தினக்கூலி தம்பதிக்குப் பிறந்த  கோபால கிருஷ்ணா  ஐஏஎஸ் ஆக உருவான கதை!

0

ஆந்திரப்பிரதேசத்தின் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 30 வயதான கோபாலகிருஷ்ண ரோனாகி, UPSC தேர்வில் அனைத்திந்திய அளவில் மூன்றாவது ரேங்க் எடுத்துள்ளார். சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பிரிவிலும் நிலையான வருமானம் இல்லாத சூழலிலும் வளர்ந்த இவரது பயணம் எளிதாக இருக்கவில்லை.

ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலா. அவரது அப்பா அப்பாராவும் அம்மா ருக்மணியம்மாவும் தினக்கூலி அடிப்படையில் விவசாயப் பணி புரிந்துவந்தனர். எனவே மின்சார வசதியின்றியும் தனியார் பள்ளியில் படிக்கும் வாய்ப்பின்றியும் வளர்ந்தார் கோபாலா. அவர் படித்த அரசுப்பள்ளி 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தினமும் நடந்துதான் பள்ளிக்குச் சென்று வருவார். பள்ளிப்படிப்பை முடித்ததும் ஆசிரியர் பயிற்சி வகுப்பிற்குச் சென்றார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல்படி அவர் கூறியதாவது,

”மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள துபாசார்லாவில் நான் இரண்டாண்டுகள் ஆசிரியர் பயிற்சி வகுப்பு முடித்தேன். 2006-ம் ஆண்டு அரசுப்பள்ளி ஆசிரியராக தேர்வானேன். என்னுடைய வாழ்வாதாரத்திற்காக பணம் ஈட்டவேண்டிய நிலை இருந்ததால் பணியில் சேருவதற்கு முன்னுரிமை அளித்தேன்,”

பொருளாதார ரீதியில் சிறப்பாக இல்லாத காரணத்தால் அவரது குடும்பம் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் சமூகத்திலிருந்து ஒடுக்கி வைக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தலித் வீட்டின் திருமண நிகழ்வில் அவரது பெற்றோர் பங்கேற்றதால் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அவர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. கோபாலா ஐஏஎஸ் அதிகாரியாக விரும்பினார். ஆகவே இதுபோன்ற பிரச்சனைகள் அவரது மனதை மேலும் திடப்படுத்தியது.

அரசுப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிறகு பிஎஸ்சி படிப்பை தொலைதூரக் கல்வி வாயிலாக முடித்தார். குடும்பத்தை ஆதரிக்க ஆசிரியராக பணிபுரிந்தவாறே UPSC தேர்வுகளுக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். தினசரி பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி படிக்கமுடியாத காரணத்தால் ஒரு சில முறை தோல்வியுற்றார். இதனால் அவர் தயாராக பத்தாண்டுகளானது.

இறுதியாக 2016-ம் ஆண்டு அனைத்திந்திய ரேங்காக மூன்றாம் இடம் எடுத்து ஐஏஎஸ் அதிகாரியாகவேண்டும் என்கிற தனது கனவை நிறைவேற்றினார். அவரது ஆர்வத்திற்கான பின்னணி குறித்து தி ஹிந்துவுடன் பகிர்ந்துகொள்கையில்,

”என்னுடைய ஏழ்மையான பின்னணி மற்றும் குடும்பம் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட நிலை போன்றவை என்னை பெரியளவில் சிந்திக்கத் தூண்டியது. என்னுடைய விடாமுயற்சி இறுதியில் என்னுடைய நோக்கத்தை அடைய உதவியது. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு உதவுவதே என்னுடைய முக்கிய நோக்கமாகும்,” என்றார்.

கட்டுரை : Think Change India