சென்னை வெள்ளமும் வைரல் வீடியோக்களும்!

0

‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்’ என மழையைக் கொண்டாடிய மரபுடையவர்கள் நாம். ஆனால், இப்படி ஒரு பெருமழையின் விளைவை எதிர்பார்த்திருக்கவில்லை. இயற்கைக்கு எதிரான நம் வாழ்வை உணர வைத்த கடந்த தினங்களை, நாம் மறந்துவிடாதபடி, வெள்ளத்தின் சாட்சியாய் சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோக்கள் இவை.

  • நீர்தேக்கத் தொட்டியின் மேல் நின்றிருக்கும் கர்ப்பிணி பெண் ஒருவரை, ஹெலிகாப்டரில் இருந்து வீரர்கள் மீட்டுச் செல்லும் காட்சி... யூ ட்யூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ வைரல் ஆகி, பல செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது. அந்த பெண்ணுக்கு, பிறகு இரட்டைக் குழந்தைகள் பிறந்து, ஊரே அதைக் கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தது.


  • தன் கோட்பாடுகள் காரணமாய் கோடி ரூபாய் தருவதாய் சொன்ன விளம்பரப் படத்தையே நிராகரித்தவர் நடிகர் ராஜ் கிரண். அவர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப் பட்டார் என்பது, பல தரப்பினருக்கு கவலையளிப்பதாக இருந்தது. நடிகர் ராஜ் கிரண், மீட்புப் படையினரால், கயிறுக் கட்டி இழுக்கப்படும் வீடியோக் காட்சி...

  • முழுவதுமே வெள்ளக்காடாக மாறியிருக்கும் தாம்பரம் பகுதியில், மீட்புப் பணிக்காக சென்ற படகில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் வீடியோ இது. முற்றிலும் மூழ்கப்பட்டிருக்கும் வீடுகள், கார்கள், இடுப்பளவு நீரில் நின்றுக் கொண்டு மீட்புப் படகு உதவி கேட்பவர், பாதி மூழ்கிய ‘தாம்பரம் பெருநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது’ போர்டை வித்தியாசமாய் பார்த்துக் கொண்டே வெளியேறும் மக்கள் என இந்த வீடியோ மழையின் ஒரு முகத்தை பதிவு செய்துள்ளது.


  • அத்தனை ரணகளத்திலும், ‘சிரிப்பின்றி அமையாது வாழ்வு’, என்கிறது ஒரு குழு. டிஸ்கவரி, மேன் vs வைல்ட் நிகழ்ச்சி பாணியில், ‘வேளச்சேரியில் இருந்து ஆஃபீஸ் போவது’ பற்றி பாடம் நடத்துகிறார்கள். இல்லாத ஹெலிகாப்டருக்கு சிக்னல் காட்டுவது, மது பாட்டிலுக்கும் மனித நடமாட்டத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துரைப்பது, ‘ஸ்ட்ராங்கா டீ’ சொல்லிவிட்டு மீண்டும் காட்டுக்குள் செல்வது என வீடியோ முழுக்க ‘ரோஃபல்’!!


  • தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, படப்பை அருகில், அதி வேகத்தில் வரும் வெள்ளத்தால், பைக் ஒன்று தடுமாறி விழுகிறது. ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தில், ஹெலிகாப்டரில் இருந்து விழும் பெண்ணை, விநாடியில், மினியான்கள் ஒரு சங்கிலியாய் இணைந்துக் காப்பாறுவது போல, அருகில் நின்றுக் கொண்டிருப்பவர்கள் தத்தம் வண்டியை விட்டிறங்கி, ஒருவரோடு ஒருவர் கரம் கோர்த்து, பைக்கையும், அந்த நபரையும் இழுத்தெடுக்கின்றனர்.


சென்னையை அடுத்து புறநகர்ப்பகுதி ஒன்றில் வெள்ள நீரைக் காண்பதற்காக, கூட்டமாய் மக்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அச்சமயம், திடீரென தரைப்பாலம் உடைந்து, சாலை வெடித்துச் சிதறியது போன்ற காட்சியை அங்குள்ளோர் கண்டு பயந்து ஓடினர்.

தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டி, பாதுகாத்த மனிதரூப கடவுள்களை நம் எல்லாருக்கும் அடையாளம் காட்டியிருக்கிறது, இந்த மழை வெள்ளம். இதற்கு மேல் வேறன்ன சொல்ல முடியும்?

படங்கள் மற்றும் வீடியோ உதவி: facebook, Youtube, IndiaToday.in and OneIndia