தாய்நாடு திரும்ப துபாய் கோர்டிற்கு நடையாய் நடந்த திருச்சி செல்வராஜுக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ்!

0

48 வயதான திருச்சியை சேர்ந்த ஜகன்னாதன் செல்வராஜ், தன் தாய் நாடான இந்தியா திரும்புவதற்கான விமான பயண டிக்கெட் பெற, கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாய் நீதிமன்றத்திற்கு அலையாய் அலைந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு நடந்துள்ளார். இவர் தற்போது இந்தியா திரும்பினார். 

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு, மத்திய அரசின் உதவியோடு செல்வராஜ் இந்தியா திரும்பியுள்ளார். திருச்சியை அடுத்துள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். பிடிஐ, செல்வராஜ் படும் அல்லல்கள் பற்றி செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, ஏய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொண்டுவரும் சுஷ்மா ஸ்வராஜ், செல்வராஜ் சம்மந்தமான அறிக்கையை துபாயில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அண்மையில் பெற்றார். இது குறித்து சுஷ்மா ட்வீட் செய்தபோது,

”செல்வராஜ் இந்தியா திரும்ப நாங்கள் வழி செய்துள்ளோம். அவர் பத்திரமாக அவரது கிராமத்துக்கு அனுப்பப்பட்டார். கடந்த ஒரு வருடமாக அவர் துபாய் கோர்டிற்கு 20 முறைகளுக்கும் மேல் அலைந்ததில் 1000 கிமி தூரப் பயணத்தை செய்துள்ளார்,” என்று பதிவிட்டார். 

செல்வராஜ் தனது தாயார் ஒரு விபத்தில் உயிரிழந்த போது நாடு திரும்ப முயற்சித்தார். ஆனால் அவருக்கு அங்கே விடுப்பு அனுமதி அளிக்கப்படவில்லை. 

“என் கேஸ் எண் 826 ஆக இருந்தது. என் கேஸ் வரும் நாளன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து நீதிமன்றம் செல்ல தயார் ஆகி, 2 மணி நேரம் நடந்து சென்று துபாய் கோர்ட்டை அடைவேன். இது போல் 15 நாட்களுக்கு ஒருமுறை கோர்ட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. டாக்சியில் நீதிமன்றத்துக்கு செல்ல பணம் இல்லாததால் நான் நடந்தே செல்வேன்,” 

என்று செல்வராஜ் கலீஜ் டைம்ஸ் செய்திக்கு பேட்டி அளித்திருந்தார். துபாய் சோனாப்பூர் என்ற பகுதியில் உள்ள பொது பூங்கா ஒன்றில் பல மாதங்களாக தங்கி இருந்தார் செல்வராஜ். கராமா என்ற இடத்தில் அமைந்திருந்த நீதிமன்றத்துக்கு பேருந்தில் செல்ல தேவையான பணம் இவரிடம் இல்லாததால் காலார நடந்தே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India