மாற்றுத்திறனாளிகளை குறைத்து மதிப்பிடாது வாய்ப்பு அளியுங்கள்: பெரு மூளை வாதம் ஏற்பட்டும் எழுத்தாளராக சிறக்கும் சாலேஷ் தீபக்

1

நல்ல உடல் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும் நாம் பல சமயங்களில் உடைந்து நம்பிக்கையை இழக்கிறோம். ஆனால் மாற்றுதிறனாளிகள் பலர் ஊனம் ஒரு குறை இல்லை என்று பல துறைகளில் சாதித்து பலருக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர். அது போல் அனைவரையும் ஊக்குவிக்கும் அசாத்திய நம்பிக்கைக் கொண்ட எழுத்தாளர் சாலேஷ் தீபக் ஃபெர்னாண்டோ உடன் பேசினோம்.

சாலேஷ் தீபக் பெர்னாண்டோ
சாலேஷ் தீபக் பெர்னாண்டோ
“குழந்தையில் இருந்தே என்னால் நடக்க முடியாது. பள்ளிக்குக் கூட என் தாய் தூக்கி தான் செல்ல வேண்டும். ஆனால் என் விடாமுயற்சியால் இப்பொழுது நான் எந்த துணையும் இன்றி நடக்கிறேன்...”

என நம்பிக்கை உடன் பேசத் தொடங்குகிறார் சாலேஷ். குறைப்பிரசவத்தில் ஏழு மாதத்தில் பிறந்தவர் இவர். பிறந்து ஒரு சில மாதத்திலேயே ’பெருமூளை வாதம்’ என்னும் நோயால் சாலேஷ் பாதிக்கப்பட்டார். அதாவது அவரால் நடக்கமுடியாது, வாழ்நாள் முழுவதும் உடல் அசைவில் சிரமம் இருக்கும். ஆனால் அதன் பின் அறுவை சிகிச்சை செய்து ஊன்றுகோல் உதவியுடன் இவரால் நடக்க முடிந்தது. அவரது விடாமுயற்சி மூலம் சற்று சிரமப்பட்டாலும் இன்று எந்த உதவியும் இன்றி இவரால் நடக்க முடிகிறது.

“வெளியே சென்று விளையாட முடியாததால் என் தந்தை அதிக புத்தகங்களை பரிசளித்தார். இதனால் எழுத்தின் மீது எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. வலதுகையில் எழுத வராததால் இடது கையில் எழுத பழகிக்கொண்டேன்,” என்கிறார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதே இவருக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இவரது திறமையை கண்ட ஆசிரியர் சாலேஷை இன்னும் எழுத அதிகம் ஊக்கப்படுத்தினார். எழுத்தின் மீது ஆர்வம் இருந்தாலும் பள்ளி படிப்பை முடித்தவுடன் லயோலா கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு அதின் பின் எம் பி ஏ வும் முடித்துள்ளார்.

படிப்பை முடித்தவுடன் பெரிய நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்து எட்டு வருடம் பணி புரிந்துள்ளார்.

“மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு இங்கு மிகவும் குறைவு. ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மாற்றுத் திறனாளியை பணியில் அமர்த்த முயற்சி செய்கின்றனர். என் நிறுவனம் அதில் மிகுவும் சிறந்தது.”

படித்த வேலைக்கு ஏற்ற வேலை சம்பளம் இருந்தும் கூட பணியில் இருக்கும்பொழுதே வலைபதிவு செய்ய தொடங்கிவிட்டார் இவர். 5 வருடமாக ப்ளாகிங் செய்து வருகிறார். அதில் ஈடுபாடு அதிகரிக்க சில மாதங்களுக்கு முன் தன் வேலையில் இருந்து விலகி முழுநேர ப்ளாகர் ஆகிவிட்டார் சாலேஷ் தீபக்.

சென்னை ப்ளாகர் கிளப் வெளியிட்ட “ஆஃப்டர் தி ஃபிளட்ஸ்” என்னும் ஆங்கில புத்தகத்தில் ஒரு பகுதியை எழுதியுள்ளார். மேலும் தங்க்லீஷ் நகைச்சுவை குழுவின் நகைச்சுவை விமர்சகராகவும், ஆசம் மச்சி என்னும் யூடியுப் சேனலின் திரை விமர்சகராகவும் இருக்கிறார். அது மட்டுமின்றி இவர் ஒரு சிறந்த மேடை பேச்சாளரும் கூட.

இவர் எழுதும் வலைபதிவுகள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலேயே அமைகிறது.

“மாற்றுத் திறனாளிகளுக்கு குரலாக நான் இருக்க விரும்புகிறேன். வளர்ந்து வரும் எழுத்தாளர் ஆன நான் அவர்களை என் சகோதர சகோதரிகளாக நினைத்து உந்துதலாய் இருக்க விரும்புகிறேன்,” என்கிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித கருணையும் வித்தியாசமான நடத்தையும் தேவை இல்லை என்கிறார் இவர். தன் குழந்தை பருவத்தில் சராசரி பள்ளியில் அவரால் சேர முடியாததையும் நினைவுக் கூறுகிறார். தன்னைப் போன்றோருக்கு வாய்ப்பு அளிக்காமல் எந்த வித முடிவையும் எடுக்க வேண்டாம், முதலில் வாய்ப்பு அளியுங்கள் என்கிறார் சாலேஷ் தீபக்.

“நான் உங்களுடன் இன்று பேசுவதற்குக் காரணம் என் முயற்சியால் நான் முன்னேறியதே . அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமைய வேண்டும்...” என முடிக்கிறார் இந்த தன்னம்பிக்கை நாயகன். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin