'பைட் மீ கப்கேக்ஸ்'- கிங்ஸ்லீ மற்றும் திவ்யாவின் வெற்றிப்பாதை...  

0

டெல்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்ல தட்டாத. மனரோம்மா பாட்டி சொல்றத மட்டும் இல்ல, இந்த காலத்துல மனசு சொல்றதையும் யாரும் தட்றது இல்ல. அமெரிக்கால வடிவமைப்பு துறைல பந்தயங்களுக்குத் தேவையான பொருட்கள வடிவமச்சுட்டும், தொழில் நுட்பத் துறைல மிகபெரிய நிறுவனங்களுக்கும் வேலை செஞ்சுட்டு இருந்தவங்க அதிரடியா இந்தியா வந்து அனைவரும் விரும்பி உண்ணுகிற ’கப்கேக்’ தயாரிக்கற தொழில் துவங்கி ஒரு நல்ல நிலைக்கும் வந்துருக்காங்க. அவர்கள் நிறுவனத்தோட பெயர் “பைட் மீ கப்கேக்”.

பெயர் அறியப்படாத ஒரு சந்தின் முடிவில் மிகபெரிய நடிகர் உங்கள் “கப்கேக்”கிற்காக காத்திருக்கிறார் என்றால், துவங்கிய தொழில் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டது என்பது தானே பொருள்.

“அவருக்கு எங்கள் கப்கேக் மிகவும் பிடிக்கும். ஆனால் அவரின் இல்லத்திற்கு கொண்டு சென்று கொடுப்பதற்கு அவரின் முகவரியை கொடுக்க தயக்கபட்டார். அதனால் எங்கள் வீடு தேடி வந்து அவர் கப்கேக் வாங்கிச்செல்வதில் எங்களுக்கு மிகவும் சந்தோஷமே,” 

என்கிறார் கிங்ஸ்லீ ஜெகன் ஜோசப். இவரும் இவரது மனைவி திவ்யா ராமசாமியும் இணைந்து துவங்கியுள்ளதே “பைட் மீ கப்கேக்ஸ்.”

1997ஆம் ஆண்டு சென்னை நிப்ட் (தி நேஷனல் இன்ஸ்டிடுட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி) இல் இருவரும் சந்தித்துக் கொண்டனர். படித்து முடித்த பின்பு இருவரும் இணைந்து சேபியன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கினர். அதன் மூலம் டீ ஷர்ட்டுகளை வடிவமைத்தனர். அவற்றில் உள்ள நக்கலான வாசகங்கள் இவர்களது அடையாளமாக திகழ்ந்தது.

”நாங்கள் எதிர்பார்த்த வெற்றி அந்த தொழிலில் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே இருவரும் வேலைக்கு சென்றோம்,” என்கிறார் கிங்ஸ்லீ.

பந்தையங்களின் வெற்றியில் இருந்து வெண்ணையின் வழவழப்பிற்கு... 

திவ்யா முதலில் ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால் ஆடை வடிவமைப்பு தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில், அமெரிக்கா சென்று மேலாண்மை பட்டம் பெற்றார். டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் இருந்து பட்டம் பெற்ற பின்பு பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். அதில் முக்கியமானது ’பாக்ஸ் ரேசிங்.’ அதில் உயர் தொழில்நுட்பம் அமைந்த இருசக்கர ஓட்டுனர் உடை மற்றும் இதர கவசங்கள் இவரது பொறுப்பில் இருந்தது. அவரது வேலை காரணமாக அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். வியட்நாம் சீனாவையும் விட்டு வைக்கவில்லை. இருமுறை தனியாக பாகிஸ்தானுக்கும் சென்றுள்ளார்.

மறுபக்கம் கிங்ஸ்லீ அம்பத்தூரில் உள்ள ஒரு உள்ளாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நேரம் வலைத்தளங்கள் வடிமைப்பதிலும் இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. உலகமெங்கும் வலைத்தள குமிழி உடைந்த நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது. அந்நேரத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பல வேலைகள் இவரிடம் வந்துள்ளது. எனவே ஆடைகளை விட்டு தொழில்நுட்பத்திற்கு முழுவதுமாக மாறினார் கிங்ஸ்லீ. வலைதள வடிவமைப்பாளர் விரைவில் உபயோகிப்போரின் அனுபவத்திற்கு ஏற்ப வடிவமைக்கும் வடிவமைப்பாளர் ஆனார். அத்தோடு நில்லாமல் இந்தியானா பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டமும், சேல்ஸ்போர்ஸ்.காமில் மேலாளர் பதவியும், டிஜிட்டல் சாக்கலெட் நிறுவனத்தில் உயர் பதவியும் வகித்துள்ளார்.

இவர்கள் இருவரும் உணவுப்பொருள் தயாரிக்கும் துறையில் குதித்தது எப்படி?

அமெரிக்காவில் எட்டு வருடங்கள் கழித்த பின்பு, 2007-ல் இருவரும் அடுத்த 10 வருடங்களை ஒரு தொழில் முனைவதன் மூலம் கழிக்க எண்ணினர். அதற்கு இந்தியா தான் சிறந்த நாடு என்பதை தீர்மானித்தனர். 

“பல்வேறு தொழில்களை நாங்கள் பட்டியலிட்டோம், அதில் இதுவும் ஒன்று,” என்கிறார் திவ்யா.

இந்தியா வந்த பிறகு இருவரும் தனித்தனியாக சில தொழில்களை துவங்கினர். கிங்ஸ்லீ ’TripThirsty’  என்ற நிறுவனத்தை மேலும் நால்வரோடு இணைந்து துவங்கினார். திவ்யா வீட்டின் உள் அலங்காரம் செய்யும் தொழிலை துவங்கினார். 

“ஆனால் எதுவும் பைட் மீ கப்கேக்சை சிறியதாக வீட்டில் வைத்தே நாங்கள் துவங்கியபோது கிடைத்த வளர்ச்சி, வருமானம் ஆகியவற்றை அளிக்கவில்லை. அதன் காரணமாக அத்துணை கவனத்தையும் இதில் செலுத்தி 2013-ல் பெங்களுரு இந்திரா நகரில் ஒரு கடை துவக்கினோம்,” என்கிறார் அவர்.

வெற்றியின் ரகசியம் :

இருவருக்கும் இருந்த மேலாண்மை பின்புலம் சரியான நேரத்தில் அவர்களுக்கு உதவியது. பொருட்களை செய்து, சந்தைக்கு எடுத்துச் சென்று, மக்கள் எதனை விரும்புகின்றனர், எதற்கு பணம் செலவு செய்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள பல்வேறு யுத்திகளை கையாண்டோம். பல விழாக்களில், அடுக்கு மாடிகளில் கடை போட்டோம். வெவ்வேறு விதமாக விலைபட்டியல் வைத்தோம். பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்து எங்கள் செலவையும் கணக்கில் வைத்து, எங்கள் பொருளை மாற்றி அமைத்தோம்.” இந்த தொழிலை அவர்கள் தேர்வு செய்ததற்கான காரணம் காலத்திற்கு ஏற்றார் போல் இருப்பதோடு, தேவையான விளம்பரத்தை தானாக இது ஈட்டும் என்ற நம்பிக்கையில்.

இந்நிறுவனத்தை துவங்கி 5 வருடம் முடிகிறது . பல ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளோம். அவற்றில் இருந்து பல பாடங்களை கற்றுள்ளோம். தற்போது சென்னை மற்றும் பெங்களுருவில் 3 கடைகள் உள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். சென்னையில் நால்வரும், பெங்களுருவில் 10 நபர்களும் இவர்கள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

இவர்கள் நிறுவனம் ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் சுவை மற்றும் பார்வைக்கு ஏற்ற விதத்தில் கப்கேக்ஸ் என்றால் அது ’பைட் மீ கப்கேக்ஸ்’ தான் என்ற நிலையை கொணர்ந்துள்ளனர்.

“எங்கள் வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள், எங்கள் பொருள் எப்போதும் புதிதாகவும் பார்க்க அருமையாகவும் இருக்கும் என. காரணம் நாங்கள் அதனை செய்யும் முறை. மற்ற கடைகளில் அவற்றில் பல்வேறு பொருட்களை கலந்து செய்வார்கள். ஆனால் எங்கள் கடைகளில் நீங்கள் வந்து பார்த்தால், மாவு, சக்கரை, பால், க்ரீம் என சாதரணமாக ஒரு சமையல் அறையில் நீங்கள் பார்க்கும் பொருட்களே இருக்கும். அதனால் எங்கள் சுவையை மக்கள் நன்கு அறிவார்கள்.”

துவங்கியதில் இருந்து தற்போது வரை சந்தை நன்றாக மாறியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ஸ்விக்கி, சோமேடோ போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவர்களில் 25% விற்பனை தற்போது ஸ்விக்கி மூலம் நடக்கின்றது.

எங்கும் வடிவமைப்பு எதிலும் வடிவமைப்பு

இருவரும் வடிவமைப்பு பின்புலம் கொண்டவர்கள் என்பதன் காரணமாக அவர்கள் பொருட்களிலும் அது பளிச்சிடுகிறது. பொருட்களில் துவங்கி, எங்கள் கடைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது வரை அனைத்திலும் எங்கள் வடிவமைப்பு உள்ளது. நாங்கள் துவங்கியது முதல், எங்களை மிகப்பெரிய நிறுவனமாக மக்கள் நினைத்தனர். கடைகளே இல்லாத நேரத்திலும், எங்களை மிகப்பெரிதாகக் கருத காரணம் எங்கள் அணுகுமுறை. யார் எங்களை அழைத்தாலும், பதிவு செய்யப்பட்ட குரல் பதில் அளிக்கும். அது உருவாக்கிய எண்ணமும் ஒரு விதமாக உதவியது.

“எங்கள் வடிவமைப்பு பின்புலம் எங்களுக்கு பல வழிகளில் உதவியது. வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் புதிய விதத்தில் மாற்றி அமைக்க முடிந்தது. அதில் முக்கியம் எங்களது பேக்கேஜிங் ஆகும். கப்கேக்குகள் மிகவும் மிருதுவாக இருக்கும். கொண்டு செல்லும் வழியில் அவை உடைந்து போக வாய்ப்புண்டு. எனவே அவற்றை எவ்வாறு பேக் செய்வது என்பதற்கே பல நாட்கள் நாங்கள் யோசித்து தற்போது உள்ள வடிவத்தை கண்டுபிடித்தோம்.”

மேலும் கிங்ஸ்லீ தனது தொழில்நுட்ப அனுபவத்தை கொண்டு, தினமும் ஆகும் விற்பனையின் அளவை அனைத்து கடைகளில் இருந்தும் சேகரித்தார். தினமும் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவியது.

எதிர்காலத்தில் கேக் துறையில் காலடி எடுத்து வைக்கும் எண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் அவற்றை எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது தான் மிகபெரிய சவாலாக தற்சமயம் இவர்கள் முன்னர் உள்ளது. “அதற்கான விடை கிடைத்து விட்டால் சந்தையில் மிகப்பெரிய பங்கு எங்களிடம் இருக்கும்,” என்கிறார் கிங்ஸ்லீ.

கிங்ஸ்லீ மற்றும் திவ்யா இருவரும் முதல் தலைமுறை தொழில்முனைவோர். இருவருக்கும் வேலைகளை விடாது தொழில் துவங்குமாறு அறிவுரைகள் கிடைத்துள்ளது. அனைவரும் கிங்ஸ்லீ தனது சம்பளத்தை வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் இருவரும் இணைந்து வேலை செய்வதில் மகிழ்ச்சி அதிகம் என்கிறார் கிங்ஸ்லீ.

நாங்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்த எட்டு வருடங்கள் தான் அதற்குக் காரணம் என்கிறார் அவர். நாங்கள் படித்த படிப்பு, சந்தித்த மக்கள், அங்கிருந்த தொழில் முனையும் சூழல் என அனைத்தும் எங்களுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் செல்லவேண்டிய பாதை ஆகியவற்றை கொடுத்தது என்கின்றனர்.

நமது தொழிலை நாமே நடத்தும் சுதந்திரம் :

தொழிலை நடத்துவது என்பது மிகபெரிய சவாலான விஷயம். ஆனால் கிங்ஸ்லீ இடம் இதனை பற்றி வினவினால், தனக்குத் தானே முதலாளியாக இருப்பது தான் சிறந்தது என்ற பதில் வேகமாக வருகின்றது. 

“எங்கள் நண்பர்கள் எங்களை விடவும் அதிகம் சம்பாதிக்கின்றனர். எங்களை விடவும் அதிகம் சொத்துகள் வைத்துள்ளனர். ஆனால் அவை எதுவுமே உங்கள் பொருளை உங்கள் வாடிக்கையாளருக்கு கொடுப்பதன் மூலம் கிடைக்கும் காசுக்கு ஈடாகாது. எங்களுக்கு எங்கள் வெற்றியை கொண்டாடும் நேரமும் ஆற்றலும் உள்ளது. இது வெகு சிலருக்கே கிடைத்துள்ளது.”

அவர்கள் மனதுக்கு பிடித்ததை செய்வதை பற்றி கேட்ட போது எதிர்பாராத பதில் கிடைத்தது. 

“அனைவரும் தற்போது Passion என்ற வார்த்தைக்கு மயங்கியுள்ளனர். ஆனால் நமது முந்தைய தலைமுறை எவ்வாறு நிரந்தர வருமானத்தை தேடி நேரத்தை வீணாக்கினார்களோ அவ்வாறே இன்றைய தலைமுறை தங்களின் ஆர்வத்தை தேடி ஓடுகின்றனர். எங்களுக்கு அதன் மீது எந்த கோவமும் இல்லை. ஆனால் அதனை நோக்கி ஓடுவதாலேயே உங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை மாறுகின்றது. உங்கள் ஆர்வத்தைக் காட்டிலும் சுதந்திரம் பெரியது,” என முடித்தார் கிங்ஸ்லீ.

கட்டுரையாளர் : ஜோதி சிதம்பரம் | தமிழில் : கெளதம் தவமணி