உங்கள் நிறுவன ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேசி கலக்க இவர்களை நாடுங்கள்...

4

’இங்கிலீஷ் ஃபார் இண்டியா’ (English For India) ஸ்டார்ட் அப் மஹேஷ் தரணி மற்றும் அருண் ஜகன்நாதன் ஆகிய இருவரால் 2017-ம் ஆண்டு துவங்கப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் கல்வி மற்றும் பயிற்சி பிரிவில் செயல்படுகிறது. சுயநிதியில் இயங்கும் இந்த நிறுவனம் கார்ப்பரேட் ஊழியர்கள் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி அளிக்கிறது.

சிறு வயது நண்பர்களான மகேஷ் தரணியும் அருண் ஜகன்நாதனும் இணைந்து குஜராத்தின் வடோதரா பகுதியில் அதிக நேரம் செலவிட்டுள்ளனர். இளம் வயதிலேயே மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். சிறப்பாக ஆங்கில மொழியை பேசி எழுதும் திறன் இருந்ததால் அவர்களுக்கு கிடைத்த நன்மையைக் கண்டனர். இதனால் ஆங்கில மொழியில் இவர்களுக்கு உள்ள திறனை வணிக வாய்ப்பாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் உணர்ந்தனர். குறிப்பாக இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆங்கில பயிற்சியின் தரம் சிறப்பாக இல்லை என்பதால் வணிக வாய்ப்பை இருப்பதை தெரிந்துகொண்டனர்.

மகேஷ் கார்ப்பரேட் உலகில் 15 ஆண்டுகள் செலவிட்ட பிறகு இஎஸ்பிஎன் நிறுவனத்தில் ப்ராடக்ட் மேலாளராக இணைவதற்காக பெங்களூரு மாற்றலானார். சொந்தமாக தொழிலில் ஈடுபடவேண்டும் என்றும் நினைத்திருந்திருந்தார். இந்த சமயத்தில் அருண் தனது நிறுவனமான க்ராக்வெர்பல் எட்யூடெக் நிறுவனத்தை சிறப்பாக நடத்திக்கொண்டிருந்தார். பயிற்சி பிரிவில் புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

”பல்வேறு உரையாடல்களிடையே திடீரென்று எங்களது விவாதம் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது குறித்து மாறியது. இது ஆழமாக ஆராயப்படாமல் உடனடியாக தயாராகும் தீர்வாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க விரும்பினோம்,” என்றார் அருண்.

2017-ம் ஆண்டு ’இங்கிலீஷ் ஃபார் இண்டியா’ உருவானது. இந்த ஸ்டார்ட் அப் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக ஆஃப்லைன் பயிற்சி அமர்வுகள் வழங்குகிறது. சில்லறை வர்த்தக பிரிவில் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான பயிற்சியும் க்ளையண்ட் சார்ந்த பகுதியில் வணிக ரீதியாக தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்தும் வகையிலும் செயல்படுகிறது.

”இங்கிலீஷ் ஃபார் இந்தியாவின் தீர்வுகள் ஊழியர்கள், பணியிலமர்த்துபவர்கள் இரண்டு தரப்பினரையும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஊழியர்களுக்கு பயிற்சி வாயிலாக மொழியைக் கற்றுக்கொடுக்க ஒரு வேறுபட்ட அணுகுமுறை அவசியம். அதே சமயம் கார்ப்பரேட் தரப்பில் அவர்கள் முதலீடு செய்யும் தொகையைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் பயிற்சியை முடிக்கவேண்டும்,” என்றார் அருண்.

எது வழி நடத்தியது?

இரு நிறுவனர்களும் ஸ்டார்ட் அப் நடத்தி வரும் அவர்களது நண்பர்கள் சிலருடன் உரையாடினர். நிறுவனங்களில் ஆங்கில மொழிப் புலமை இல்லாத காரணத்தால் ஏற்படும் பிரச்சனை குறித்து தெரிந்துகொண்டனர்.

”இது குறித்து அதிகம் விவாதிக்கையில் இந்த பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்தோம். வழக்கமான பயிற்சி வகுப்புகள் வழங்கும் தீர்வுகளில் பங்கேற்பாளர்களின் பின்னணி குறித்த புரிதல் இருப்பதில்லை என்பதையும் குறுகிய காலத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதில் சிரமம் இருப்பதையும் நிறுவனங்கள் பயிற்சிக்கு செலவிடும் தொகைக்கு நிகரான விளைவுகள் இருப்பதில்லை என்பதையும் கேட்டறிந்தோம். மென் திறன் பயிற்சி, தொடர்பு கொள்ளும் பேச்சுத் திறன் பயிற்சி போன்றவை எதிர்பார்த்த பலனளிக்காமல் போவது குறித்து மனிதவளத் துறை மேலாளர்கள் பகிர்ந்துகொண்டனர்,” என்றார் அருண்.

ஜர்னலிசம் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் முடித்த 38 வயதான மகேஷ் டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் ரிப்போர்டிங், எழுதுதல், எடிட்டிங் ஆகியவற்றுடன் தனது பணி வாழ்க்கையைத் துவங்கியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக மகேஷ் தொலைக்காட்சித் துறை, டிஜிட்டல் ஊடகத் துறை என இந்திய ஊடக பகுதியில் பணியாற்றியுள்ளார். ஹங்காமா டிஜிட்டல், ஈஎஸ்பிஎன் போன்ற ப்ராண்டுகளில் ஆன்லைன் ப்ராட்கட்டுகளை உருவாக்கியுள்ளார்.

41 வயதான அருண் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் முடித்துள்ளார். பயிற்சி பகுதியில் செயல்படுவதற்கு முன்பு விப்ரோ, Sapient, Arcot R&D, Talisma ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பொறுப்புகளை வகித்துள்ளார். பயிற்சி பகுதியில் அவரது முதல் நிறுவனமான க்ராக்வெர்பல் எட்யூடெக் பிரைவேட் லிமிடெட் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இங்கிலீஷ் ஃபார் இண்டியா குழுவில் தற்போது மூன்று பேர் உள்ளனர். 10-12 பயிற்சியாளர்கள் பார்ட்னர்களாக இணைந்துள்ளனர்.

”பகுதிநேர பயிற்சியாளர்களை தீவிரமான செயல்முறைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து இணைத்துள்ளோம். எங்களது தேர்வு விகிதம் சுமார் ஐந்து சதவீதம். எங்களது பயிற்சியாளர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் பெங்களூரு, மும்பை, என்சிஆர், ஹைதராபாத், பூனே, சென்னை என இந்தியா முழுவதும் பயிற்சியாளர்களை உடனடியாக அனுப்புவோம்,” என்றார் அருண்.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயிற்சியாளர்களுக்கான தேவை இருப்பதால் முழுநேரமாக நிறுவனத்தில் இவர்களை இணைக்க வணிக மாதிரி இடமளிக்கவில்லை என்றார்.

செயல்படும் முக்கியப் பகுதி

இந்நிறுவனம் தீர்வளிக்கும் முக்கிய பகுதி குறித்து அருண் குறிப்பிடுகையில், 

“இன்று இந்தியாவில் உருவாகும் பல்வேறு பணிகளை ஏற்றுக்கொள்ளத் தகுந்த நபர்கள் இல்லை. குறிப்பிட்ட திறன் அடிப்படையில் இந்த பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலை முற்றிலும் முரண்பாடாக உள்ளது,” என்றார்.

மற்றொரு புறம் பணியிலமர்த்துவோரின் பற்றாக்குறையும் உள்ளது. திறன் மேம்பாடு சார்ந்த சிக்கல்கள் இந்தியாவில் நிலவுவது குறித்து இந்திய வேலைவாய்ப்பு கமிஷன் ’இந்தியாவில் வேலைவாய்ப்பில் உள்ள சவால்கள்’ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் 2022-ம் ஆண்டிற்குள் வேலை வாய்ப்பிற்காக 500 மில்லியன் பேருக்கு ஆங்கிலம் உள்ளிட்ட திறன்களில் பயிற்சியளிக்க தீர்மானித்துள்ளது.

சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள் அந்த மொழியைப் பேச முடியாதவர்களைக் காட்டிலும் 34 சதவீதம் அதிக வருவாய் ஈட்டுவதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஆங்கில மொழியை கற்பதற்கும் வேலை வாய்ப்பிற்கான சாத்தியக்கூறுகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பை இந்த அறிக்கை தெளிவாக்குகிறது.

இந்தியாவில் 20 சதவீதத்தினர் மட்டுமே ஆங்கிலம் பேசுகின்றனர். இதில் 4 சதவீதத்தினர் மட்டுமே சரளமாக பேசுகின்றனர். மற்றொரு புறம் உலகிலேயே அதிக அளவாக 15 முதல் 64 வயது வரையில் உள்ள ஒரு பில்லியன் பணியாளர்கள் 2027-ம் ஆண்டில் இந்தியாவில் இருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது. இதனால் பணி தேடி நகர்புறத்திற்கு வருவோரிடம் ஆங்கிலம் பேசும் திறன் இல்லாத காரணத்தால் பணி வாய்ப்புகள் மறுப்புக்கப்படுகிறது.

நிறுவனங்களின் தேவைக்கு ஏற்றவாறு பயிற்சியளித்தல்

இங்கிலீஷ் ஃபார் இண்டியா நிறுவனங்களுக்குத் தேவையான முழுமையான தொகுப்பை வழங்குகிறது. ”ஒரு நிறுவனம் இங்கிலீஷ் ஃபார் இண்டியாவை அணுகும்போது பங்கேற்பாளர்களின் பின்னணி, பயிற்சி சார்ந்த தேவைகள், லைன் மேலாளர்களிடமிருந்து தகவல்கள், மனித வளத் துறை நிறைவேற்ற முயற்சிக்கும் நோக்கங்கள் ஆகியவற்றை புரிந்துகொள்கிறோம். நாங்கள் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றவாறு பயிற்சிக்கான திட்டத்தை உருவாக்குகிறோம். எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்னர் பயிற்சியாளர்கள் வாயிலாக க்ளையண்டின் இடத்தில் பயிற்சி அளிக்கப்படும்,” என்றார் அருண்.

நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நிறுவனத்திடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் வாயிலாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. 

“ஒவ்வொரு ஊழியருக்கும் பயிற்சி அளிப்பதற்கான கட்டணத்தை வசூலிக்கிறோம். இதனால் சந்தா கட்டணம் அடிப்படையிலோ அல்லது பயிற்சியின் வெற்றியின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கபடும் மாதிரியோ நீண்ட கால இணைப்பை ஊக்குவிக்க பின்பற்றப்படுகிறது. தற்போது எங்களது ஆஃப்லைன் திட்டங்கள் வாயிலாக வருவாய் ஈட்டுகிறோம். ஆன்லைன் திட்டங்கள் வாயிலாக வருவாய் ஈட்டவும் விரும்புகிறோம்,” என்றார் அருண்.

இந்நிறுவனம் இதுவரை புமா, ஃபுட்ஹால், க்ளாக்ஸோஸ்மித்க்லைன் போன்ற ப்ராண்டுகளுடன் பணியாற்றியுள்ளனர். பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய பல்வேறு நகரங்களில் 250 மணி நேரத்திற்கும் அதிகமாக பயிற்சியளித்துள்ளனர். சராசரி பயிற்சி நேரம் 16-20 மணி நேரமாகும்.

வாடிக்கையாளர் தரப்பில் இருந்து 20 நபர்கள் அடங்கிய சிறு குழு முதல் 1000-க்கும் அதிகமான ஒட்டுமொத்த ஊழியர்கள் வரை பயிற்சி அளிப்பதற்கான தேவை இருக்கும். வெவ்வேறு தொகுதிகளாக பிரித்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி தரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக தொகுதியின் அளவு 20 நபர்கள் மட்டுமே அடங்கியதாக அமைக்கப்படுகிறது.

இதுவரை சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் அடுத்த மூன்றாண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறது.

வளர்ச்சித் திட்டங்கள்

2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் மொழி பயிற்சி சந்தையானது 19 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் காணப்படும் என டெக்நேவியோ சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

2017-ம் ஆண்டில் உலகளாவிய மொழி சேவை துறையின் சந்தை அளவு 43 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும் இது 2021-ம் ஆண்டில் சுமார் 47.5 பில்லியன் டாலராக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதகாவும் ஸ்டாடிஸ்டிகா அறிக்கை தெரிவிக்கிறது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக ஆங்கிலம் மற்றும் மென் திறன்களை பயிற்றுவிக்கும் பல்வேறு நிறுவனங்கள் தரப்பில் இருந்து இங்கிலீஷ் ஃபார் இண்டியா போட்டியை எதிர்கொள்கிறது.

அதன் தனித்துவம் குறித்து அருண் குறிப்பிடுகையில், “ஆஃப்லைன் பயிற்சிகளைப் பொருத்தவரை மற்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான வேறுபாடுகளே உள்ளது. இருப்பினும் வணிக பிரச்சனைகளை நாங்கள் புரிந்துகொள்ளும் விதமே எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. எங்களது பயிற்சி திட்டங்கள் மனித வளத்துறையின் நோக்கங்களை முறையாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய நாங்கள் மனிதவளத் துறையுடனும் வர்த்தக உரிமையாளர்களுடனும் உரையாடுகிறோம்.

நிறுவனங்களின் தேவைக்கேற்ப பயிற்சி திட்டங்கள் வடிவமைக்கப்படுவதால் நிறுவனத்தின் குறிப்பிட்ட சூழல்கள் மற்றும் ஊழியர்கள் சந்திக்கும் சவால்களில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

”எந்த இரு பயிற்சி திட்டங்களுடம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே பங்கேற்பாளர்களுக்கு ஏற்ப பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறோம். இவர்களது அன்றாட பணி வாழ்க்கையில் சந்திக்கும் சூழல்களை எங்களது நிறுவனத்தினுள் இருக்கும் குழுவினர் உருவாக்கியிருப்பார்கள். எனவே நிறுவனங்களுக்கு ஏற்றவாறான எங்களது தீர்வுகள் பங்கேற்பாளர்களுக்கு பலளிக்கும் வகையில் இருக்கும். அன்றாட பணி வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழலுக்கும் உடனடியாக பயன்படுத்தும் வகையில் எங்களது தீர்வுகள் அமைந்திருக்கும்,” என்றார் அருண்.

வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக்கற்றல் ஆகியவற்றின் உதவியுடன் தீர்வுகளை உருவாக்க விரும்புகிறோம். அருண் கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே Bluegild Solutions என்கிற தொழில்நுட்ப பார்ட்னருடன் எங்களது தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி வருகிறோம். அத்துடன் எங்களது தீர்வு தொகுப்பின் 2.0 பதிப்பின் பணிகளுக்காக பயனர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறோம்,” என்றார்.

தங்களது ஆங்கிலத் திறனை மெருகேற்றிக்கொள்ள விரும்பும் ஊழியர்களுக்கும் அத்தைகைய திறன் கொண்டவரை பணியில் அமர்த்தி அவர்களை தக்கவைத்துக்கொள்ள விரும்பும் பணியிலமர்த்துவோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை இங்கிலீஷ் ஃபார் இண்டியா உணர்ந்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின் | தமிழில் : ஸ்ரீவித்யா