இணைய பயிலறங்கு மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனம் ‘டிசையர்’

0

சந்தையில் 60 வெற்றிகரமான கல்வி ஸ்டார்ட் அப்கள் இருப்பதாக கல்வித்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆண்டுதோறும் 100-200 கல்வி தொடக்க நிறுவனங்கள் அறிமுகமாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாடத்திட்டம் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் திறன் பயிற்சி, தொழில் பாடதிட்டங்கள் மற்றும் ஆன்லைன் சான்றிதழ் வகுப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக கருதப்படுகிறது.

"கடந்த சில ஆண்டுகளில் கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப்கள் அதிகரிக்க காரணம் நாட்டில் இன்குபேட்டர்களின் எண்னிக்கை அதிகரித்திருப்பது மற்றும் சிலிக்கான் வேலி வெற்றியின் தாக்கம் ஆகியவையே காரணம்” என்று 'டிசயர்.காம்' (DeZyre.com ) இணை நிறுவனர் பின்னி மேத்யூசிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பேசிய போது அவர் கூறியிருந்தார்.

இந்த காரணங்களே பின்னி மற்றும் ஓமர் ஆசிம் ( Omair Aasim ) டிசயர் நிறுவனத்தை 2012 நவம்பரில் துவக்க காரணமாக அமைந்தன. ஆனால் அவர்கள் தொழில்முறை பணியாளர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி அளிக்க விரும்பியதில் மாறுபட்டிருந்தனர்.

இந்த இணையதளம் பிக்டேட்டா முதல் எம்.எஸ் எக்செல் புரோகிராமிங் வரை பல தலைப்புகளில் தொழில்முறை பணியாளர்களுக்கான ஏழு பாடத்திட்டங்களை வழங்குகிறது. ஆரம்பத்தில் பெரும்பாலான பாடத்திட்டங்கள் முன்னதாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக இருந்தன. பிக்டேட்டா புரோகிராமிங் மொழியான ஹடூப் (Hadoop) மற்றும் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது.

இந்த நிறுவனம் துவக்கப்பட்ட போது யுவர்ஸ்டோரி இது பற்றி எழுதியது. இதை இங்கு படிக்கலாம்; http://yourstory.com/2012/06/fulfill-career-desires-via-dezyre/ அதன் பிறகு ஐந்து ஆண்டுகளில் நிறைய மாறியிருக்கிறது.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் 9,000 பேர் இந்த தளம் மூலம் கற்றுக்கொள்ள முற்பட்டுள்ளனர். இந்நிறுவனம் கணிசமாக நிதியும் திரட்டியுள்ளது. ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால், நியூடாய் இணை நிறுவனர்கள் டேவிட் பெட்னர் மற்றும் மைக்கே சோ, குவிக்சி சி.ஓ.ஓ குரு கெளரப்பன் (Guru Gowrappan ) மற்றும் இமேஜின் கே12 மற்றும் ஹெட்ஜ் பண்ட் மேனஜர் ஸ்ரீகாந்த் ராமமூர்த்தி உள்ளிட்டோரிடம் இருந்து நிதி திரட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஐபிஎம் -ன் இணைந்து பிக் டேட்டா அனல்டிக்ஸ் தொடர்பாக 5 சான்றிதழ் வகுப்புகளையும் துவக்கியுள்ளனர்.

“திறன் பயிற்சியை வகுப்பறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளார்கள் அளிப்பதைவிட துறை வல்லுனர்கள் அளிக்க வேண்டும் என புரிந்து கொண்டோம்” என்கிறார் பின்னி.

புதியவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுத்தருவது மட்டும் அல்லாமல், எற்கனவே பணியாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் துறைகளில் புதிய போக்குகளுக்கு ஈடு கொடுக்க திறன் பயிற்சி அளிப்பதும் அவசியம் என அவர்கள் உணரும் வரை எல்லாம் சுலபமாக இருந்தது.

இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக இவர்கள் சந்தா அடிப்படையிலான பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். ஹேக்கர்டே(hackerday) எனும் இந்த திட்டத்தில் ஒன்று விட்ட வாரங்களில் துறை சார்ந்த வல்லுனர்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட அடிப்படையிலான பயிலறங்குகளை நடத்துகின்றனர்.

ஹேக்கர்டே சேவையை உலகின் முதல் பணி மேம்பாட்டு (Career Updation) சேவை என பின்னி வர்ணிக்கிறார். 9 டாலர் மாத கட்டணத்தில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது பீட்டா வடிவில் இருப்பதால் அழைப்பிதழ் அடிப்படையிலேயே இதில் இணைய முடியும். விரைவில் அனைவரும் பங்கேற்கலாம்.

"தொழில்முறை பணியாளர்கள் தங்கள் பணிவாழ்க்கையில் அப்டேட்டாக இருக்க உதவும் வகையில் ஹேக்கர்டே சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தொழில்முறை பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை பரிட்சயம் செய்து கொள்ளும் வகையில் நேரடி திட்டங்களில் பங்கேற்பது கடினமாக இருந்தது. நான் டேட்டா அனலிஸ்ட்டாக இருந்த போது இது போன்ற சேவை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்கிறார் ஹேக்கர்டே பிரிவு தலைவர் சுமன் குமார்.

முதல் ஹேக்கர்டே, நவம்பர் 21 ம் தேதி நிகழந்தது. டேட்டா சயன்ஸ் மூலம் டைட்டானிக் கப்பலில் பிழைத்திருக்கும் வாய்ப்பை ஆய்வு செய்தல் எனும் தலைப்பில் இது அமைந்திருந்தது. தரவுகளின் அடிப்படையில் டைட்டானிக் விபத்தில் யார் எல்லாம் தப்பி இருக்க வாய்ப்பு உண்டு என்பதில் இந்த பயிலறங்கு கவனம் செலுத்தியது.

"முதலில் ஆபத்து கால படகுகளில் மேல் தட்டு மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது நமக்குத்தெரியும். இந்த தகவல்கள் அடிப்படையில் எந்திர கற்றல் உதவியுடன் டைட்டானிக் கப்பலில் யார் எல்லாம் தப்பி இருக்க முடியும் என்றும் அவர்கள் டைட்டானிக் கப்பலில் இருந்திருந்தால் தப்பியிருக்கும் வாய்ப்பு உள்ளதா? என்றும் மாணவர்கள் ஆய்வு செய்ய இந்த பயிலரங்கு உதவியது” என்று பின்னி கூறுகிறார்.

அடுத்த சில நிகழ்வுகள் டேட்டா சயன்ஸ் மற்றும் பிக்டேட்டா சார்ந்தது என்றாலும் வெப் டெவலப்மெண்ட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சார்ந்த நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

“இதை எக்கனாமிஸ்ட் அல்லது போர்ப்ஸ் இதழுக்கான மாத சந்தா போல கருதலாம். விரும்பும் வரை சந்தா செலுத்தலாம். சமீபத்திய தொழில்நுட்பங்களை கண்டறிவது, அவற்றின் அடிப்படையில் ஹேக்கதான்களை ஏற்பாடு செய்வது, துறை சார்ந்த வல்லுனர்களை அழைத்து வருவது போன்றவற்றுக்கு டிசயர் பொறுப்பேற்றுக்கொள்ளும்” என்கிறார் பின்னி.

யுவர்ஸ்டோரி பார்வை

இது தொடர்பான விழிப்புணர்வு உண்டானால் இந்த ஸ்டார்ட் அப்பிற்கு அதிக வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. மார்க்கெட்டிங் நிறுவனமான குலோபல் இண்டஸ்ட்ரி அனலிஸ்ட்ஸ், ஆன்லைன் கல்வி சந்தையானது 2015ல் 107 பில்லியன் டாலராக இருக்கும் என தெரிவிக்கிறது. பல துறைகளில் திறன் பயிற்சியில் கவனம் செலுத்தும் பல தொடக்கநிறுவனங்கள் உள்ளன.

இந்த பிரிவில் நன்கறியப்பட்ட நிறுவனங்களான யுடாசிட்டி (Udacity ) பில்லியன் டாலர் மதிப்பீட்டின் அடிப்படையில் 105 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இந்த ஆண்டு துவக்கத்தில் லிண்டா 1.5 பில்லியன் டாலருக்கு லின்க்டுஇன் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. ஜெனரல் அசம்பிளி இணையம் மற்றும் நேரில் திறன் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. ஸ்கில்லபி (Skillably ) இந்த பிரிவில் புதிய வரவு.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கோர்ஸ்எரா (Coursera) மற்றும் எட்.எக்ஸ் போன்ற இணைய நிறுவனங்களால் இணையம் மூலமான திறந்த வெளி வகுப்புகள் அதிகரித்துள்ளன. தொழில் முறை பணியாளர்களுக்கான பாடத்திட்டங்களுக்கான வரவேற்பை ஆய்வு செய்ய இன்னும் காலம் தேவை.

ஹேக்கர்டேவில் இணைய : HackerDay

இணையதள முகவரி: Dezyre

ஆக்கம்: அபர்னா கோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்