இதயத் துடிப்பு மற்றும் நுரையீரலின் ஒலியை  துல்லியமாக பதிவு செய்யும் டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்!

அரவிந்த் பத்ரிநாராயணன், சுமுக் மைசூர் இருவரும் இணைந்து ஹெல்த்கேர் துறை நிபுணர்களுக்கு பயனுள்ள ’தாள்’ (Taal) என்கிற மலிவு விலையிலான டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கியுள்ளனர்...

0

அரவிந்த் பத்ரிநாராயணன் ஒரு கால்நடை மருத்துவர். அதிக சத்தமான சூழலில் பணிபுரிந்து வந்தார். எனினும் நாய் குரைக்கும் சத்தமும் பூனை கத்தும் சத்தமும் ஸ்டெதஸ்கோப் பயன்படுத்துவதை கடினமாக்கிவிடும்.

”மனிதர்களுக்கான ஹெல்த்கேர் பிரிவிற்கும் இது பொருந்தும் என்கிறார் அவர். தனியார் மருத்துவமனையாகவோ அல்லது விலையுயர்ந்த மருத்துவமனையாகவோ இருந்தாலொழிய அமைதியான சூழல் நிலவுவது கடினம்,” என்கிறார்.

ஆரம்பத்தில் இதற்கான தீர்வை தானே உருவாக்க நினைத்தார் அர்விந்த். ஆனால் இது குறித்து அதிகம் ஆராய்ந்தபோது ஸ்டெதஸ்கோப்பில் ஒலி சிறப்பாக கேட்டால் அது மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்தார்.

”மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒலி குறித்து படிக்கும்போது அதை விளக்கங்கள் வாயிலாகவே தெரிந்துகொள்கின்றனர். இது குறித்த பதிவுகள் இல்லாதபோது ’படபடக்கும் இதயத்துடிப்பு’ என அது குறித்து விவரிக்கும் வார்த்தைகளைச் சார்ந்தே புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

”இதைப் புரிந்துகொள்ள என்னுடைய பேராசிரியர் ஒரு குதிரையை கற்பனை செய்துகொள்ளச் சொன்னது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இந்த வார்த்தைகள் உருவாக்கப்பட்டபோது குதிரைகள் பொதுவாக காணப்பட்டது. ஆனால் இன்று இந்த வார்த்தைகளை கற்பனை செய்துதான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.”

ஒலியைத் தெரிந்துகொள்வதற்கான மாதிரிகள் எதுவும் இல்லாதபோது மருத்துவர் அனுபவம் வாயிலாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஒலியை சிறப்பாகக் கேட்க உதவும் விதத்திலும் இதயத்துடிப்பு மற்றும் நுரையீரல் ஒலிகளை பதிவு செய்யும் விதத்திலும் ஒரு ஸ்டெதஸ்கோப்பை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார் அரவிந்த்.

இடைவெளியைக் கண்டறிதல்

பயோடெக்னாலஜி பொறியாளர் மற்றும் ஆய்வாளரான சுமுக் மைசூர் என்பவருடன் இணைந்துகொண்டார். டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பிற்கான தேவை இருப்பினும் அப்படிப்பட்ட சிறப்பான டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் சந்தையில் இல்லாததை இவ்விருவரும் கண்டறிந்தனர். ”பாரம்பரிய ஸ்டெதஸ்கோப் ஒரு பழமையான சாதனம்,” என்றார் அரவிந்த்.

”இப்படிப்பட்ட ஸ்டெதஸ்கோப் இல்லாததை நூறாண்டுகளுக்கு முன்பே மக்கள் அறிந்தனர். மின்னணு ஸ்டெதஸ்கோப் உருவாக்க முயன்றனர். எனினும் சமீபத்திய காலம் வரை அப்படிப்பட்ட சாதனத்தை உருவாக்குவதற்கான செலவு மிகவும் அதிகமாகவே இருந்தது. ஒலி செயலாக்கம் என்பது விலை உயர்ந்த அதிக திறன் தேவைப்படுகிற செயல்முறையாகும். செல்ஃபோன் புரட்சி காரணமாகவே தொழில்நுட்பத்தை மலிவு விலையில் அணுக முடிந்தது.

ஆனால் செல்ஃபோன் புரட்சி நெடு நாட்களுக்கு முன்பாவே துவங்கப்பட்டுவிட்டது. இருந்தும் விலை மலிவான டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்குவதற்கான வழிமுறைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? 

“ஸ்டெதஸ்கோப் நிறுவனங்கள் விலை உயர்வான டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கவே முயற்சித்தனர். இவை இதய நோய் நிபுணர்களை இலக்காகக் கொண்ட முயற்சியாகும். இதய நோய் நிபுணர்களுக்கானது என்பதால் மிகவும் கடினமான நோயையும் கண்டறிய உதவக்கூடிய நுண் ஓசைகளைத் தெரிந்துகொள்ள விலையுயர்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் விலை 150 முதல் 300 அமெரிக்க டாலர்களாகும். எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இருக்காது.”

தீர்வு

”நாங்கள் வேறொரு பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்பினோம்,” என்றார் அரவிந்த்.

”நாங்கள் இதய நோய் நிபுணர்களை இலக்காகக் கொள்ளவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறையின் பிற சேவையளிப்போர் என ஒட்டுமொத்த மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது ஆரம்ப சுகாதார முறையின் ஒரு பகுதியாக நோயாளிகளை ஆய்வு செய்ய உதவும் டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்க விரும்பினோம்.”

எனவே இவ்விருவரும் இணைந்து தாள் (Taal) என்கிற டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கினர். ஹெல்த்கேரின் ஆரம்பகட்ட நோய்கண்டறியும் நிலையில் உதவும் இந்த டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பின் விலை 50 அமெரிக்க டாலர்கள். ஆரம்ப நிலை என்பது சில தரவுகளுடன் தற்காலிகமாக நோய் கண்டறியப்படும் தருணமாகும். நோய் கண்டறிதலை உறுதிப்படுத்த விலையுயர்ந்த பரிசோதனைகள் அவசியம். இந்தியாவில் நோய் கண்டறியும் நிலையை உறுதிப்படுத்தும் செயல்முறை தவிர்க்கப்பட்டு விடுகிறது. 

”மேற்கத்திய முறையில் அதிக வளங்கள் தேவைப்படுகிற மாதிரியுடன் போட்டியிடவேண்டிய அவசியம் இல்லை. சில மிகப்பெரிய நிறுவனங்கள் எங்களது தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுகிறது. இவை தொலை மருத்துவ நிறுவனங்களாகும். இந்தப் பிரிவில் மருத்துவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் அடிப்படை அறிகுறிகளைக் கொண்டு நோயாளியின் முகத்தைப் பார்த்து சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். ஒருவர் தனது இதயத்துடிப்பையும் பிற ஓசைகளையும் பதிவு செய்து தொலை தூரத்தில் உள்ள மருத்துவருக்கு அனுப்பி அவர் சிறப்பாக நோயைக் கண்டறியை ’தாள்’ உதவுகிறது.

அரவிந்த் மிருதங்கம் வாசிப்பார். சுமுக் ‘மச்சாஸ் வித் ஆட்டிட்யூட்’ என்கிற ஹிப் ஹாப் குழுவில் ஒருவர். இவர்களது இசை சார்ந்த அறிவு ’தாள்’ உருவாக்க உதவியது.

”சுருக்கப்படும் முறை எவ்வாறு செயல்படும், எந்த வகை மைக்ரோஃபோன் பயன்படுத்தலாம் போன்ற தகவல்களை இசை வாயிலாகவே நாங்கள் தெரிந்துகொண்டோம்,” என்றார் அரவிந்த்.

செவிலியர்களுக்கு உதவுதல்

செவிலியர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது ’தாள்’.

”ஒரு இதய நோய் நிபுணர் ஆகவேண்டுமானால் பதினைந்தாண்டுகள் செலவிடவேண்டும். ஒரு புகழ்பெற்ற மருத்துவர் ஆக கூடுதலாக 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும். இதற்குப் பல காரணங்கள் இருப்பினும் முக்கியக் காரணம் பயிற்சி இருந்தால் மட்டுமே ஒருவர் தேர்ந்த வெற்றியாளராக முடியும். துல்லியமாக நோயைக் கண்டறியவேண்டுமெனில் ஒருவர் அதிக எண்ணிக்கையிலான இதயத்துடிப்பைக் கேட்டுப் பழக வேண்டும். டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பில் ஓசைகள் பதிவாகும் காரணத்தால் ஒருவர் அறிகுறிகளை திரும்பத் திரும்ப கேட்க முடியும். இது ஒருவர் தேர்ந்த இதய நோய் நிபுணராக உருவெடுக்க செலவிடப்படும் நேரத்தைப் பெரிதும் குறைக்கும்.

”முக்கியமாக செவிலியர்கள் இந்த ஸ்டெதஸ்கோப் கொண்டு நோயைக் கண்டறியலாம். இன்றைய இதய நோய் நிபுணர்கள் கண்டறிவதைப் போலவே செவிலியர்களும் கண்டறிவதற்கான திறனை இந்த டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் வழங்குகிறது.”

’தாள்’ பல முன்னேற்றங்களைக் கடந்து வந்துள்ளது. மருத்துவர்கள் தாங்கள் பதிவு செய்த தகவல்களை மற்ற மருத்துவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். இது நோய் கண்டறியும் முறையை மேம்படுத்த உதவுகிறது. கிராமப்புற மருத்துவத் துறை சார்ந்தவர்கள் ஓசைகளை சிறப்பாக புரிந்துகொள்ளலாம். ஆடியோ பதிவுகள் வாயிலாக மருத்துவக் கல்லூரி மாணவர்களை சோதிக்கவும் இந்த ஸ்டெதஸ்கோப் உதவுகிறது.

வருங்கால திட்டம்

மருத்துவத் துறை சார்ந்தவர்கள், 15-க்கும் அதிகமான நிறுவனங்கள் என பலர் ’தாள்’ சாதனத்தை பயன்படுத்த ஆர்வமாக உள்ள நிலையில் தற்போது மிகத் துல்லியமாக இந்த சாதனத்தை தயாரிக்கக்கூடிய உற்பத்தியாளரைக் கண்டறிவதில் இக்குழுவினர் சிரமத்தை சந்திக்கின்றனர்.

”முதல் சுற்று நிதியைப் பெற்றுள்ளோம். தினமும் மருத்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு சாதனம் தயாராக இருக்கிறதா என்று கேட்கின்றனர். சரியான உற்பத்தியாளரைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்,” என்றார் அரவிந்த்.

”நம் பெற்றோரின் காலகட்டத்தில் டிஜிட்டல் தெர்மாமீட்டர் மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இன்று அனைவரது வீட்டிலும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் உள்ளது. பெற்றோருக்கு அதை பயன்படுத்தத் தெரியும். காய்ச்சல் உள்ளதா என்றும் மருத்துவரிடம் கூட்டி செல்லவேண்டுமா என்பதையும் பெற்றோர்களால் தீர்மானிக்கமுடிகிறது. இதே போல் இதயத்துடிப்பையோ அல்லது நுரையீரலின் ஓசையையோ எப்போது மருத்துவரிடம் எடுத்துச் சென்று ஆலோசனை பெறவேண்டும் என்பதைப் பெற்றோர் டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பைக் கொண்டு புரிந்து கொள்வார்கள். மருத்துவப் பிரிவு ஒலி புரட்சிக்கான துவக்கப்புள்ளியில் இருக்கிறது,” என்றார் அரவிந்த்.

ஆங்கில கட்டுரையாளர் : ஜெய் விப்ரா

Related Stories

Stories by YS TEAM TAMIL