பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு வசிப்பிடமும், புதிய வாழ்க்கையும் வழங்க ‘நானி கா கர்’ கட்டும் திருநங்கை!

0

பாலியல் தொழிலாளி ஒருவரின் மகளான காயத்ரியை தத்தெடுத்து வளர்க்க சமூகத்துடன் போராடி பல தடைகளைத் தகர்த்துள்ளார் திருநங்கை அம்மாவான கௌரி சவந்த். தற்போது ’நானி கா கர்’ என்கிற வீட்டினை உருவாக்கி பாலியல் தொழிலாளிகள் பலரது குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்க முயற்சி எடுத்து வருகிறார்.

காயத்ரி எவ்வாறு முறையான பராமரிப்புடன் வளர்க்கப்பட்டார் என்பதை நினைவுகூறும் கௌரி இத்தகைய பராமரிப்பு ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கவேண்டும் என்கிறார். 

“இந்த எண்ணத்துடன் உருவானது தான் ‘நானி கா கர்’. ஒரு குழந்தைக்கு அவரது பாட்டியின் வீட்டைக் காட்டிலும் மகிழ்ச்சியான இடம் எதுவாக இருக்கமுடியும். அங்குதான் ஒவ்வொரு குழந்தையும் செல்லமாக வளர்க்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தனை அன்பும் கிடைக்கப்படும்,” என்றார்.

மும்பையில் உருவாகும் இந்த வீட்டில் குழந்தைகளுக்கு அன்பும் பராமரிப்பும் அளிப்பதுடன் அடிப்படை கல்வி மற்றும் சுகாதாரமும் வழங்க விரும்புகிறார். 18 வயதிற்குட்பட்ட எந்த ஒரு குழந்தையும் இங்கே வரலாம்.

வீட்டிற்கான நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனின் ’கௌன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சி மூலம் கௌரி வென்ற தொகையை ஏற்கெனவே இதற்காக செலவிட்டுள்ளார். தற்போது கூட்டுநிதி வாயிலாக கூடுதல் நிதி உயர்த்தி வருகிறார்.

தேவை

புனேவில் ஒரு பழமைவாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கௌரி என்று அழைக்கப்படும் கணேஷ் சுரேஷ் சவந்த். சிறு வயதிலேயே இவரிடம் பெண்மையின் குணாதிசயங்களே அதிகம் காணப்பட்டது. ஹம்சஃபர் ட்ரஸ்ட் உதவியுடன் கணேஷ் கௌரியாக மாறினார்.

குழந்தைகளுக்கான இல்லம் மிகவும் முக்கியமானது என கௌரி கருதினார். அவரது இந்த முயற்சியின் மூலம் அவர் சிறுவயதில் சந்தித்த கொடுமைகளும் வளர்ந்ததும் ஒரு திருநங்கையாக மும்பையின் தெருக்களில் அவர் சந்தித்த அனுபவங்களும் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்க விரும்புகிறார்.

பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள். அவர்களது குழந்தைகளின் சூழல் வருந்தத்தக்கது என்பதால் அவர்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகக்கூடியவர்கள்.

”தரமான கல்விக்கு வாய்ப்பு இல்லாததால் வாழ்க்கை தேர்வுகளும் வாய்ப்புகளும் மிகக்குறைவாகவோ அல்லது இல்லாமலே போகும் சூழலோ உள்ளது. தங்களது அம்மா பாலியல் தொழிலாளியாக வாழ்வதை மிகவும் இளம் வயதிலேயே பார்த்து வளரும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் வெளி உலகில் அவர்கள் மீது குத்தப்படும் முத்திரையை எதிர்த்து போராடுவதில் சிக்கல்களை சந்திக்கின்றனர்.

ஒரு முறை காமதிபுராவில் கௌரி ஒரு சிறு குழந்தை தனது அம்மாவின் துப்பட்டாவுடன் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது அந்தக் குழந்தையின் அம்மா குழந்தையையும் அதே அறையில் வைத்துக்கொண்டு ஒரு ஆணுடன் இருப்பதைக் கண்டார். அவர் தொழிலில் ஈடுபடும்போது குழந்தையை விட்டுச் செல்ல இடம் இல்லாததால்தான் இந்த நிலை என்பதை உணர்ந்தார்.

குழந்தைகள் இத்தகைய சூழலில் வளர்வதைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்த கௌரி இந்தக் குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த ஏதேனும் முயற்சி எடுக்கவேண்டும் என தீர்மானித்தார்.

”குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் தங்களது சிறிய வீட்டில் அம்மா தொழில் புரிவதைப் பார்த்தவாறு வளரும் சூழலானது பாதுகாப்பற்றதாகும்,” என்றார்.

அம்மா

கௌரி; காயத்ரியை வளர்த்தது போன்றே மற்ற பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சிறப்பான வாழ்க்கையை வழங்க விரும்புகிறார்.

காயத்ரி அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரைக் கண்டார் கௌரி. காயத்ரியை கொல்கத்தாவின் சிகப்பு விளக்கு பகுதியான சோனாகாச்சியில் விற்றுவிடுவார்கள் என கௌரி பயந்தார். 2001-ம் ஆண்டு அவர் காயத்ரியை தத்தெடுத்து கல்வி, உணவு, சுகாதாரம், இருப்பிடம் என முழு ஆதரவும் பராமரிப்பும் வழங்கத் தீர்மானித்தார்.

தற்போது 17 வயதாகும் காயத்ரியை கௌரி படிப்பிற்காக போர்டிங் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். 

”காயத்ரி வலிமையான சுயசார்புச் சிந்தனையுடைய பெண். இவர் மற்றவர்களுக்கு உதவும் நிலையில் உள்ளார். இதற்கு முன்பு அவருக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் அனைத்தும் இனி அவருக்கு கிடைக்க உள்ளது,” என்றார் பெருமிதத்துடன்.

திருநங்கையின் மகள் என காயத்ரியை பலர் கேலி செய்துள்ளனர். எனினும் அரவாணி சமூகத்திலிருந்து வருவதை நினைத்து பெருமை கொள்ள காயத்ரிக்கு கற்றுக்கொடுத்தார் கௌரி. மற்ற பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இதையே பின்பற்ற திட்டமிட்டுள்ளார்.

”அவர்கள் தங்களது அம்மாவின் தொழிலை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றி நயமாக கையாளவேண்டும் என நான் விரும்புகிறேன். விபச்சார விடுதி வாழ்க்கையின் பயங்கரத்தைப் பார்த்து அந்தக் குழந்தைகள் வளரவில்லை எனில் அவர்கள் தங்கள் அம்மா வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களை சிறப்பாக உணர்ந்து தங்கள் அம்மாவை மரியாதையுடன் நடத்த முடியும்,” என்றார்.

இல்லம்

’நானி கா கர்’ கௌரியினுடைய வாழ்க்கையின் லட்சியத்திற்கான அடையாளமாகும். குழந்தைகளுக்கான இந்த பாதுகாப்பான புகலிடத்தை சாத்தியப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் தன்னை முழுமையாக அர்பணித்துள்ளார் கௌரி. இந்தக் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றை வழங்கி பாதுகாப்பான எதிர்காலத்தையும் சிறப்பான வாய்ப்புகளையும் கண்ணியமான வாழ்க்கையையும் வழங்க விரும்புகிறார்.

குழந்தைகள் பிறந்த சூழலில் இருந்து தள்ளி நகருக்கு வெளிப்புறத்தில் ’நானி கா கர்’ கட்டிமுடிக்கப்படும். அவரது கனவு திட்டம் குறித்து அவர் விவரிக்கையில், 

“வசதிகளைப் பொருத்தவரை மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதீயாகவும் நலமாக இருப்பதுடன் இருப்பிடம், உணவு, உடை போன்றவை அடிப்படைத் தேவைகளாகும். திருநங்கை மருத்துவர் ஒருவர் உள்ளார். அவர் தேவை எழும்போது இல்லத்திற்கு வந்து மருத்துவப் பராமரிப்பு வழங்குவார்.”

கட்டிடக்கலைஞருடன் வீட்டின் கட்டமைப்பை திட்டமிடும் பணியை துவங்கியுள்ளார் கௌரி. இரண்டு மாடியுடன் கூடிய வீடு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தளத்தில் சமையறலையும் பொதுவான இடமும் இருக்கும். இரண்டாம் தளத்தில் தங்குமிடமும் கழிவறைகளுக்கும் இருக்கும். அத்துடன் குழந்தைகளுக்கான ஒரு சிறிய மருத்துவ அறையும் இருக்கும். போலியோ மருந்துகள் வழங்குதல், தடுப்பூசிகள் போடுதல் உள்ளிட்டவற்றை நாங்களே கையாள்வோம், என்றார்.

”கல்வியைப் பொருத்தவரை ஆரம்பக் கல்வியுடன் துவங்க திட்டமிட்டுள்ளோம். வருங்காலத்தில் சில தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இதனால் இந்தக் குழந்தைகளுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்,” என கௌரி விவரித்தார்.

இந்த வீட்டில் 70-80 குழந்தைகள் வசிக்க முடியும். இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும் இடமாக இருக்கும் என கௌரி நம்புகிறார். இந்த இடத்தில் குழந்தைப்பருவத்தின் கள்ளம் கபடமற்ற குணாதிசயத்தை அவர்களால் கொண்டாடமுடியும். சமமான வாய்ப்புகளுடன் சுதந்திரமான நபர்களாக வளர முடியும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா