விலங்குகள் நலனில் அக்கறை காட்டும் ஆக்ராவைச் சேர்ந்த ஆர்வலர்!

0

பல ஆண்டுகளுக்கு முன்பு வினீதா சபர்வாலின் காஸ்பர் என்கிற நாயின் மீது மது போதையில் இருந்த ஓட்டுநர் பேருந்தை ஏற்றிவிட்டார். இதனால் அந்த நாய் உயிரிழந்தது. இந்த சம்பவத்தால் மிகவும் மனமுடைந்து போனார் வினீதா. சிறு வயது முதலே விலங்குகள் மீது அன்பு கொண்ட இவர் இந்த சம்பத்திற்குப் பிறகு விலங்குகளின் பாதுகாப்பு குறித்து கவலைகொண்டார். அன்றைய தினமே நிச்சயம் இதற்கு தீர்வுகாணவேண்டும் என உறுதியெடுத்துக்கொண்டார்.

கணவரின் உதவியுடன் ஆக்ராவில் ஒரு வீடு வாங்கி அதற்கு காஸ்பர் இல்லம் என பெயரிட்டார். காயம்பட்ட, கைவிடப்பட்ட நாய்களையும் சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளையும் மீட்கத் தொடங்கினார். தற்போது வேதனையில் வாடும் நாய்களுக்கான இந்த மறுவாழ்வு மற்றும் அடிப்படை பராமரிப்பு மையத்தில் முழுமையாக செயல்படக்கூடிய கிளினிக் உள்ளது. நாய்கள், மாடுகள், கழுதைகள் என சராசரியாக 1,200 விலங்குகள் ஒவ்வொரு ஆண்டும் காஸ்பர் இல்லத்திற்கு வருகிறது. இந்த இல்லத்தில் எந்த நேரமும் 50க்கும் அதிகமான நாய்கள் தஞ்சமடைந்திருக்கும்.

நன்கொடை அளிப்பவர்கள் மற்றும் விலங்குகளை நேசிப்பவர்களின் உதவியைக் கொண்டே இந்த வசிப்பிடம் பெருமளவில் செயல்படுகிறது. எனினும் பெரும்பாலானோர் இந்த நோக்கத்திற்காக அதிகம் இரக்கப்படுவதில்லை. சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பணியைக் கண்டு மக்கள் அதிகம் கேலி செய்ததாகவும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறுகிறார் வினீதா.

’டைம்ஸ் ஆஃப் இண்டியா’விற்கு அவர் தெரிவிக்கையில்,

“விலங்குகளுக்கு எதிராக மட்டுமின்றி அவற்றை பராமரிக்க முன்வரும் நபர்களுக்கு எதிராகவும் காணப்படும் விரோத நடத்தைகளே என்னை ஒரு ஆர்வலராக மாற்றியது. நானும் என்னுடைய நண்பர்களும் தடுப்பூசி போடும் முயற்சியில் ஈடுபடும்போது மக்கள் எங்களை அவதூறாகப் பேசி விரட்டினாரர்கள். விலங்குகளை வதைப்பதை இவர்கள் பெருமையாக கருதுகின்றனர். இது வெறுக்கத்தக்க செயலாகும்,” என்றார்.

ஆனால் வினீதா இந்த சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்திக்கொண்டு விலங்குகள் நலனுக்கான நடவடிக்கைகளில் உள்ளூர் அதிகாரிகளை ஈடுபடுத்த முயன்றார். பல முயற்சிகளில், குறிப்பாக விலங்குகள் காப்பகம் அமைப்பத்திற்காக பிரத்யேகமான நிலம் ஒதுக்குவது தொடர்பான முயற்சியில் தோல்வியுற்றார்.

நாய்கள் முறையற்ற வகையில் இனப்பெருக்கம் செய்யப்படுவதைக் கண்டு வினீதா கோபம் கொண்டார். அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் மனிதாபிமானமற்ற முறையில் இனப்பெருக்கம் செய்யப்படுவதை ‘பப்பி மில்ஸ்’ என்றழைக்கின்றனர். வினீதா மற்ற நகரங்களில் உள்ள விலங்குகள் நல அமைப்புகளுடன் இணைந்து இந்த பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அனுதாபம் கிடைக்காத நிலையில் எவரும் இந்த முயற்சியை கைவிடவே எண்ணுவார்கள். ஆனால் எந்த அளவிற்கு அக்கறையின்மை காணப்படுகிறதோ அதே அளவு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், விலங்குகள் நலனில் அக்கறை காட்டி வருவதையும் காணமுடிகிறது என்பதால் வினீதா தொடர்ந்து போராடினார். இவர்களது உதவியுடன் ஆக்ராவில் ஒரு மீட்புக் குழுவையும் உருவாக்கியுள்ளார்.

”ஒரு விலங்கை மீட்கும் பணியில் ஈடுபடும்போது இளைஞர்கள் நேரத்தையோ தொலைவையோ ஒரு தடையாக பார்ப்பதில்லை. அவர்களது உந்துதலே என்னை தொடர்ந்து செயல்பட வைக்கிறது,” என்றார் வினீதா.

கட்டுரை : THINK CHANGE INDIA