’அம்மா கீ அல்மாரி’ வாயிலாக மின் வணிகத்தில் ஈடுபட்டு கலக்கும் 73 வயது பாட்டி!

தனது குடும்பத்திற்காக குரோஷா பின்னல்களை பின்னிக் கொண்டிருந்த 73 வயது ஜானகி, அவற்றை ’அம்மா கீ அல்மாரி’ மூலம் விற்பனை செய்யலாம் என உணர்ந்து இன்று மற்ற அம்மாக்கள் தங்களது கனவை மெய்யாக்க உதவி வருகிறார்.

0

’அம்மா’ என்கிற சாட்டி ஜானகி மிகுந்த சிரத்தையுடன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகிறார். அவரது அலமாரியைப் பார்த்தால் அவருக்கு குரோஷா பின்னல்கள் மீது ஆறு வயது முதலே இருக்கும் ஆர்வம் தெரியும். அந்த வயதிலேயே நூல் சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் வண்ணமயமான உருளைகளையும் நூல்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்.

அம்மா இந்தப் பணியில் ஈடுபடத் தீர்மானித்தபோது அவருக்கு வயது 73. வயது மற்றும் நேரம் குறித்து ஒரு பொதுவான கருத்து அனைவருக்கும் இருக்கும். அவரது தைரியமும் லட்சியமும் அந்த கருத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தது.

அவரைப் போன்ற மற்ற பாட்டிகளையும் 'Amma Ki Almaari' ’அம்மா கி அல்மாரி’ என்கிற தனது மின் வணிக தளத்தில் இணைத்துக்கொண்டார். இது பலரது பொழுதுபோக்கை வருவாயாக மாற்றுகிறது. இந்த முயற்சி துவங்கிய விதம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

பட்டைதீட்டப்பட்ட பொழுதுபோக்கு

சாட்டி ஜானகி ஆந்திரப்பிரதேசத்தின் கசிம்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை படித்தார். 19 வயதிருக்கையில் திருமணம் நடந்தது. எனினும் அந்த இளம் வயதிலேயே அவருக்கு தையல், குரோஷா மற்றும் பின்னல் ஆகியவற்றில் அதீத ஆர்வம் இருந்தது. இந்த கலை வடிவங்கள் சார்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற படிப்பை முடித்தார்.

அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசுப்பொருட்களைக் கொடுத்தார். குடும்பத்தினருக்கு பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களை அவராகவே உருவாக்கி பரிசாகக் கொடுத்தார். அவரது திறமையை இவ்வாறே வெளிப்படுத்தி வந்தார். 

”என்னுடைய குழந்தைகள் அணிந்த அத்தனை குரோஷா பின்னல் ஆடைகளையும் நானே பின்னினேன். குளிர்கால ஆடைகள் எதையும் கடையில் வாங்கியதில்லை,” என்றார்.

சாட்டியின் படைப்புகள் அவரது குடும்பத்தினரை ஈர்த்தது. அவ்வளவுதான். அதைத்தாண்டி எதுவும் நடக்கவில்லை. அவரது மகள் சாட்டி கிரிஜா விளம்பர ப்ரொஃபஷனல். ’வெர்ஷன் நெக்ஸ்ட் டிஜிட்டல்’ என்கிற டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியை நடத்தி வருகிறார். கிரிஜா ஒருமுறை ஜானகி உருவாக்கிய பொருட்களின் தரம் சிறப்பாக இருப்பதால் அதை விற்பனை செய்யலாம் என திட்டமிட்டார். இருவரும் இந்தத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தினர்.

சாட்டி ஜானகியின் சர்வதேச பயணமும் சாட்டி கிரிஜாவின் ஆய்வும் புதிய குரோஷா பின்னல் தயாரிப்புகளை ஜானகி உருவாக்க உதவியது. உதாரணத்திற்கு பாட்டில்களில் கலை வேலைப்பாடு, சுவரில் மாட்டும் ஃப்ரேம்கள், தட்டுகளில் ப்ரிண்ட் செய்தல் உள்ளிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தினர். 

”என்னுடைய தயாரிப்புகளின் உண்மையான பார்வையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் அந்தத் தயாரிப்புகள் ’பாட்டியின் கலை’ என்கிற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படக்கூடாது. இவற்றை உறுதிசெய்யவேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய கவலையாக இருந்தது,” என்றார்.

வளர்ச்சி

2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாட்டி கிரிஜா ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் புதுவரவாக ‘அம்மா கீ அல்மாரி’ என்கிற நிறுவனத்தைத் துவங்கினார். 

”என் குழந்தைகள் என்னை அன்புடன் ’அம்மா’ என்றே அழைப்பார்கள். என்னுடைய அனைத்து குரோஷா பின்னல் நூல், சாதனங்கள், படைப்புகள் அனைத்தும் அழகாக ஒரு பழமையான ரோஸ்வுட் அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்,” என்று பெயர் காரணத்தை விளக்கினார்.

அந்த வீட்டில்தான் அனைத்தும் துவங்கியது. அவர்கள் தங்களது வீட்டிலேயே கண்காட்சிகளை ஏற்பாடு செய்தனர். அவர்களது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் வந்து அவரது பொருட்களை வாங்கிச் சென்றனர். அதே நேரம் அவர்கள் சில பொருட்களை புகைப்படம் எடுத்து ’அம்மா கீ அல்மாரி’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர்.

உடனே 73 வயதுப் பெண்மணி தொழில் துவங்கிய விஷயம் மக்களிடையே பரவியது. சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் தயாரிப்புகளில் பல பிரிவுகளை இணைத்துக்கொண்டே இருந்தார்.

”என்னுடைய படைப்புகளை பெரியளவில் ஆஃப்லைனிலும் கொண்டு சேர்க்கத் தீர்மானித்தோம். கண்காட்சிகள், வெளியே கடைகள் அமைப்பது, கார்ப்பரேட்களுக்கான பிரத்யேக கண்காட்சி, ரஹேஜாஸ் போன்ற குடியிருப்பு சமூகங்கள் போன்றவற்றில் செயல்படத் துவங்கினோம். எங்களது ஆஃப்லைன் செயல்பாடு காரணமாக ஒருவர் மற்றவருக்குப் பரிந்துரைப்பதன் மூலம் அதிக விளம்பரம் கிடைத்தது,” என்றார்.

’காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்கிற பழமொழிக்கேற்ப சாட்டி கிரிஜா மற்றும் அவரது வணிக பார்ட்னர் உதய் சால்வி ’அம்மா கீ அல்மாரி’ (டாட்காம்) என்கிற மின் வணிக தளத்தை உருவாக்கினர். ப்ராண்டை நிர்வகிக்கவும், மார்கெட்டிங் மற்றும் கூடுதல் பொருட்களை இணைத்து வளர்ச்சியடையவும் தொடர்ந்து ஜானகிக்கு ஆதரவளித்து வந்தனர்.

எனினும் இதைக்காட்டிலும் பெரிதான செயலில் ஈடுபடவேண்டும் என்பது குழுவிற்கு தெளிவானது. ஒரு சிறந்த தயாரிப்பு வயது, சாதி, அந்தஸ்து போன்ற சமூக மற்றும் பொருளாதார தடைகளைக் கடந்து அதற்குரிய இலக்கை எட்டி வெற்றியடையும் என்பதற்கு சாட்டி ஜானகியின் வெற்றிக் கதை ஒரு சிறந்த உதாரணம். விரைவில் ஜானகி தன்னைப் போலவே பல அம்மாக்கள் இருப்பதையும் அவர்களது கலை தங்களது அலமாரியிலிருந்து நெருக்கமானவர்களிடம் வெறும் பரிசுப்பொருளாக மட்டுமே சென்றடைவதை உணர்ந்தார். ஆனால் உண்மையில் அவை திறக்கப்படுவதற்காக காத்திருக்கும் புதையை பெட்டி. 

“சக அம்மாக்களின் திறமைகளுக்கு உரிய மரியாதையும் சன்மானமும் கிடைக்க உதவும் பணியைத் துவங்கத் தீர்மானித்தேன்,” என்றார் ஜானகி.

அதிக செயல்பாடுகள்

வெர்ஷன் நெக்ஸ்ட் டிஜிட்டல் (VND) அம்மாக்களை பல்வேறு விதங்களில் சென்றடையத் துவங்கியது. நகர்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வசிப்பவர்கள், அடிப்படை வசதிகளுக்காக போராடும் கிராமப்புறப் பெண்கள், படைப்புத்திறனுடன் கலைகளைப் படைக்கும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அம்மாக்கள் போன்றோர் தங்களது கலைப் படைப்புகளை மின் வணிக தளத்தில் விற்பனை செய்பவர்களாக இணைத்தனர். அவர்களது மாதிரியை மறுஆய்வு செய்து சிறப்பான தரமான பொருட்களை உருவாக்கும் அம்மாக்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சந்திக்கும் சமூகமாக மாற்றினர்.

இந்தியா முழுவதுமிருந்து 50-க்கும் அதிகமான பெண்களை இணைத்துக்கொண்டனர். தற்போது ஆன்மீக கற்கள், தலையணை உறைகள், மேசைமேல் வைக்கும் பொருட்கள், பண்டிகைக்கால பரிசுப்பொருட்கள், மரத்தினாலான கலைப்பொருட்கள், கைகளால் செய்யப்படும் ஆபரணங்கள், கைகளால் செய்யப்படும் அலுவலகப் பொருட்கள், பிரத்யேக படைப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

”தற்போது வரை சுயநிதியில் இயங்கி வருவதால் நிதி சார்ந்த பிரச்சனைகளே மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதை எதிர்கொள்ள பொருட்களின் இருப்பை அதிகரித்து உற்பத்திச் செலவினை குறைத்து அதைக் கொண்டு மறுபடியும் அதிகளவில் உற்பத்தி செய்கிறோம்,” என்றார்.

’அம்மா கீ அல்மாரி’ தளம் மேலும் அதிக பெண்களை இணைத்துக்கொள்வதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. கலைத் திறமைகளால் நிரம்பியிருக்கும் ஒவ்வொரு அலமாரிக்கும் உயிர் கொடுக்க நினைக்கிறது இந்தத் தளம்.

இந்த அனைத்து முயற்சிகளுக்கும் காரணமான அந்த முதல் அம்மாவான சாட்டி ஜானகி மும்பையின் சோமய்யா வித்யவிஹாரில் ஜனவரி மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கவிருக்கும் ’மேக்கர்ஸ் மேளா 2018’-ல் பங்கேற்கத் தயாராக உள்ளார்.

வலைதளம்: Amma Ki Almaari

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா

Related Stories

Stories by YS TEAM TAMIL