ஒரு கையில் கலப்பை, மறு கையில் துப்பாக்கி: ஆசியப்போட்டியில் தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி!

ஆசியப்போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மூன்றாவது தங்கத்தை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார் பதினாறு வயதான விவசாயியின் மகன். 

0

18வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்துவரும் இந்தோனேஷியாவின் ஜகர்தா மைதானம், வெற்றி தோல்விகளால் நிரம்பி வருகிறது. அதில், 7 பதக்கங்கள் நம் மண்ணுக்கு சொந்தமானது. அதிலும், இன்று நடைப்பெற்ற போட்டிகளில் ஒரே போட்டியில் இரு பதக்கங்களை பறித்துள்ளனர் இந்திய வீரர்கள்.

ஆம், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கத்தினை சவுரப் சவுத்ரியும், வெண்கலத்தை அபிஷேக் ஷர்மாவும் கைப்பற்றியுள்ளனர். 16வயதே ஆன சவுரப் சவுத்ரி, ஆசியப்போட்டியில் துப்பாக்கி ச்சுடுதலில் இந்தியாவுக்காக ஐந்தாவது முறை தங்கத்தினை வேட்டையாடிக் கொடுத்ததுடன், பழைய சாதனையையும் முறியடித்திருக்கிறார். 

யார் இந்த சவுரப் சவுத்ரி?

உத்திரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள கலீனா கிராமத்தில் 2002ம் ஆண்டு பிறந்தவர் சவுரப் சவுத்ரி. விவசாயக் குடும்பத்தை சேர்ந்த சவுரப், பால்ய வயதில் இருந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொள்பவரெல்லாம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான், சவுரப்பிற்கு துப்பாக்கி சுடுதல் போட்டி அறிமுகமாகியுள்ளது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சவுரப், மீரட்டில் இருந்து 50கி.மீ தொலைவிலுள்ள அமித் ஷெரான் அகாடமியில் தான் பயிற்சி மேற்கொள்கிறார். பயிற்சிக்கு இடைப்பட்ட கிடைக்கும் கேப்பில் விவசாயம் பார்க்க சென்றுவிடுவாராம் சவுரப்.

“எனக்கு விவசாயம் ரொம்ப பிடிக்கும். டிரைனிங்கில் எப்போதும் இருப்பதால், ஃப்ரீ டைம் கிடைக்காது. ஆனால், எனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் சொந்த ஊருக்கு செல்கையில், அப்பாவுக்கு உதவியாக வேலைகள் செய்வேன்” என்கிறார்.

பயிற்சி மேற்கொள்ள தொடங்கிய குறைந்த காலத்திலே, மாநில மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பதக்கத்தை குவிக்கத் தொடங்கினார். கடந்த இரண்டு மாதங்களுக்க முன், ஜெர்மனியில் நடைபெற்ற ஜுனியர் உலகக் கோப்பையில் தங்கம் பதக்கத்துடன் உலக சாதனையும் படைத்துள்ளார். இப்போட்டியின் விளைவாய், ஆசியப் பாட்டியில் கலந்துக்கொள்ளும் சவுரப் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு. 

இடப்புறம் அபிஷேக் ஷர்மா, நடுவில் சவுரப் சவுத்ரி  பட உதவி :www.ibtimes.co.in 
இடப்புறம் அபிஷேக் ஷர்மா, நடுவில் சவுரப் சவுத்ரி  பட உதவி :www.ibtimes.co.in 

இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் அழுத்தத்தை கொடுக்குமோ? சீனியர் பிரிவில் சவுரப் எதிர்கொள்ளும் முதல் சர்வதேச போட்டி என்பதாலும், சவுரப் வெற்றி அடைவாரா என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனால், ஆசியப்போட்டியின் ‘டிரைல் சுற்றிலே’ பெஸ்ட் பெர்பாமன்ஸ் கொடுத்தவர், 

“சீனியர் பிரிவில் கலந்துகொள்ளும் முதல் போட்டி என்றாலும், நான் பதட்டப்படவில்லை” என்கிறார். 

உண்மையில், அமைதியாக போட்டியை எதிர்கொண்ட சவுரப் தொடக்கத்தில் சற்று பின்தங்கியே விளையாண்டாலும், அடுத்தடுத்த முயற்சிகளில் அசத்தலான பெர்பார்மன்சை கொடுத்தார். போட்டியின் இறுதியில், இவருக்கும் ஜப்பான் வீரர் டோமோயுகி மட்சுடாவுக்கும் இடையே போட்டி நீடித்தது. இறுதியில் 240.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் சவுரப்.

சவுரப்பின் வெற்றியை கொண்டாடுவிதமாய் அவருக்கு ஊக்கத்தொகையாக ரூ 50லட்சத்தை வழங்குவதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, ஒலிம்பிக் மெடலிஸ்ட் அபினவ் பிந்த்ரா, ஷேவாக் என பிரபலங்கள் முதல் சமானியர் வரை சவுரப்புக்கு டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

ஷேவாக்கின் டுவிட்டர் பதிவு
ஷேவாக்கின் டுவிட்டர் பதிவு
அபினவ் பிந்த்ராவின் டுவிட்டர் பதிவு 
அபினவ் பிந்த்ராவின் டுவிட்டர் பதிவு 

அடுத்த மாதம் 2ம் தேதிவரை நடைபெற உள்ள இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 11,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இதுவரை, இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்று 7வது இடத்தில் உள்ளது. மேலும் பல இந்திய வீரர்கள் போட்டிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். வாகை சூடி வாருங்கள் வீரர், வீரர்களே!

தகவல் உதவி :  www.ibtimes.co.in  கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ

Related Stories

Stories by YS TEAM TAMIL