பட்டதாரிகளில் பலர் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?

0

நம் நாட்டில் பலர் சிறப்பாக கல்வி கற்றிருந்தாலும் வேறு வழியின்றி பிச்சையெடுக்கின்றனர். பொருளாதார மற்றும் அரசியல் ஊழல்கள்தான் இதற்குக் காரணம் என்று பல சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் 78,000 பிச்சைக்காரர்கள் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது டிப்ளோமா முடித்தவர்கள் என்று முந்தைய கணக்கெடுப்பில் குஜராத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல மாநிலத்தின் 4.5 சதவீத பிச்சைக்காரர்கள் படித்தவர்கள் என்று பிஹாரிலுள்ள சமூக நலத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒருவர் தனது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காதததால் ஒரு மருத்துவமனையில் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். பிறகு அந்த பணியைத் துறந்து பிச்சையெடுக்கத் துவங்குகிறார். முன்பைவிட அதிகம் சம்பாதிக்கிறார். அத்துடன் 30 பிச்சைக்காரர்கள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளார்.

50 வயதான ஃபர்சோனா எம்பிஏ முடித்தவர். சமீபத்தில் இவர் ஹைதராபாத்தில் பிச்சையெடுப்பது தெரியவந்தது. லண்டனில் அக்கவுண்ட்ஸ் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். கட்டிட வடிவமைப்பாளரான இவரது மகன் ஆனந்த்பாக் பகுதியில் வசிக்கிறார். ஃபர்சோனா தனது கணவன் இறந்த பிறகு மகனின் வீட்டில் வசித்து வந்தார். வாழ்க்கையில் பிரச்சனைகளை சமாளிக்க உதவ வேண்டி ஒரு சாமியாரை அணுகியுள்ளார். அவரை பீடித்துள்ள கெடுதல் நீங்கவேண்டுமானால் பிச்சையெடுக்கவேண்டும் என்று அந்த சாமியார் கூறியுள்ளார்.

மற்றொரு பெண்மணியான 44 வயது ரபியா பசீரா ஹைதராபாத்திலுள்ள ஒரு தர்காவின் முன்னால் பிச்சையெடுத்துள்ளார். அமெரிக்க க்ரீன் கார்ட் வைத்திருக்கும் ரபியாவின் குடும்பத்தினரே அவரை ஏமாற்றி அவரது மொத்த சொத்தையும் அபகரித்தனர். இதனால் வேறு வழியின்றி பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் ரபியா.

ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஏழ்மை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டார். மும்பைக்கு குடிபெயர்ந்தார். கொத்தடிமைத் தொழிலாளியாக பணி கிடைத்தது. அதன் பிறகு தனது பெற்றோருக்காக பிச்சை எடுக்கத் துவங்கினார்.

வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் கல்வி அமைப்பு இல்லாதது இந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என்று நாட்டிலுள்ள சமூகவியலாளர்களும் கல்வியாளர்களும் நம்புகின்றனர். படிப்பறிவுள்ள பிச்சைக்காரர்களின் உண்மையான எண்ணிக்கை அறிக்கைகள் தெரிவிக்கும் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் சீன பட்டதாரி மாணவர் ஒருவர் தெருக்களில் பிச்சையெடுக்கும் வீடியோ வைரலாக பரவியது. அவர் அறிவிக்கை பலகை ஒன்றை கையில் வைத்திருந்தார். இதை பிச்சையாக கருதாமல் அவருக்கு யாரேனும் கடனுதவி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெற்றதும் அவர்களது கடன் தொகையை நிச்சயம் திருப்பி செலுத்திவிடுவதாகவும் அந்தப் பலகையில் குறிப்பிட்டிருந்தார். கொடையாளிகளின் விவரங்களை பதிவு செய்துகொள்ள ஒரு நோட்புக்கையும் உடன் வைத்திருந்தார் அந்த மாணவர்.

பல ஆண்டுகளாகவே பல்வேறு அறிக்கைகள் இந்த உலகின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன. நாட்டின் 3.72 லட்சம் பிச்சைக்காரர்களில் 78,000 பேர் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்று 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த பிச்சைக்காரர்களில் 3,000 பேர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கட்டுரை : Think Change India