’நம்ம கடைக்கு வாங்க பட்டாசு வாங்குங்க’ ஆன்லைன் மூலம் தொழிலில் சிறக்கும் ராஜ சரண்யா!

0
”பட்டாசு என்றாலே பத்தடி தூரம் தள்ளிப் போகும் பெண்கள் மத்தியில் இந்த தொழிலை செய்து வெற்றி காணவேண்டும் என்ற நோக்கில் அதில் இறங்கினேன்...”

இப்படி தன்னைப்பற்றி பகிரத்தொடங்கினார், நான்காண்டுகளாக தொழில் முனைவராக சிறக்கும் ராஜ சரண்யா. அவர் தற்செயலாக பட்டாசுத் தொழிலில் கால் பதித்தது பற்றியும் அதுவும் இணையம் மூலம் அதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றது எப்படி என்பதை நம்மிடம் பகிர்ந்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ராஜ சரண்யா, 2012ம் ஆண்டு பொறியியலில் முதுநிலை பட்டபடிப்பை முடித்தவர். அண்ணா பல்கலைகழக அளவில் தங்கப் பதக்கம் பெற்ற அவருக்கு ஹைதராபாத் விப்ரோ சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால் சரண்யாவின் தந்தைக்கு அவரை ஹைதராபாத் அனுப்ப விருப்பம் இல்லாததால், உதவி பேரசிரியர் பணியை தேர்வு செய்துள்ளார். பின்னர் சில மாதங்களில் திருமணமும் முடிந்தது.

”என் கல்யாணம் வரையில் மற்ற பெண்களை போலவே பட்டாசு வெடிப்பதற்கு பயந்து கொண்டு இருப்பேன். ஆனால் சிவகாசியில் கம்பி மத்தாப்புகளை தயாரிக்கும் நிறுவனர் இல்லத்திற்கே மருமகளாய் சென்ற பின், வந்த ஆர்வம் காரணமாக திண்டுக்கல்லில் உரிமங்கள் அனைத்தும் பெற்று ஒரு பட்டாசு கடையை ஆரம்பித்தேன். அதை சென்னையில் விரிவுப்படுத்த எண்ணிய போதுதான் ஆன்லைனில் ஏன் மற்ற பொருள்களை போல் பட்டாசுகளையும் விற்கக்கூடாது என்று தோன்றியது,” என்றார்.

சரண்யாவின் கணவர் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையின் காரணமாக ’நம்மபட்டாசுகடை.காம்’ ’NammaPattasuKadai.com’ என்ற இணையதளத்தை தொடங்கினார். ஆரம்பித்த முதல் வருடமே Cash on Delivery மற்றும் Free Delivery வாயிலாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஆனால் டெலிவரி செய்வதில் தான் பல சிரமங்களை சந்தித்ததாக கூறுகிறார்.

ஒவ்வோரு வருடமும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது பட்டாசுகளை அறிமுகப்படுத்தி தரமான பட்டாசுகளை குறைந்த விலையில் விற்பனை செய்கிறேன். கடந்த நான்கு வருட உழைப்பின் பயனாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்று உள்ளேன்.

திருமணத்துக்கு பின் தொழில்முனைவில் ஈடுபடும் அனுபவம் குறித்து கேட்கையில்,

2014ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாயை தனது கணவர் உதவியுடன் வங்கியில் கடன்பெற்று மற்றும் 5 லட்சம் சேமிப்பு தொகையுடன் பட்டாசு கடையை ஆரம்பித்தார் ராஜ சரண்யா. அடுத்த ஆண்டு சென்னையில் விரிவுபடுத்த "NammaPattasuKadai.com என்ற இணையதளத்தை தொடங்கினார். ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள சவால்கள் பற்றி கேட்டபோது,

”ஆன்லைன் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசின் தரம், செயல்பாடு மற்றும் குறித்த நேரத்தில் டெலிவரி பற்றி நிறைய சந்தேகங்கள் எழும் அவற்றையெல்லாம் தொலைபேசின் மூலம் பேசி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்,” என்கிறார்.

விற்பனை மாதிரி மற்றும் வருவாய் பற்றி பகிர்ந்த சரண்யா, தங்கள் சொந்த தயாரிப்புகள் நேராடியாகவே வாடிக்கையாளர்களின் கைக்கு குறைந்த விலையில் சென்று அடைவதால் மக்களுக்கு திருப்தியுடன் வருடாவருடன் தங்களிடம் பட்டாசு வாங்குவதாக தெரிவித்தார்.

அதேபோல் வியாபாரத்தில் புதிய எண்ணங்களை புகுத்தி, வயது வரம்புக்கு ஏற்ப பலவகை பேக்கேஜ்களை நம்மபட்டாசுக்கடை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார் சரண்யா.

”நான்கு வயது முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளே எங்களுடைய விஐபி வாடிக்கையாளர்கள். அவர்களுக்காக கிட்ஸ் பிரிமியம் பேக்கேஜை அறிமுகம் செய்தோம், மற்றவருக்களுக்காக யூத் மற்றும் பேமிலி பேக்கேஜை அறிமுகம் செய்தோம்.”

ஆரம்பித்த முதல் வருடம் லாபம் குறைவே என்றாலும் அவை அனைத்தும் பட்டாசுகளாகவே தேங்கியது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த என்னுடைய மாதச் சம்பளம் அனைத்தையும் செலவிட வேண்டியதாக இருந்தது. ஆனால் அடுத்த வருடம் தன்னுடைய வாடிக்கையாளர்களின் சிபாரிசு மூலமாக விற்பனை அதிகரிக்கத் துவங்கியது என்றார்.

குழு மற்றும் செயல்பாடு

நம்மபட்டாசுக்கடை-ல் ஆறு பேர் பணிபுரிவதாகவும், தீபாவளி சமயத்தில் டெலிவெரிக்காக மேலும் ஆட்களை அதிகரிக்கத்துக் கொள்வதாகவும் கூறினார் ராஜ சரண்யா. 

”ஆரம்பத்தில் ஆன்லைனில் முப்பது வாடிக்கையாளர்கள் மட்டுமே பட்டாசு வாங்கினார்கள். ஒரே ஒரு வாடிக்கையாளருக்காக எண்ணூர் வரையிலும் அல்லது செங்கல்பட்டு வரையிலும் டெலிவெரிக்காக ஆள் செல்ல நேர்ந்தது. இருப்பினும் டெலிவெரிக்கு ஆகும் செலவுகளை நாங்களே ஏற்றுகொண்டோம்,” என்கிறார்.

NammaPattasuKadai.com இணையத்தை ஸ்டால்கள் மூலமாகவும், கூகிள் ஆட்ஸ் மூலமாகவம் விளம்பரம் செய்கிறார்கள். லாபமே இல்லையென்றாலும் தொடர்ந்து செய் என்று கணவரும்,  குடும்பத்தினரும் தனக்கு ஆதாரவாக ஊக்கமளித்ததே இன்றைய இந்நிலைக்கு காரணம் என்கிறார்.  

அடுத்தக்கட்டமாக சென்ற ஆண்டு வரை சென்னை முழுவதும் ஆன்லைன் டெலிவரி செய்த இவர்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்னனர்.

பெண் தொழில்முனைவராக, பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன என்று ராஜ சரண்யாவிடம் கேட்டபோது,

”படிப்பு மட்டுமே பிரதானமாக இருந்த எனக்கு கல்யாணத்திற்கு பின் நான் பார்த்த உலகம் என்னை ஒரு தொழில் முனைவராக உருவாக்கியது. எனது மாமனார் உருவாக்கிய இடத்தில் அமர்வதை விட எனக்கு என்று ஒன்று தனியாக நான் உருவாக்க நினைத்தேன். இரண்டு வருட போராட்டத்து பிறகுதான் என்னால் எழுந்து நிற்க முடிந்தது.”

அதேப்போல் ஒவ்வொரு பெண்ணும் சிந்தித்து தனக்குரியதை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கான தனி அடையாளத்தை காணவேண்டும் என்கிறார்.

வருடத்திற்கு ஒருநாள் வரும் தீபாவளியை நம்பி ஒரு ஊரே வருடம் முழுவதும் உழைத்து கொண்டு இருக்கிறது. ஆகவே சீனப் பட்டாசுகளை தவிர்த்து சிவகாசி பட்டாசுகளுக்கு ஆதரவு தாருங்கள் என்ற பொதுநலனுடன் கோரிக்கை விடுத்து விடைப் பெற்றார் ராஜ சரண்யா.

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan