ஆண்களிடம் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?  

0

பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்க சிந்தனையை பெரும்பான்மையாகக் கொண்ட சமூகத்தில் சிக்கித் தவித்த பெண்கள், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சாதனை படைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போதைய பெண்களின் இந்த நிலையைக் கண்டு பெருமிதம்கொள்ளும் நான், நமது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஆண்களும்தான் இவை சாத்தியமானதற்கு காரணம் என்பதை மறுக்க மாட்டேன்.

நமது சமூக சூழலில் பெண்கள் இணையான உரிமைகளைப் பெற வேண்டும் என எண்ணுபவர்கள் பலரும், ஆண்களை தமது எதிராளியாகவே பாவிக்கின்றனர்.

பெண்களின் உரிமைக்காக கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் போராடிய சூசன் பி. அந்தோணி ‘ஆண், எல்லா தளங்களிலும் பெண்ணை தனது இணையாக எண்ணும் காலம் வரும். அந்தக் காலம் அமையும்போதுதான் மனிதகுலம் முன்னேற இயலும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பாதையை நோக்கிப்போகத் தொடங்கிய ஆண்கள், பெண்ணின் சக்தியை உணர்ந்து ஏற்றுக்கொண்டனர். தமது துறையில் வெற்றியடையும் பெண்களும், இயல்பாகவே ஆணின் ஆதரவின் சிறப்பைப் புரிந்துகொண்டனர். பெண்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆண்களுக்கு நிறைய புதிய தகவல்கள் உள்ளதைப் போலவே பெண்களுக்கும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை பல உண்டு.

வாழ்வை போராட்டக் களமாக பார்ப்பதை தவிர்க்கலாம்

பெரும்பாலான பெண்கள் வாழ்க்கையை ஒரு போராட்டக்களமாகவே எண்ணுகின்றனர். ஆனால், ஆண்கள் பிரபஞ்சமே தமக்கு உறுதுணையாக இருப்பதாக உணர்கின்றனர். பெண்களின் இந்த எண்ணத்துக்கு ஒவ்வொரு விடியலிலும் அவர்கள் பெரும் மோசமான அனுபவங்களே பெண்களின் சமூக சூழல்தான் காரணம். ஆனால் இந்தப் பார்வை நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு ஆணையும் நமது எதிரியாக பாவிக்க வைக்கின்றது. பாலின பாகுபாட்டைப் போக்க நாம் ஆண்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளலாம் என்ற எனது கருத்து பெண் உரிமைப் போராளிகளை கோபத்துக்குள்ளாக்கலாம். சக மனிதர் உடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டியதுதானே இன்றைய சமூகத்தின் தேவை.

எதார்த்தமான எதிர்ப்பார்ப்புகளை வகுத்தல்

சமூகம் பெண்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாத எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, உடனடி சமையல் பொருட்களை விற்கும் விளம்பரம், குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பங்களை கேட்டு அவற்றை மகிழ்ச்சியுடன் சமைத்துத்தரும் குடும்பத்தலைவிகளை காண்பிக்கின்றது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எந்தப் பெண்ணால் மகிழ்ச்சியுடன் சமைக்க முடியும். இதைவிட கொடுமையான எதிர்பார்ப்புகளை பெண்கள் தாமேதான் வளர்த்துக்கொள்கின்றனர். எல்லாப் பெண்களும் தமது துறையில் வெற்றியடைவதுடன், ஒரு சிறப்பான மனைவியாகவும், இனிய தாயாகவும், இருபத்தாறு இன்ச் இடையுடனும் இருக்க விரும்புகின்றனர். என்னால் இவை அனைத்தையும் சரிவர கையாள முடியாது என எண்ணுகின்றாயா? என்று உடனடியாக பொருமுகின்றனர் பெண்கள். ஆண்கள் இதுபோன்ற ஒரு சூழலை விவேகத்துடன் அணுகுவர் என்பதுதான் உண்மை.

குற்ற உணர்வுடன் உலா வருவதை தவிர்த்திடுங்கள்

நான்கு நாட்கள் தொடர்ந்து வேலைப் பளுவால் வீட்டுக்குத் திரும்ப நேரமானலும், ஐந்தாவது நாளில் நண்பனுடன் மாலை நேரத்தை நிம்மதியாக ஆண்களால் கழிக்க முடியும். அவன் ஒருபோதும், தனது குழந்தை மீது அக்கறை இல்லாதவாக தன்னை நினைத்து நடு இரவில் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு புலம்புவதில்லை. இயற்கையாகவே நாம் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றோம் என்றாலும், நாம் செய்த நல்ல விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து மகிழ கற்றுகொள்ளவேண்டும்.

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்

ஆண் கணவனாவதாலோ, தந்தையாவதாலோ தனது நட்பு வட்டாரத்தை இழப்பதேயில்லை. ஆனால், பெண்களின் ஆசைத் தோழிகள் காலம் மாற மாற பிறந்த நாளுக்கும், நண்பர்கள் தினத்துக்கும் வாழ்த்து தெரிவிக்கும் ஒருவராக போய்விடுவர். இதற்குக் காரணம் பெண் தனது தோழியை தனக்கு போட்டியாக கருதுவதுதான். பெண்கள் குடும்பம் மற்றும் துணையிடம் இருக்குமளவுக்கு, நண்பர்களிடம் உண்மையாக இருப்பதில்லை. அவர்கள் தமது நட்பினை காப்பாற்றிக்கொள்ள முழு முயற்சி எடுப்பதில்லை என்று கூறலாம். ஒரு வெற்றிகரமான பெண்ணாக இருப்பதற்கு தோழியுடன் நேரத்தை செலவிட வேண்டியது அவசியம்.

வூடி ஆலன் சொன்னதைப்போல், ‘அனைவரும் நகைச்சுவை உணர்வுடன் இருந்திருந்தால் உலகம் வித்தியாசமாக இருந்திருக்கக்கூடும்.’ சக மனிதரிடம் மதிப்புடனும், மரியாதையுடனும் பழகினாலே போதும். உலகம் அமைதியான பாதையில் முன்னேறும்.

ஆக்கம்: ஷரிக்கா நாயர் | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்!

பெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்!

பெண்கள் சாதனையாளராக மாற தகர்த்தெறிய வேண்டிய 10 நம்பிக்கைகள்!