விமான போக்குவரத்துத் துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள்: 'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் பயிற்சி!

0

"10,12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு எவருக்கும் வேலையை தருவதில்லை. 10-12 மாதத் திறன் பயிற்சிதான் இன்று மாணவர்களுக்கு வேலை தருகிறது" - இது வேலை வாய்ப்பின் உண்மை நிலையை ஒரு வரியில் சொல்லும் மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வார்த்தைகள்!

கடந்த 69 ஆண்டுகளாக 'திறன் மேம்பாடு' என்பது பள்ளி, கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் கல்வியை சுற்றியே இருந்தது. தற்போதுதான் அதற்கென தனித் துறையை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. அதுவும் பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான ஆறு மாதங்களில் 'திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை' என்று ஒரு தனி துறையை மத்திய அரசு ஏற்படுத்தியது. அதற்கு தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சராக ராஜிவ் பிரதாப் ரூடியை பிரதமர் மோடி நியமித்தார்.

'Skill India' என்கிற குறிக்கோளை எட்டுவதற்கு இந்தத் துறை பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை 14 மத்திய அரசு துறைகளுடனும் பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் மட்டும் 13 முக்கிய இடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் பாதுகாப்புத் துறையில் சிறப்புப் பயிற்சிகள் வழங்க ஏதுவாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், இயந்திரங்களை ராணுவப் பயிற்சிக்காக நன்கொடையாக வழங்கி உள்ளது.

"ஒவ்வொரு துறையும் புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அனைத்திலும் கணினி மட்டுமல்ல, ரோபோ வரை இன்று பல துறைகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அவற்றை இயக்க திறன், ஆற்றல் தேவை. அந்த பயிற்சியை வழங்குவதே அரசின் நோக்கம்" என்கிறார், இந்த துறைக்கான செயலாளர் ரோகித் நந்தன்.

இதுவரை 80 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்துள்ள அரசு, அடுத்த கட்டமாக விமான போக்குவரத்துத் துறையில் திறன் பெற்றவர்களை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

"2035 ஆம் ஆண்டு வாக்கில் 8 முதல் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 3 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் இந்தத் துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. அதற்கு திறன் பயிற்சி பெற்றவர்களை உருவாக்க ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியாவும், தேசிய திறன் வளர்ச்சி கழகமும், தேசிய திறன் வளர்ச்சி நிதியமும் ஒன்று சேர்ந்திருப்பது ஆக்கப்பூர்வமான முயற்சி. இந்த திட்டதுக்கு 5.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியானது" என்று பாராட்டினார்.

"இன்று கல்வி வேறு திறன் வேறு என்று பிரித்துப் பார்க்கப் படுகிறது. வரும் காலங்களில் Professor of Plumbing, Professor of Welding என்பது கூட சாத்தியம் ஆகலாம். எட்டாவது, பத்தாவது முடித்துவிட்டு ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்களிடம் தான் கடும் திறன் பயிற்சி இருக்கிறது. அவர்களால் மேற்கொண்டு பட்டப்படிப்பில் சேர முடியாத நிலைதான் இன்று இருக்கிறது. எனவே ஐ.டி.ஐ படிப்பையும் ஒரு தகுதிப் படிப்பாக கல்விமுறையில் அங்கீகரித்து அந்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க விதிமுறைகள் மாற்றி அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அதன் மூலம் 1.8 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். " என்றார்.

அது போன்று +2 படித்துவிட்டு பைலட் படிப்பில் சேரும் மாணவன் கடைசிவரை +2 மாணவனாகவே கருதப்படும் நிலைதான் இருக்கிறது. அதனை மாற்றி அவர்களுக்குத் தகுந்த இணையான அங்கீகாரம் அளிக்க மனிதவள மேம்பாட்டுத் துறையை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வரும் காலங்களில் அவர்கள் மேல்படிப்பில் சேர அது உதவும்.

விமான போக்குவரத்துத் துறையில் பல பெயர்களில் நூற்றுக்கணக்கான வேலைகள் உள்ளன. அவைகளை முறைப்படுத்தி தேசிய திறன் தகுதி வரையறைக்குள் கொண்டுவர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரை அப்படி 6000 பணிகள் சேர்க்கப்பட்டுள்ளதாம். கட்டுமான துறையில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி உள்ளது. ஆனால் முறையான பயிற்சி பெற்றவர்கள் இல்லை. இப்படி வாகன உற்பத்தி, சில்லரை விற்பனை உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் திறன் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. விமான போக்குவரத்துத் துறையில் பயணிகள் சேவைமுதல் சரக்கு, உடைமைகளை கையாள்வது வரை பல வேலைகள் உள்ளன. அவற்றில் எல்லாம் திறன் பயிற்சி வழங்க முடியும். அது போல் ஆங்கிலம் உள்ளிட்ட அடிப்படை திறனும் இருந்தால் அவர்கள் அதிகம் பிரகாசிக்கலாம்.

"2001 - 2002 காலகட்டத்தில் பேப்பர் இல்லாத டிக்கெட் குறித்து பேசியபோது, அதனை பைத்தியக்காரத்தனமான ஐடியா என்று கேலி செய்தார்கள். ஆனால் அது இன்று நடைமுறையில் இருக்கிறது. குறைந்த கட்டண விமான சேவை உள்பட பலதும் அப்படித்தான் வரலாறு படைத்திருக்கிறது. 2006 ல் மொபைல் போன் விமானத்துக்குள் கொண்டு செல்லவே தடை இருந்தது. இன்று செல் பேசிகளை விமான மோடுக்கு மாற்றச் சொல்லும் விமான பணிப்பெண்களின் அறிவிப்புதான் வருகிறது. இன்னும் 5000 விமான பணியாளர்கள் (Cabin Crew) தேவை. எனவே, விமான போக்குவரத்து உள்பட அனைத்து துறைகளிலும் திறனாளிகள் உருவாக்கப்பட்டால்தான் 'திறன் இந்தியா' திட்டம் (Skill India) சாத்தியமாகும்" என்பது அமைச்சர் ரூடியின் எதிர்கால நம்பிக்கை!

கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக 22% லாப விகிதத்தில் விமான போக்குவரத்துத் துறை பயனடைந்து வருகிறது. பல புதிய விமான நிலையங்கள் வர இருப்பதாலும், விரிவாக்கங்கள் நடந்து வருவதாலும் திறன் பயிற்சி பெற்றவர்கள் இந்த துறைக்கு நிறைய தேவைப்படுகிறார்கள்.

வலைதள முகவரி: Skill Development and Entrepreneurship

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்