தொழில் மீதான உங்கள் காதலை நீங்கள் அணுகும் அனைவரிடமும் வெளிபடுத்துங்கள்!

0

'அன்கன்வென்ஷன்' நிகழ்வின் சென்னை பதிப்பில் தேநீர் இடைவேளைக்கு பிந்தைய குழுவிவாதமாக நடைப்பெற்றது 'ஃபயர்சைட் சாட் '. குழு விவாதத்தின் நடுவராக வில்க்ரோவின் இந்தியத்தலைவர் பிஆர் கணபதி, இருக்க, குழுவில் கலந்துரையாட, சம்முன்னதி நிறுவனர் அனில்குமாரும், மற்றும் யூனிப்போர் நிறுவனத்தின் துணைநிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உமேஷ் சச்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழில் துவங்குதல் பற்றி

உமேஷ் : கல்லூரி முடித்தவுடன் தொழில் துவங்குவதில் நன்மைகளும் உண்டு சில தீமைகளும் உண்டு. ஒரு பொருளாதாரச் சூழலை சந்தித்து சில அனுபவங்கள் பெற்று பின்னர் தொழில் துவங்குவது நன்மையே. ஆனால், கண்களைக் கட்டி கானகத்தில் விட்டது போன்று கல்லூரி முடித்தவுடன் தொழில் துவங்குகையில் நம் மனதில் ஒரு நம்பிக்கை மற்றும் தைரியம் குடிகொண்டிருக்கும். அது நாம் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை வெகுவிரைவில் குறைக்க உதவும். எனவே மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றால் இதே போன்று கல்லூரி முடித்தவுடன் தொழில் துவங்குவேன்.

அனில்: எனது 25 வருட வங்கியாளர் வாழ்வில் பதினைந்து சதவிதம் கிராமபுறங்களில் கழித்தேன். மேலும் கார்ப்பரேட் வாழ்வு, தொழில் முனையும் பொழுது நாம் கவனிக்க வேண்டியவற்றை கற்றுத் தரும், எனவே நம் அனுபவம் நமக்கு கைகொடுக்கும் என்ற எண்ணத்தை எனது முதலீட்டாளர் முற்றிலுமாக உடைத்து, இது வேறு அது வேறு. தொழில்முனையும் பொழுது நாம் சந்திக்கும் சிரமங்களும், சவால்களும் முற்றிலும் வேறு என எனை தயார்ப்படுத்தினார். மேலும் மிகவும் முக்கியமான ஒன்று:

எதில் உங்கள் திறமை உள்ளதோ, எதில் உங்களுக்கு விருப்பமும், மனதில் காதலும் உள்ளதோ அதை செயலாற்றுங்கள். உங்கள் தொழில் முனைவு நிச்சயம் வெற்றி பெறும்.

தொழில் முனையும் முடிவை பற்றி

அனில் : தொழில்முனைவதற்கான முடிவை எடுப்பது சிரமமான விஷயமாக தெரிந்தாலும், எனக்கு அது எளிதாக அமைந்தது. ஒரு நாள் காலை தூக்கம் வராமல் புரண்ட போது, ஒரு நிறுவனத்தில் அதற்காக உழைத்தது போதும், இனி நமக்காக உழைப்போம் எனத் தோன்றியது. அதைப் பற்றி அரைதூக்கத்தில் இருந்த என் துணைவியாரிடம் கேட்டபோது அவரும் சரி என்றார். தொழில் முனைவதில் மிக முக்கியமான பங்கு நம் துணையை சமாளிப்பதே (இதை அவர் சிரிப்புடன் கூற அதை ஆமோதிப்பது போன்று அரங்கில் பார்வையாளரும் சிரித்தனர்).

எத்துறையில் தொழில்முனைவது

உமேஷ்: 2006 ஆம் ஆண்டு, ஐஐடி மெட்ராஸ்சின், தொழில்முனைவு அடைகாப்பகத்தில் ரஹீம் நாயர் மற்றும் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா ஆகியோரோடு, இதைப் பற்றி விவாதிக்கையில், முன்னரே ஐவர் போட்டியாக உள்ள ஒரு துறையில் நாம் தொழில் முனைவதை காட்டிலும் புதிதாக ஒரு துறையில் முதல் நபராக களம் காண்பது என்றுமே சிறந்தது எனப் புரிந்தது. வளர்ந்து வரும் தொலைபேசித் துறை, இணையத்தை நகரங்களில் இருந்து கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் மற்றும் அங்கு உள்ள இடைவெளி ஆகியவற்றை பற்றி மேலும் விவாதித்தோம். எனவே அந்தச் சூழல் எங்கள் மேல் திணிக்கபட்ட ஒன்றாகும். ஒரு சூழலை முழுவதும் நாம் உணராமல் நம்மால் தொழில் முனைவது இயலாத ஒன்று.

அனில்: வங்கியில் நான் இருந்த காரணத்தால், ஓர் இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வாய்ப்பை அவை எனக்கு வழங்கவில்லை. எனவே நான் பணிபுரிந்த கடைசி நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தது மிக நீண்ட காலமாக எனக்கு தெரிந்தது. மேலும் குடும்பகளுக்கு சிறுஅளவில் கடன்கொடுக்கையில் அவர்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் அவர்கள் குடும்பத்தின் வருமானத்தை மட்டும் சார்ந்திராமல், அவர்கள் வாழும் நிலத்தை சார்ந்ததாகவும் இருந்ததை உணர்ந்தோம். எனவே அதை அடித்தளமாக கொண்டு எனக்கு அனுபவம் இருந்த இத்துறையில் (சம்முன்னதி நுண்கடன் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளது) தொழில் முனைந்தேன்.

இதற்கு பிறகு நடுவர் கேள்வி நேரத்தை துவங்கி வைக்க, பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன....

இணைய நடுநிலையை பற்றி

உமேஷ்: கிராமப்புற பகுதிகளுக்கு இணையத்தை எடுத்துச்செல்வதற்காக விலை குறைத்து இணையத்தின் மீது கட்டுப்பாடு செலுத்துவது என்பது ஏற்க முடியாத வாதம். தற்போது தொலைபேசிகளில் வழங்கப்படும் அழைப்பாளர் பாடல் வசதிக்கு கட்டணம் இருந்தும் கிராமப்புறங்களில் அது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்ததுள்ளது. மேலும் அதில் அதிக வருமானமும் உள்ளது. எனவே கட்டணத்தை காரணம் காட்டி இணையம் மீது ஆதிக்கம் செலுத்துவது ஏற்க இயலாது.

இடைத்தரகர்கள் தொழிலில் பங்குகொள்வதை பற்றி

அனில்: எங்களுக்கும் நாங்கள் கடன் கொடுக்கும் நபருக்கும் முதலில் ஒரு பரிச்சயம் ஏற்படுத்தவே இடைத்தரகர் உதவியை நாங்கள் நாடுகிறோம். அவருக்கும் கடன் வாங்குபவருக்கும் இருந்த கொடுக்கல் வாங்கல்களை பொருத்து நாங்கள் கடன் கொடுக்கும் அளவு மாறுகின்றது. மேலும் பரிச்சயம் நிகழ்ந்த பின்பு, அனைத்தையும் எங்கள் நிறுவனம் தான் செய்கின்றது. எனவே இதில் தரகரோடு பணிபுரிவதில் தீங்கு விளைவதாக நாங்கள் நினைக்கவில்லை.

தொழில் முனைவோருக்கான உங்கள் அறிவுரை

அனில் : வருங்காலத்தில் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யப்போகும் நபரோ அல்லது முதலீடு செய்யும் நபரோ யாராக இருப்பினும் அவரிடும் பேசுகையில், உங்களுக்கு உத்வேகம் தரும் தொழில் முனைவதற்கான உந்து சக்தியை பற்றி, தொழில் மீதான உங்கள் காதலை பற்றிப் பேசுங்கள். அது எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு பயனளிக்கும்.

சென்னையில் நடைப்பெற்ற அன்கன்வென்ஷன் மாநாட்டிற்கு தமிழ் யுவர்ஸ்டோரி மீடியா பார்ட்டனராக இருந்தது.