IPL போட்டி விளம்பரங்களில் பாலின் வேறுபாடு எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது 

0

பாலின வேறுபாடு குறித்த விழிப்புணர்வினால் எதிர்மறை விளைவுகளும் உள்ளது. இது எங்கும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள். எல்லாவற்றிலும் இதைப் பார்க்கத் தொடங்குவீர்கள். அதை கவனிக்கும்போது சுட்டிக்காட்டுவீர்கள். அப்படிச் செய்யும்போது மோதல் ஏற்படும். ஏனென்றால் நீங்கள் சொல்லும்வரை இதைப் பலர் கவனித்திருக்கமாட்டார்கள். இந்த விளம்பரங்களும் அதுபோல தெளிவற்றதுதான். பாலின வேறுபாட்டை எவ்வாறு தூண்டுகிறது என்பதை கவனிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கருத்துக்கள், பாகுபாடுகள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துக்கள் போன்றவற்றை நுட்பமாக எடுத்துரைக்கிறது. இவை சிறிதாக ஆரம்பித்து மெல்ல மெல்ல பூதாகரமாக வெடிக்கிறது. ஏனென்றால் IPL-ன் போது விளையாட்டுக்கு இணையாக இதுவும் விஷம் போல மெதுவாக செலுத்தப்படுகிறது.

இவை மோசமான விளம்பரம் என்று சொல்லவில்லை. ஆனால் விளம்பரப்படத் தயாரிப்பாளர்களுக்கும் படத் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பொதுவான கேள்வி எழுகிறது - கோழியிலிருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது போன்ற கேள்வி அது. ஊடகங்கள் சமூகத்தை பிரதிபலிக்கிறதா அல்லது சமூகம் ஊடகங்களை பிரதிபலிக்கிறதா என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு யார் பொறுப்பாக நடந்துகொள்ளப்போகிறார்கள்.


OPPO, பிரகாசம் மற்றும் அழகு

ராதிகா ஆப்தேவின் வீடியோவைப் பார்த்தபடியே தொடங்கியது என்னுடைய நாள். இதைப் பார்த்ததும் எப்படிப்பட்ட உடல்கூறும் அழகுதான் என்று எனக்குத் தோன்றியது. அதே சமயம் குழப்பமான விவாதத்திற்குறிய இந்த வருட IPL பாடலைப் பார்த்தபடியே என்னுடைய நாள் முடிவடைந்தது. OPPO விளம்பரம். சோனம் கபூரின் அழகிய முகத்தில், வாய்ப்பு கிடைத்தால் ஒரு சில மாற்றங்களைச் செய்து அழகை மேலும் கூட்டலாம் என்கிறது இந்த விளம்பரம். இதென்ன சிறந்த இந்திய ஃபோட்டோகிராபர்கள் துரத்தும் அழகுக்கே பிடிபடாத அளவிளான அழகு?

இந்தியா போன்ற ஒரு முரண்பாடான சமுதாயத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வருடங்கள் முன்னோக்கியும் அதே சமயம் பின்னோக்கியும் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருபுறம் கருப்பு நிறத்தில் இருப்பவர்கள் கண்களில் மையுடன் பொது இடங்களில் தன்னம்பிக்கையுடன் கடந்து செல்வதை பார்க்கமுடிகிறது. மற்றொருபுறம் இந்த மொபைல் கம்பெனி என்னவென்றால் ஏற்கெனவே வெள்ளைத்தோலில் இருக்கும் நடிகைக்கு மேலும் ஒரு லேயர் ஃபவுண்டேஷனை போடுகிறார்கள். மொத்தத்தில் 3 லேயர் வொயிட்வாஷ் நடக்கிறது.

அந்த விளம்பரப் பாடல் நீங்கள் அழகாக இருக்கவேண்டுமானால் பிரகாசமான வெள்ளை நிறத்தில் இருக்கவேண்டும் என்று சொல்கிறது.

இந்தத் தலைமுறையினரின் பெருமை மற்றும் பாதுகாப்பற்ற நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதுதான் இன்றைய விளம்பரங்களின் அடிப்படையாக இருக்கிறது. நமக்குத் தகுந்த அல்லது தேவையானவற்றின் விளம்பரமாக இல்லாமல் தேவையில்லாத பொருட்களை தினமும் பார்க்கச்செய்து அதன் மேல் ஆர்வத்தை அதிகரிக்கச்செய்து ஏமாற்றுகிறது.

ஒரு புகழ்பெற்ற நடிகை செல்ஃபி எடுக்கிறார். உடனே அவசர அவசரமாக ஹ்ருதிக் ஃப்ரேமுக்குள் நுழைந்து அவரை அழகாக்குவது போல் சித்தரித்திருப்பது இந்த விளம்பரத்தின் அடிப்படைத் தவறு என்று எனக்குத் தோன்றுகிறது.Zivame, விற்பனையாளருக்கு பிடித்த ப்ரா

என்னைப்பொருத்தவரை இது ஒரு ஸ்டார்ட் அப்பாக இல்லாமல் ஒரு இயக்கமாக பார்க்கப்பட்டது. பண்புகளை விளக்கவுரையாகவோ அல்லது ஒரு பிரசங்கமாகவோ அளிக்கவில்லை. மூடிய பெட்டிக்குள் நீங்கள் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும்போது ஒரு சுத்தமான காற்றின் வாசனை மெல்ல வருவது போல மெல்ல மெல்ல நம்முள் செலுத்தப்பட்டதாகத் தோன்றியது. 20களில் இருக்கும் ஒருவர் தொழில்முனைவைத் தொடங்குவது குறித்து படித்ததும் நாம் அப்படித்தான் நினைத்தேன். ஒரு பெண்ணிடம் அவளது உட்புற அழகை பயமின்றி தழுவச் சொன்னது. அவளுக்கு எது பிடிக்கும் என்றும் அவளது துணைக்கு எது பிடிக்கும் என்றும் ஆராயச்சொன்னது. ஒரு பெண் இவ்வாறு ஆராய்ந்து பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை என்று எடுத்துரைத்தது. இதிலுள்ள கட்டுப்பாடுகளை எதிர்க்கவும் பாதுகாப்பின்மையை தகர்த்தெறியவும் Zivame போராடியது.

இதை இப்படியே சற்று நிறுத்திவிட்டு தற்போதைய IPL-ல் ஒளிபரப்பாகும் Zivame விளம்பரத்தைப் பார்ப்போம். “மார்க்கெட்டிற்கு சென்று ப்ரா வாங்குவது எவ்வளவு தர்மசங்கடமாக இருக்கிறது?” என்றுதான் இன்றைய விளம்பரமே தொடங்குகிறது.

உள்ளாடை வாங்குவதில் இருக்கும் தயக்கங்களிலிருந்து உங்களை மீட்பவராக சித்தரித்தார்களே? ஆனால் இப்போது அவர்களின் வார்த்தைகளுக்கும் நேரெதிராக அவர்களே மற்றொரு விளம்பரத்தை ஒளிபரப்புகிறார்களே?

இந்த விளம்பரத்தைப் பொருத்தவரை என்னுடைய கருத்து என்னவென்றால் மற்ற அழகு சாதனப் பொருட்களைப் போல இந்த தயாரிப்பையும் ஊக்குவிக்கவே அவர்கள் பெண்களின் பாதுகாப்பின்மையை தூண்டிப்பார்க்கிறார்கள். ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தில் சொல்வது போல வெள்ளையாக இல்லாமல் சற்று மங்கலான நிறத்தில் இருப்பது மகா தவறு என்பது போலல்லவா இந்த விளம்பரமும் இருக்கிறது?

“மக்கள் அதிகம் விமர்சிக்கிறார்கள்” என்கிறார். ஆனால் ஒரு கடைக்குச் சென்று உள்ளாடை வாங்குவதற்கு இன்று யாரும் தயங்குவதில்லை.

தற்போதைய நிலையைதான் இந்த விளம்பரம் பிரதிபலிக்கிறது என்று ஒரு சிலர் சொல்லலாம். ஆனால் அபத்தமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நம் வாழ்க்கை முறையை எப்போது நாம் மாற்றத்தொடங்கினோம்?

துன்புறுத்தல்களை தவிர்க்க ஒரு பெண் வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான் சிறந்தது என்று அவரது நலம்விரும்பி அறிவுரை அளிப்பதற்கு இணையாகதான் இருக்கிறது இந்த விளக்கம்.

ஆன்லைனில் வாங்குவதை ஊக்குவிப்பதுதான் Zivame வின் குறிக்கோள். ஆனால் அதற்காக ஒரு சராசரி பெண்மணி கடைக்குச் சென்று ப்ரா வாங்குவதை (அதாவது ஆஃப்லைனில்) பெரிய குற்றமாக சித்தரிக்கவேண்டிய அவசியமில்லை.


டாடா ஸ்கை

பல ஜோடிகளை பல விதங்களில் பல கோணங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்த விளம்பரம் காட்டுகிறது. டாடா ஸ்கையின் மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களினால் பல ஜோடிகளின் உறவு மேம்படவும் அன்பு அதிகரிக்கவும் உதவுவதாக காட்டுகிறது.

ஒரு விளம்பரத்தில் கணவன் மனைவி இருவரும் பணிக்குச் சென்று களைத்துப்போய் வீடு திரும்பியிருக்கிறார்கள். சாப்பிடும்போதான ஒரு சிறிய உரையாடலில் அவர்களின் பணிப்பெண் எவ்வளவு பிரமாதமாக பாஸ்தா தயாரித்துள்ளார் என்று மனைவி குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் அனைத்தையும் ஆமோதிக்கிறார் கணவர். பணிப்பெண் அன்று வந்திருக்கமாட்டார் என்பது திடீரென்று மனைவியின் நினைவிற்கு வருகிறது. அவரது கணவர்தான் கஷ்டப்பட்டு பாஸ்தாவை தயாரித்துள்ளார் என்று தெரிகிறது. அவரது கண்கள் அன்பால் நிறைகிறது. ஆச்சரியத்தில் விரிகிறது. என்னைக்கேட்டால் கொஞ்சம் அதிகமாகவே விரிகிறது என்று சொல்வேன்.

இப்படி யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை மனைவி வரிந்து கட்டிக்கொண்டு டின்னர் சமைத்தார் என்று வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட தாக்கம் இருந்திருக்குமா? பாராட்டு? ஆம், நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அதிர்ச்சி, வியப்பு, பாசப்பொழிவு - இதுபோன்ற வெளிப்பாடு இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஒரு முழுநீள திரைப்படத்தில் ஒரு அங்கமாக இப்படி ஒரு காட்சி வந்து போயிருந்தால் ஒருவேளை அதை வளர்ச்சியாக பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு விளம்பரப் படத்தில் இதையே மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கணவர் சமைத்த விஷயத்தை நம்பமுடியாமல் அகல விரியும் கண்கள்தான் முக்கிய பன்ச்சாக இருக்கும்போது, இது ஏதோ ஒரு அசாதாரண சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு புதுமையின் காரணமாக நம் கவனத்தை ஈர்ப்பதாக காட்டுகிறது. இதுவே ஒரு பெண் சமைத்தால் அது இவ்வாறாக விளம்பரத்தில் அவளுக்கு சமர்ப்பிக்கப்படுமா?

நமது ஹெர் ஸ்டோரியின் ஒரு பிரச்சாரத்தில் சொல்வது போல, “ஒரு கணவனை சமைக்கச் சொல்வது அவ்வளவு நன்றாக இல்லை. அதேபோல் மனைவி செய்துகொண்டிருப்பது வழக்கமான ஒன்றும் இல்லை”. சுமைகளை சரியானபடி பகிர்வது வாஷிங் மெஷினுக்கு மட்டும் நல்லதல்ல. அது அனைத்திற்கும் பொருந்தும்.

விளம்பரங்களில் உபயோகிக்கும் வார்த்தைகளும் வெளிப்பாடுகளும் நிஜ உலகில் நடக்கும் அதே வேகத்தில் இல்லை என்கிறார்கள் சில விமர்சகர்கள்.கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா எனும் கேள்வி ஒருபுறமிருக்க, எதற்கு முதலில் கவனம் செலுத்தினால் மற்றதும் சேர்ந்து வளர்ச்சியடையும் என்பதை முடிவு செய்யவேண்டும்.

ஆக்கம் : பின்ஜால் ஷா

தமிழில் : ஸ்ரீ வித்யா