'மறக்கவே முடியாது'- போபாலில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் ஒரு பெண்ணின் இலக்கு!

0

உலகம் சந்தித்த மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு நிகழ்ந்த இடத்தில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அந்த இடம். ஒன்றோடு ஒன்று இணைந்த அந்த அறைகளில் ஒரு அறை மட்டும் இருண்டு கிடந்தது, இங்கு தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தது. பார்வையாளர்கள் அனைவரும் அந்த இரவின் சூழலையும், விஷம் பரவிய விதத்தையும் உணர்ந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக அது பிரதிபலிக்கப்பட்டிருந்தது. இது ஒரு வடிவமைப்பாளரின் கைவண்ணம் அல்ல, சமுதாயப் போராட்டத்தை வெளிக்காட்டத் துடிக்கும் ஒரு அருங்காட்சியாளரின் வேதனை.

அந்த அருங்காட்சியம் மதிப்புமிக்க ஜர்தோசி, முத்து மற்றம் வைரக்கற்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கவில்லை. வெளுத்துப்போன ஆடைகள், பொம்மைகள், பென்சில் பெட்டிகளை தாங்கி நிற்கும் சுமையின் அடையாளம், அழுகுரலின் மிச்சம். இது வெறும் கற்பனைத் திறனாளரின் பணியல்ல. இவை ஒவ்வொன்றும் ஒரு கதைசொல்லியின் அர்த்தத்தை உணர்த்துகிறது. வலியை காது கொடுத்து கேட்க முடிகிறது, மூக்கால் நுகர முடிகிறது, அந்தஅளவிற்கு அவர் தன்னுடைய அன்றாடக் கட்டுரைகளில் அவற்றை பிரதிபலித்து வருகிறார்.

இந்த வடிவமைப்பு நடந்து முடிந்த போரை நினைவுபடுத்தும் வெறும் நினைவுச் சின்னம் அல்ல; இதுஒரு உந்துதல் அளிக்கக் கூடியது நரம்புக்கு சூடேற்றி அவற்றை உயிர்ப்புடன் வைக்கும்; இந்தத் தீயை ஒரு பழமையான வரலாற்றாளரால் மட்டுமே ஏற்படுத்த முடியும், ஏனெனில் அவர் மட்டுமே வரலாற்றை மீண்டும் உருவாக்குபவர், இதை அவர் நம்முடைய நிகழ்கால பக்கங்களில் காட்சிப்படுத்துகிறார்.

இந்த மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர் ரமாலட்சுமி. "ரிமெம்பர் போபால்" அருங்காட்சியகத்தை திட்டமிட்டு அதற்கு வடிவம் கொடுத்து வரும் பெண்மணி. இந்த அருங்காட்சியகம் 1984ல் யூனியன் கார்பைடு பேரழிவு அல்லது போபால் விஷவாயு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவலைகளின் தொகுப்பு. மனதை வாட்டும் நினைவுகளோடு, உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் பொருட்டு பணியாற்றி வரும் ரமாலட்சுமியை சந்தித்தோம். அவர் செய்துள்ள எண்ணிலடங்கா பணிகள் மற்றும் ஒரு சோக நிகழ்வுக்கு ஏன் அவர் அருங்காட்சியகம் உருவாக்குகிறார் என்பதையும் நம்மால் உணரமுடிந்தது.

நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் அருங்காட்சியாளர் – அன்றாட அலுவல்களில் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லா பொருத்தம். உங்களை அருங்காட்சியாளராக மாற்றியது எது, இரண்டு வெவ்வேறு துறைகளின் பணிகளை நீங்கள் எப்படி பிரித்தாளுகிறீர்கள்?

பத்திரிக்கைத் துறை என் வயிற்றுப் பசியை போக்குகிறது, அருங்காட்சியாளர் பணி, என் ஆன்மாவின் பசியை போக்குகிறது. வாஷிங்டனில் இருந்த சமயம் தான் எனக்கு இந்த ஆர்வத்தை தூண்டியது என்று கூறலாம், இல்லாவிட்டால் எனக்குள் இருக்கும் அருங்காட்சியாளர் ஓடி ஒளிந்திருப்பார். பள்ளி காலத்தில் எனக்கு வரலாறு என்றால் அரவே பிடிக்காது, ஏன் என்று எனக்கு புரியவே இல்லை. ஏனெனில் நான் எப்போது பயணித்தாலும் அருங்காட்சியகங்கள் செல்வது மிகவும் பிடிக்கும். அருங்காட்சியங்களில் இருக்கும் பொது வரலாறு பிடித்த எனக்கு வகுப்பறையில் நடத்தும் வரலாறு பிடிக்கவில்லை என்பது அப்போது தான் எனக்கு புரிந்தது. வரலாறு மற்றும் மக்களை புரிந்து கொள்ள அருங்காட்சியகம் ஒரு பாலமாக எனக்கு திகழ்ந்தது. எனக்குள் இருந்த இந்த சாகா நினைவுகள் அருங்காட்சியகம் பற்றி படித்து கற்க என்னைத் தூண்டியது.

யூனியன் கார்பைடு கதையுடனான உங்களுடைய முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?

சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாத பத்திரிக்கையாளர் பணியே முதன்முதலில் என்னை போபாலில் நிகழ்ந்த யூனியன் கார்பைடு 10வது ஆண்டு தினத்திற்கு அழைத்துச் சென்றது. ஆனால் அருங்காட்சியகம் தொடர்பான பேச்சு நான் மீண்டும் அந்த துயர நாளின் 25வது ஆண்டின் போது நகரை சுற்றிப் பார்க்க சென்ற சமயத்தில் எழுந்தது. அரசாங்கம் அங்கு ஒரு நினைவகம் கட்ட நினைக்கிறது, ஆனால் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், ஏனெனில் அநீதிக்கு துணை போன அரசுக்கு அதை கட்டுவதற்கான தகுதி இல்லை என்பது மக்களின் வாதம். இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. சொந்த உரிமைக்கான எண்ணம், நேர்மையின் அடையாளம், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கொள்கைகள், ஒரு தளம் வாயிலாக அந்த நினைவுகளை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் என்றுமே மற்றக்கக் கூடாத கோட்பாடுகள், இது மிகவும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய, கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். அவர்களிடம் நான் அருங்காட்சியகம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளேன், எனக்கு சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளது, நீங்களே உங்களது அருங்காட்சியகத்தை அமைக்க நான் உதவுகிறேன் என்று கூறினேன். இதைக் கேட்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள், எங்களைப் பார்த்து உங்களுக்கு எப்படி இந்த எண்ணம் தோன்றியது என்று கேட்டார்கள், ஆனால் இது பெரியவிஷயமாக எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் 2004ல் விஷவாயு தாக்குதலின் 20வது ஆண்டு நினைவு தினத்தின் போது அவர்கள் ஒரு சிறிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர், yaad-e-Hadsa என்று பெயரிடப்பட்டிருந்த அந்த கண்காட்சி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் நடைபெற்றது. அவர்கள் நடத்திய கண்காட்சி மிகவும் அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது. அவர்கள் வீடுவீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கேட்டு அவற்றை ஒன்று சேர்த்து காட்சிப்படுத்தினர்.

அவர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அந்த இயக்கத்தின் ஒரு அங்கம் அந்தப் பொருட்களின் சக்தியை நன்கு உணர்ந்தவர்கள். ஆரோக்கியமான முறையில் நடத்தப்பட்ட அந்த கண்காட்சிக்கு எந்த திட்டமிடலும் இல்லை. பொருட்களே தங்களது கதைகளைச் சொல்லும், வரலாற்றை நேரில் பார்த்த சாட்சியங்கள் அவையே என்பது தான் இந்த அருங்காட்சியகத்தின் முக்கியம்சம்.

அவர்கள் என்னை ஒரு பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு தான் நான் அந்த பொருட்களை முதன் முதலில் பார்த்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பலர் குடிசைகளில் வசிப்பவர்கள், இடம் மாறி வந்தவர்கள் அதனால் அவர்கள் தங்களது பொருட்களை பத்திரப்படுத்தவில்லை. அவர்கள் அளித்த நினைவுப் பொருட்கள் அவர்களுக்கு விலைமதிப்பானவை. பென்சில் பெட்டிகள், உயிரிழந்த குழந்தைகளின் பள்ளிச் சீருடைகள்; ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு சொந்தமான கை கடிகாரத்தை கொடுத்திருந்தார், மற்றொரு பெண் ஒரு புடவையை கொடுத்திருந்தார், அந்த துயர சம்பவம் நிகழும் சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடைய கணவர் கடைசியாக அந்த பெண்ணுக்கு பரிசளித்த புடவை அது. அந்தப் புடவையை உடுத்திக் கொள்ளும் தைரியம் அந்தப் பெண்ணுக்கு வரவே இல்லையாம்; இது அவருக்கு விலைமதிப்பில்லா பரிசு. மற்றொரு பெண் தன்னுடைய திருமாங்கல்யத்தை அளித்திருந்தார்…

நடந்த துயர சம்பவத்திற்கு வடிவம் கொடுக்க இந்த சுற்றுப்பயணம் உங்களுக்கு உந்துகோலாக அமைந்தது என்று கூறலாமா?

ஏறத்தாழ 20 பொருட்கள் – அவை உயிரிழந்தவர்களோடு நெருங்கிய தொடர்புடையவை, அவை அவர்களால் கடைசி நிமிடத்தில் பயன்படுத்தப்பட்டவை. அவர்களின் குடும்பத்தினர் அத்தனை சிறப்புமிக்க பொருட்களை கொடுக்க முன் வந்தனர். கண்காட்சியில் அந்தப் பொருட்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு அருகில் வைக்கப்பட்டது. அவை சுவற்றில் அடித்து வைக்கப்படவில்லை, மாறாக ஒரு மேஜையில் விரிவுரை ஏதுமின்றி வைக்கப்பட்டிருந்தது. ஒரு மேஜையை சுற்றிப் பார்த்துக் கொண்டே நடக்கும் போது ஒரு வாழ்வியல் நினைவை உங்களால் கற்றுக் கொள்ள முடியும். அந்த மேஜையை சுற்றி வரும் போது இறுதி மரியாதை செலுத்தும் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. சுவற்றில் தொங்கவிடப்பட்டிருப்பவற்றை பார்ப்பது மேற்கத்திய வழக்கம். ஆனால் இது மிகவும் சக்திவாய்ந்தது, அர்த்தம் நிறைந்தது. உயிர் பிழைத்தவர்களோ, செயற்பாட்டாளர்களோ பார்வையாளர்களுக்கு அந்த சம்பவம் பற்றி விளக்கத் தேவையில்லை. அவர்கள் வீட்டுக்கு வந்து மரியாதை செலத்தினாலே போதும், இதைத் தான் நாங்கள் உருவாக்க இருக்கும் அருங்காட்சியகத்தின் மூலம் ஏற்படுத்த நினைக்கிறோம்.

டெல்லியில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கையாளரான உங்களால் இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?

தற்கால போராட்டத்தை வெளிக்காட்டும் முதல் அருங்காட்சிய வகை இது தான் என்பது எனக்குத் தெரியும். நான் அருங்காட்சியக நிபுணர்கள் மட்டுமல்லாது சமூகசேவகர்கள் மற்றும் உயிர்பிழைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது. 2009ல் நான் மற்ற சமூக சேவகர்களுடன் பேசினேன் – என்னுடைய முதல் பேச்சுவார்த்தையை சாம்ளிதேவி, ரஷிதாபேகம், சத்யநாத் சாரங்கி, நித்யானந்த் ஜெயராமன், ஷாலினி ஷர்மா, ரச்னா திங்க்ரா, அப்துல் ஜப்பார், நம்தியோஜி மற்றும் ஹஃபிசாவுடன் நடத்தினேன் – இவர்கள் அனைவரும் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள். மற்ற சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பின்னிப் பிணைத்து அவற்றை ஒரு மாலையாக கட்டமைக்க நான் விரும்பினேன். இழப்பீடு வழங்வதில் நீடிக்கும் போராட்டங்கள், நீதியில் இருக்கும் தாமதம், நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக அனைவரையும் ஒன்று திரட்ட நினைத்தேன்.. நாட்டில் நிலவும் சுற்றுச்சூல் தொடர்பான கதைகள் அனைத்தையும் போபாலுக்கு கொண்டு வர திட்டமிட்டேன். ஏனெனில் சற்று ஆழமாக பார்த்தால் நாம் அனைவரும் போபாலிகளே, சீரழிக்கப்படுகிறோம், கொடூரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம், வளைந்து கொடுக்கிறோம், இதன் விளைவு நாமும் போபாலியே. இது இரட்டை இலக்கு. நாங்கள் 2011 முதல் இதற்காக பாடுபட்டு வருகிறோம்.

அரசு கட்ட நினைத்த நினைவகத்திற்கு எதிர்ப்பு நிலவும் நிலையில், அருங்காட்சியகத்தை உருவாக்குவதில் நீங்கள் எவ்வாறு உறுதியாக இருக்கிறீர்கள்?

நினைவகங்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கான அமைதியான இடங்கள் – அது ஒரு கட்டிடக் கலைஞரின் வடிவம், ஆனால் அருங்காட்சியங்கள் உண்மைக் கதையை எடுத்துரைக்கும், பார்வையாளர்களை உண்மையில் கருத்தை உள்வாங்கச் செய்யும். நினைவகங்கள் உங்களுக்கு நினைவுகளைத் தூண்டும் ஆனால் அருங்காட்சியகங்கள் உங்களோடு உரையாடி சிந்தனையைத் தூண்டும். நான் எப்போதும் ஒரு கருத்தில் உறுதியாக இருப்பேன்; நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் குரல்களை வெளிக்கொணர்வதற்காகவே நான் பணியாற்றுகிறேன்.

இந்த திட்டத்திற்கு எவ்வாறு நிதி திரட்டப்பட்டது?

இது அநீதிக்கு எதிரான இயக்கம் என்பதால் அரசிடம் இருந்தோ, நிறுவனங்களிடம் இருந்தோ நிதி பெற வேண்டாம் என்பது உயிர்பிழைத்தவர்களின் கருத்து. எனவே போபால் நினைவு அறக்கட்டளையை நிறுவி நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறது.

அருங்காட்சியகத்தின் இறுதி வடிவம் எவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது?

போபால் சம்பவம் பற்றி ஒருவர் கேட்டு தெரிந்து கொண்டு துக்கம் அனுசரிக்கும் அருங்காட்சியகமாக இதை அமைக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் அருங்காட்சியகம் நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதி, அந்த வகையில் போராட்டம் தொடர்பான முக்கிய அம்சங்கள் இதில் இடம்பிடித்திருக்கும் – நடந்து முடிந்த துயரமான சம்பவத்தைப் போன்றே போராட்டப்பாதையும் முக்கியமானது. நிகழ்வியல் வரலாற்றை எடுத்துரைக்கும் முதல் அருங்காட்சியகம் இது தான். அருங்காட்சியகத்தின் சுவர்கள் தொழிற்சாலை சுவற்றில் அறையப்பட்ட கோபக் கனல்களை மறுஉற்பத்தி செய்யும். அதே போன்று இந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான குரல் பதிவுகளும் இடம்பெற்றிருக்கும். கருநிற சுவற்றின் புகைப்படங்களுக்கு அடுத்தபடியாக – கருப்பு நிறம் இருண்டு போன நினைவுகள், தீவிரவாதம், மறக்க முடியா அந்த இரவின் அசவுகரியத்தை மறுஆக்கம் செய்யும் - மனதை உருக்கும் அந்தக் குரல் பதிவுகள் ஆதரவற்றோர், விதவைகளின் அழுகுரல்கள். அவை அந்த கொடிய இரவை விளக்குவதோடு உயிரிழந்த தங்கள் நேசத்திற்குரியர்வகள் மீது அன்பு செலுத்துவதை எப்போதும் நிறுத்த முடியாது என்ற வேதனையையும் வெளிப்படுத்தும்.

இருட்டு அறை… கோபக் கனல்…. எஞ்சி இருக்கும் பொருட்கள்…அபயக்குரல்கள்… இவை பார்வையாளர்களுக்கு மிகுதியானவையாக இருக்காதா?

உயிர் தப்பியவர்களின் கண்ணீர்கதை நம்மை உறையவைத்துவிடும். அருங்காட்சியகத்திற்கு அன்றாடம் வரும் கூட்டத்தைப் போல மக்கள் வந்து பார்த்து செல்ல வேண்டாம், எங்களைப் பற்றி வாய்வழி தகவல் மூலம் தெரிந்து கொண்டு, அதை தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் வருபவர்களுக்கு, அவர்களுக்கான கதையை இது அளிக்கும். தங்களின் கணவன், குழந்தைகள், அத்தை, மாமாவிற்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் யோசித்து பார்க்க முடியும், பலர் முதல் அறையை பார்த்த உடனேயே சென்று விடுவார்கள்.

ஆனால் இரண்டாவது அறை வெள்ளை நிறத்தில் கண்களுக்கு இதமளிக்கும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எங்களின் குறிக்கோள். முறையான பத்திரங்கள் இல்லாததால் இழப்பீடு பெறுவதில் இருக்கும் போராட்டம் பற்றி விளக்கிக் கூறுவதோடு பேரழிவு காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் வாசகர்களுக்கு நாங்கள் அறிவுரை வழங்குகிறோம்.

இந்த அருங்காட்சியகம் ஒரு வரலாற்று இயக்கம் என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்?

Yaad-e-Hadsa என்பதன் அர்த்தம் நினைவுபடுத்துதல்… வரைமுறைகளுக்குட்பட்ட அருங்காட்சியகம்- ஹாலோகாஸ்ட் அருங்காட்சியகம் போல இது மீண்டும் எப்போதும் நடக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும். “வேண்டாம் மீண்டும் ஒரு போபால்” என்ற பேட்ஜை நாங்கள் விநியோகிக்கிறோம். அதே போன்று இது ஒரு செயற்பாட்டாளர்களின் ஒன்றுகூடல். மற்ற இயக்கங்களும் இதே போன்று ஏதாவது செய்ய வேண்டும். புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் வாயிலாக தங்களது கருத்தை எடுத்துரைத்த பலர் தற்போது தங்களது கருத்தை வெளிப்படுத்த அருங்காட்சியகங்களை கட்டமைக்கின்றனர்.

ஆக்கம்: பின்ஜல் ஷா | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற வரலாறு தொடர்பு கட்டுரைகள்:

வங்காளப் பஞ்சம்- லாபவெறி பிடித்த பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மிருகத்தனம்!

"ஓட்டத்தூதுவன் 1854"