை கொண்டிருப்பர். சில பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் இடத்தில் திணிக்க பெரும்பாலானோர் படிப்பில் முன்னேற வேண்டும் என எண்ணுவர். ஒரு வயதில் இருந்தே படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளிக்கு குழந்தைகளை தயார் செய்யும் இந்த காலத்தில் இரண்டரை வயதில் குழந்தைக்கு கிரிகெட்டை பழக்கப்படுத்தி வருகின்றனர் இந்த பெற்றோர்.

சென்னையைச் சேர்ந்த முருகன் ராஜ் மற்றும் சுபத்ராவின் மகன் தான் செல்லமாக ஜூனியர் எம் எஸ் டி என அழைக்கப்படும் சனுஷ் சூர்யதேவ். மூன்று வயதான சனுஷ், தத்தி நடக்கும் வயதிலே கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்துள்ளார். ஏதோ குழந்தை விளையாடும் விளையாட்டு போல் இல்லாமல் 7 மாதத்திலே நேர்த்தியான டெக்னிக் உடன் பௌலிங் செய்து பெற்றோர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

“ஒரு வயதில் பார்க்கில் விளையாட சென்ற போது சனுஷ் பேட்டிங் செய்ததை பார்த்து அங்கிருந்த ஒருவர் பேசியதை கேட்ட பிறகே நாங்கள் சனுஷின் திறமையை கவனித்தோம்,” என்கிறார் சனுஷின் தந்தை முருகன் ராஜ்.

இதற்கு முன் சனுஷ் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ளாரா என்பதை தெரிந்துக்கொள்ள முன் எடுத்து வைத்த வீடியோவில் பார்த்தபோது தான் 7 மாத குழந்தையாக இருக்கும் பொழுதே வாக்கரில் அமர்ந்து நேர்த்தியாக பௌலிங் செய்ததை கண்டுள்ளனர். பிறந்ததில் இருந்தே சனுஷ் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியதை அறிந்து அவருக்கேற்ற பந்து, மட்டை மற்றும் கிரிக்கெட் உடையை தயாரித்து அவரது திறமையை வெளியில் கொண்டு வர முயன்றனர் அவனின் பெற்றோர்கள்

சனுஷ் ப்ரோஃபஷனல் கிரிக்கெட் வீரர் போல் விளையாடுவதை பதிவு செய்ய ஜூனியர் எம் எஸ் டி என்னும் யூடியுப் சேனலை துவங்கினார் முருகன் ராஜ், அதை பார்த்த பின் பல மீடியாக்கள் அவரின் திறமையை அங்கீகரித்தனர்.

“மீடியா நியூஸ்களை பார்த்து சோனி நிறுவனம் எங்களை அழைத்து ஏதேனும் சாதனைகள் செய்துள்ளாரா என கேட்டனர், அதன் பின் தான் சாதனை பிரிவிகளை பற்றி நான் ஆராய்ந்தேன்...”

இரண்டரை வயதில் இந்திய சாதனை புத்தகத்தில் மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் பட்டம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் “குழந்தை ப்ரோஃபஷனல் கிரிக்கெட் வீரர்” என்னும் பட்டத்தையும் வென்றுள்ளார் இந்த ஜூனியர் எம் எஸ் டி.

பெற்றோர் மற்றும் தொனியுடன் சனுஷ் 
பெற்றோர் மற்றும் தொனியுடன் சனுஷ் 

இந்திய சாதனை பட்டம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவர் எம் எஸ் தோனி அவர்கள் கையால் சனுஷிற்கு வழங்கப்பட்டது. பல வீடியோக்கள் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமான சனுஷ் இந்த நிகழ்வுக்கு பிறகு அதிக பாராட்டுகளை பெற்றார். மேலும் இவரது ஆட்டத்தை கண்ட தோனி, 

“இந்த வயதில் ப்ரோஃபஷனல் கிரிக்கெட் வீரர் போல் கவர் டிரைவ், ஸ்ட்ரைட் டிரைவ் மற்றும் பௌலிங் போடுவது வியக்க வைக்கிறது,” என பாராட்டியுள்ளார்.

முருகன் ராஜ் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் வீட்டிலே சனுஷ் உடன் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் விளையாடி வருகிறார். இந்த வயதில் குழந்தைக்கு கோச்சிங் கொடுத்து திணிப்பது தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவிக்கிறார்.

“என் குழந்தைக்கு எதையும் நான் திணிக்க விரும்பவில்லை, படிப்பை தாண்டி மற்ற செயல்பாடுகளிலும் அவரது ஆர்வம் வளர வேண்டும். இது விளையாடும் வயசு அதை தான் அவரும் செய்கிறார்,” என முடிக்கிறார் முருகன் ராஜ்.

மூன்றே வயதில் பல நிகழ்வுகளுக்கு தலைமை விருந்தினராக பங்கேற்று கலக்குகிறார் சனுஷ். இதே போல் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை வற்புறுத்தாமல் அவர்களின் திறமையை கண்டு வழி நடத்த வேண்டும்.