பைக்கை விற்று இளைஞர் துவங்கிய நிறுவனம் 'ஆஃபீஸ் ஸ்மார்ட்'

9

பரத் அக்கிபல் வெளிநாட்டில் மேலாண்மை படிப்பதற்காக 2014ம் ஆண்டு ஜிமாட் தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது விதி வேறு தேர்விற்காக தயார் செய்தது. தேர்வு அறையில் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி. அவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. காரணம் அவரது பெயர் சார்ந்த பிரச்சினை.

ஜிமாட் எழுத முடியவில்லை. அது கொடுத்த அதிர்ச்சியில், கொஞ்சம் நிதானமாக யோசித்து பார்த்தார். எம்பிஏ படிக்க வெளிநாடு சென்றால் லட்சக்கணக்கில் பணம் செலவாகும். படித்துமுடித்த பிறகு வேலை கிடைக்காவிட்டால் பணத்தை எப்படி கட்டுவது. படிப்பதற்கு ஆகும் செலவில் தொழில் செய்தால் என்ன என்று யோசித்தார். ஆனால் அது அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை.

ஆபீஸ் ஸ்மார்ட் குழு
ஆபீஸ் ஸ்மார்ட் குழு

மூன்று தலைமுறையாக அரசாங்க வேலையை மட்டுமே பார்த்துவந்த ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்த பரத், தொழில் செய்யப்போவதாக சொன்ன போது வீட்டிலிருந்த எல்லோருமே எதிர்த்தனர். எனவே வீட்டைவிட்டு வெளியேறினார்.

 “வீட்டைவிட்டு வெளியேறியபோது என் கையில் வெறும் 17ரூபாய் மட்டுமே இருந்தது. வங்கியில் என் பெயரில் எந்த பணமும் இல்லை. எனவே தொழில் துவங்குவது பற்றி அப்போது யோசித்துக்கூட பார்க்க முடியாத நிலையில் இருந்தேன். பைக் சேகரிப்பில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. என்னுடைய சம்பளப்பணம் முழுதும் அதிலேயே போய்விட்டது. இதுவரை 13,14 யெஸ்டி மற்றும் ஜாவா பைக்குகள் வாங்கியிருப்பேன், அப்போது சேமிப்பது பற்றி பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை” என்கிறார்.

இதற்கு முன்பு ஸ்டாப்ள்ஸ்(Staples) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய போது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அலுவலகத்தில் பயன்படுத்தும் எழுதுபொருட்களை வழங்கக்கூடிய விற்பனையாளர்களுக்கான தேவை இருப்பதை கவனித்தார். “சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் சாத்தியங்களை எப்போதுமே கவனித்திருக்கிறேன். அங்கு வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பணச்சுழற்சி அதிகமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். பொதுவாகவே, பெரிய கணக்குகளை உருவாக்குவது தான் கடினம். அங்கு நிறைய சரக்கு தேவைப்படும், அதை வாங்க அதிக பணம் தேவைப்படும்” என்கிறார் பரத்.

இந்த இடத்தில் உதித்தது தான் "ஆஃபீஸ் ஸ்மார்ட்" நிறுவனம் ( OfficeSmart.in)

துவக்கம்

தன்னிடமிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட பைக்குகளை விற்றே நிறுவனத்தை துவங்கினார் பரத். துவக்கத்தில் தன் நிறுவனத்திற்கென தனியாக இடம் பார்க்காமல், வேறு ஒரு நிறுவன கட்டிடத்திலேயே இவர் நிறுவனம் இயங்கியது. முதல் மூன்று மாதம் வாடகை காரின் மூலமே பொருட்களை விநியோகம் செய்தார்.

“ஆரம்பத்தில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு சென்று பொருட்களை விநியோகிக்க சிரமமாக இருந்தது. ஆனால் இன்று வெறும் மூன்று பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறோம் எனும்போது பெருமையாக இருக்கிறது” என்றார்.

இந்த நிறுவனத்தின் மூலமாக பீன் பைகள் அலுவலகத்திற்கு தேவையான பெயர்ப்பலகை, திருத்தியமைக்கப்பட்ட டி-சர்ட்டுகள், சிறு நோட்டுகள் மற்றும் பேனாக்கள் போன்ற அலுவலகத்திற்கு தேவையான எல்லாவற்றையும் வழங்குகிறார்கள். உங்கள் நிறுவனத்தை ஏன் ”கலப்பு” (hybrid) என்று அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள் என்று கேட்ட போது மற்ற பி2பி நிறுவனங்களெல்லாம் மிகக்குறைவான சரக்குகளை மிகக்குறுகிய நாள் இடைவெளையில் தர மாட்டார்கள் ஆனால் நாங்கள் தருகிறோம் என்கிறார்.

இன்று ஆயிரம் விதமான சரக்குகளை சேமித்து வைக்கும் நாற்பது விற்பனையாளர்களை பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரக்கிற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் பத்து மடங்கு விற்பனையை ஈட்டி தரும் என்கிறார் பரத்.

எப்படி வேலை செய்கிறார்கள்?

ஆஃபீஸ் ஸ்மார்ட்டில், வாடிக்கையாளர்கள் மூன்று பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், எப்போதும் ஸ்மார்ட், ஸ்மார்ட்டாக வாங்கு மற்றும் ஸ்மார்ட் ஒப்பந்தம் என்பதே அவை. ஒரு நிறுவனம் மாதம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுக்கு சலுகை வழங்குகிறார்கள்.

இந்த தளத்தில் நுழையும் பயனாளர்கள் சூப்பர் யூசர், சப் யூசர் என இரண்டுவகையாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். சப் யூசர் தனக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து அதை விண்ணப்பமாக சூப்பர் யூசருக்கு அனுப்புவார். சூப்பர் யூசர் அதற்கு ஒப்புதல் அளிப்பார். அதன் பிறகு ஆஃபீஸ் ஸ்மார்ட் குழு அந்த பொருட்களை விநியோகிக்கும். பயனர், பொருட்களின் வகைகள், பொருட்கள், துறைவாரியான நுகர்வு போன்ற தகவல்களை சூப்பர் யூசர் பார்வையிட முடியும். இதை வைத்து விற்பனைக்கும் கையிருப்புக்கும் உண்டான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியும்.

விற்பனை மற்றும் விரிவாக்கம்

ஒவ்வொரு ஆண்டு வளர்ச்சியை ஒப்பிடும்போது, ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது ஐந்து மடங்கு வளர்ச்சியை எட்டி இருக்கிறது. வேறு யாரிடமும் பண உதவி பெறாமலேயே இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவர் 2014 ஆம் ஆண்டு ஒரு மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு ரசீது வழங்கியவர்கள், ஜனவரி 2015ம் ஆண்டு ஐந்து லட்சத்திற்கு ரசீதளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானமானது ஒவ்வொரு மாதமும் 33 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்கிறார் நிறுவனரான பரத்.

ஆஃபீஸ் ஸ்மார்டில், அடிக்கடி வாங்கக்கூடிய 15 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மாதம் ஒருவர் இந்த பட்டியலில் புதிதாக இணைகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய உள்ளது. மாதம் மூன்று பேர் என்ற இலக்கை நோக்கி நகர்வதாக தெரிவிக்கிறார்.

பெங்களூர், தமிழ்நாடு மற்றும் ஐதராபாத்தில் தொழில் செய்யும் இவர்கள் பெங்களூரில், கோரமங்களா, எச்.எஸ்.ஆர் லேஅவுட், சர்ஜபூர், எம்.ஜிரோடு, ஜெயநகர் மற்றும் ஜேபிநகரில் இவர்களே விநியோகிக்கிறார்கள். மற்ற இரு மாநிலங்களில் வேறொருவர் மூலமாக வீட்டிற்கே வழங்கிவிடுகிறார்கள். மதுரை, கண்ணூர், கோயம்புத்தூர், திருச்சி மற்றும் பாண்டிச்சேரியில் அடிக்கடி தொழில் நடப்பதாக தெரிவிக்கிறார். ஒரு ஆர்டர் இருபதாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் நடக்கிறது. இது போல வாரம் ஆறிலிருந்து பத்து ஆர்டர்கள் வருவதாக தெரிவிக்கிறார்.

அடுத்த காலாண்டில் இருந்து கைப்பேசி செயலியில் மட்டுமே இயங்கப்போவதாக தெரிவிக்கிறார் பரத். விநியோகச்சங்கிலியை விரிவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இருப்பதாகவும், இதற்கான நிதியை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கிறார். 500 பகுதிகளில் விநியோகிக்கக்கூடிய நிறுவனம் ஒன்றோடு இதற்காக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

குழு

ஜெஃப் பெஸோவின் இரண்டு பீட்ஸா விதியால் கவரப்பட்ட பரத், ஆரம்பத்தில் வெறும் மூன்று பேரை மட்டுமே வேலைக்கு சேர்த்து பயிற்சியளித்திருக்கிறார். இன்று அந்த மூவரே எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்ளக்கூடிய திறன் பெற்றிருப்பதாக தெரிவிக்கிறார். தனிப்பட்ட முறையில் அந்த குழுவே எல்லா முடிவுகளையும் எடுக்கக்கூடிய அதிகாரத்தை வழங்கியிருக்கிறார். இது ஆரம்பகாலங்களில் நல்ல பலனளித்திருக்கிறது.

இந்தியாவில் பி2பி சந்தை 300 பில்லியன் டாலர் மதிப்பை உடையது. இது 2020ல் 700 பில்லியனாக உயரும் சாத்தியமுள்ளது. இதில் 95 சதவீத சந்தையானது சரியாக ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதால் இந்த துறைக்குள் நுழைபவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. 2012ம் ஆண்டு இந்தியாவின் அலுவலக பொருட்களுக்கான சந்தை தோராயமாக 20 பில்லியன் டாலர் மதிப்புடையது. ஏற்கனவே இரண்டு நிறுவனங்கள் இந்த சந்தையில் ஈடுபட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸோபியோ.காம்( Zoffio.com) என்ற நிறுவனம் தான் இவர்களின் முக்கியமான போட்டியாளர், கடந்த ஆண்டின்(2014) ஐந்து சிறந்த சிறு தொழில் நிறுவனங்களில் ஒன்றாக கூகிள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் ஆகும். குர்கானை மையமாக வைத்து இயங்கும் ஆபீஸ்எஸ்.காம் என்ற நிறுவனம், 2013ம் ஆண்டு 2லிருந்து 5 பில்லியன் டாலர் பணத்தை ஆரம்பகால முதலீட்டளரிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த கோப்ஸ்டர் என்ற நிறுவனம் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியில் சொல்லப்படாத அளவு பணத்தை நிதியாக பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையதள முகவரி: OfficeSmart