'பிக் பாஸ்' தமிழ்: ரியல் ஆக சுற்றப்படும் ரீல்களின் தொகுப்பு!

0

பிக் பாஸ்'- கடந்த ஒரு வாரமாக தமிழகம் எங்கும் திரும்பிய இடமெல்லாம் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை பற்றிய பேச்சுகளும், மீம்ஸ்களும், விமர்சனங்களையும் கடக்காமல் நாம் எவரும் இருந்திருக்க முடியாது. ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரசித்தி பெற்ற விஜய் டிவி இந்த செலிபிரிட்டி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை முதன்முதலில் தமிழில் இந்த ஆண்டு ஒளிப்பரப்புகிறது.

பிரம்மாண்ட விளம்பரத்துடன் 'உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழக்கும் 'பிக் பாஸ்' ஷோவுக்கு அமோக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது என்னமோ உண்மை. வெள்ளித்திரையில் மட்டும் தோன்றிய கமல், இப்போது நம் வீட்டு வரவேற்பு அறையில் நேரடியாக அதுவும் நடிப்பாக இல்லாமல் தன் இயல்பாக இருக்கப்போகிறார் என்பதே கூடுதல் ஆர்வத்தை தூண்டியது.

பட உதவி: Endemol Shine India
பட உதவி: Endemol Shine India

கடந்த ஞாயிறு தொடங்கிய 'பிக் பாஸ்' பார்வையாளர்களை உண்மையில் வெகுவாக கவர்ந்துள்ளதா? வெறும் வர்த்தக நோக்கிற்காக மட்டும் நடத்தப்படும் இந்த ரியாலிட்டி ஷோவில் உண்மை இருக்கிறதா? உலக நாயகனிடம் எதிர்ப்பார்த்தது கிடைத்ததா? செலிபிரிட்டி எதிர்ப்பார்ப்பு பூர்த்தி ஆனதா? என பல விஷயங்கள் கேள்விகளாக நிற்க, அதற்கான விமர்சனங்களும் சமூக ஊடகங்களை பெரும் அளவு நிரப்பி ட்ரெண்டிங் ஆகும் அளவிற்கு போய்விட்டது.

சரி 'பிக் பாஸ்' உண்மையாக எப்படிப்பட்ட நிகழ்ச்சி? இதன் பூர்வீகம் என்ன? இது உண்மையில் ஒரு ரியாலிட்டி ஷோவா? உங்கள் சந்தேகங்களுக்காக சில தகவல்கள்:

முதன்முதலில் எண்டமால் என்னும் நிறுவனம் 'பிக் பிரதர்' (Big Brother) என்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை நெதர்லண்ட் நாட்டில் 1999-ம் வருடம் அறிமுகம் செய்தது. ஜான் டி மோல் என்ற டச்சுக்காரர் வெறும் திரைப்படங்கள், சீரியல் மட்டுமே அறிந்திருந்த காலத்தில் புதுமையான நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க முடிவெடுத்து, இந்த ரியாலிட்டி ஷோவிற்கான ஐடியாவை முன்வைத்து வெளியிட்டார். பிக் பிரதர் அதாவது பெரிய அண்ணன் என்ற பொருள்படும் இந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஆனதில் யூகே, அமெரிக்கா நாடுகளிலும் அறிமுகம் செய்ய எண்டமால் நிறுவனம் முடிவெடுத்தது.

2000-ம் ஆண்டு பெருத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே 'பிக் பிரதர்' லண்டன் மற்றும் அமெரிக்காவில் வெளியானது. ஆனால் பிக் பிரதர் எனும் அசல் நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த சாமானியர்கள்தான் பங்கேற்பாளர்களாக வீட்டிற்குள் வருவர். வெளி உலகில் இவர்கள் பிரபலம் இல்லை. ஆனால் முகம் தெரியாதவர்களுடன் இவர்கள் எப்படி பழகுகிறார்கள், நாட்களை கழிக்கிறார்கள் என்பதே நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

ஆனால், இந்தியாவில் 'பிக் பாஸ்' என்ற பெயரில் மாறிய பிக் பிரதர் 2006-ல் இந்தியில் முதன்முதலில் வெளியானது. இந்திய ரசிகர்கள் சாமானியர்களை திரையில் ரசிக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் பிரபலங்கள் கலந்துகொள்ளும் ஷோவாக அறிமுகப்படுத்தினார்கள். ஆங்கில பிக் பிரதரும் இடையிடையே சில சீசனை பிரபலங்களைக் கொண்டு நடத்தி வந்தது. அப்படி 2005-ம் ஆண்டு நடந்த சீசன் 5 பிக் பிரதரில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி பிரிட்டன் சென்று அதில் பங்கேற்பாளராக கலந்துகொண்டார். அப்போது வீட்டினுள் அவரை இனவேறுபாடோடு ஒரு வெள்ளைக்காரர் நடத்தியது உலகெங்கும் சர்ச்சையாகி, இறுதியில் யூகே மக்களின் அமோக ஆதரவு வாக்குகளுடன் ஷில்பா ஷெட்டி வெற்றியும் பெற்றார்.

பொதுவாகவே பிக் பிரதரில் கலந்துகொள்ளும் பிரபலங்களும் மார்க்கெட் அதிக அளவில் இல்லாத நடிகர்கள், மாடல்கள் மற்றும் இதர துறை நட்சத்திரங்களாக இருப்பர். அதேபோல் இந்தியாவில் பிக் பாஸ் ஹிந்தியிலும் கூட வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள், மாடல்கள், அரசியல்வாதிகள், கவிஞர்கள் என்று பல துறைகளில் இருந்து கலந்துகொண்டு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தமிழ் 'பிக் பாஸ்' எதிர்ப்பார்ப்பும், ஏமாற்றமும்...

தமிழ் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு வருவோம். முதல் விஷயம், கமல் என்னும் மாபெரும் கலைஞனை முன்னிருத்தி விளம்பரப்படுத்தியதால் இந்த ஷோவை பற்றி தெரியாதவர்கள் பலரும் அவர் தினமும் திரையில் தோன்றுவார் என்று எதிர்ப்பார்ந்து ஏமாந்திருக்கலாம். ஆம், இதில் 'பிக் பாஸ்' என்ற கேரக்டர் கமல் இல்லை. அவர் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டுமே. வாரம் ஒரு முறை, குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள் வாக்களித்து வெளியேற்றும் பங்கேற்பாளரை அறிவித்து அவர் வெளிவரும்போது அவரின் அனுபவங்களை பற்றி பேசுவார். இதுவே கமலின் பங்கு. மற்றபடி பங்கேற்பாளர்களின் நடவடிக்கை, பேச்சுகள், அழுகைகள், சண்டைகள் என்று அனைத்தையும் தீர்மானிப்பது நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மட்டுமே.

ஹிந்தியிலும் கூட 2010-ம் ஆண்டு பிக் பாசில் தான் சல்மான்கான் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். ஆனால் ஹிந்தியை பொறுத்தவரை ஷாருக் கான், சல்மான், அமீர் கான், அக்‌ஷய் குமார், அமிதாப் பச்சன் என்ற முதல் வரிசை நடிகர்கள் சர்வ சாதாரணமாக சின்னத்திரையில் தோன்றுவது வழக்கம். அதிலும் அவர்களின் இயல்பான பேச்சு, கலகலப்புத்தன்மை, ஜோக் அடிக்கும் பாணி எல்லாமே மிக இயல்பாக நடக்கும் ஒன்று. ஆனால் தமிழை பொறுத்தவரை, பெரிய விருது வழங்கும் விழா என்றாலும் கூட ரஜினி, கமல், விஜய், அஜித், என்று எல்லா பெரிய தலைகளும் அமைதியாக அமர்ந்து விழாவை கண்டுகளித்துவிட்டுப் போவது மட்டுமே நடப்பில் இருப்பவை. ஆடல், பாடல், கொண்டாட்டாம் எல்லாமே பெரும்பாலும் மார்க்கெட் இழந்த அல்லது ஜூனியர் நடிகர்கள் என்றே பழகிவிட்ட நமக்கு கமல் சின்னத்திரையில் வரவிருப்பது ஒருவித ஆச்சர்யத்தையும், கூடுதல் எதிர்ப்பார்ப்பையும் தந்தது.

இந்த ஷோவைப் பொறுத்தவரை நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பவர் ஒத்திகையின்றி மனதிலிருந்து இயல்பாக பேசவேண்டும். திரைப்பட வசனத்தை போல் கமல் சற்றே இறுக்கமாக வார்த்தைகளை உச்சரித்தது அவரின் இயல்பற்றத் தன்மையை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் விமர்சனத்துக்கு ஆளாக்கியது. வரும் நாட்களில் இது மாறலாம் என்று எதிர்ப்பார்ப்போம்.

அடுத்து பங்கேற்பாளர்கள் பற்றிய பார்வை: பிரபலங்கள் என்று சொல்லிவிட்டு ஊர் பேர் தெரியாத பல முகங்களா? என்று சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளிப்பதை பார்த்தோம். ஆனால் பிக் பிரதர் முதல் பிக் பாஸ் வரை மார்கெட் போன, வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் நடிகர்கள் கலந்து கொள்ளவைப்பதே நடைமுறை. உச்சத்தில் இருக்கும் எந்தக் கலைஞரும் இந்த நிகழ்ச்சிக்காக வெளியுலக தொடர்பின்றி வருவது கஷ்டம். அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து வெளிவந்த பலருக்கும் வாய்ப்புகள் குவியும் என்பதும் எதிர்ப்பார்க்கலாம். ஷில்பா ஷெட்டிக்கு பாலிவுட்டில் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியதே பிக் பிரதர் வெற்றிக்குப் பின்னரே.

தமிழ் பிக் பாஸ் பொறுத்தவரை, முக்கால்வாசி வெள்ளித்திரை நடிகர்கள் மட்டுமே. தமிழ் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை பிரபலங்களை இதில் கொண்டுவந்திருந்தால் நிகழ்ச்சி சுவாரசியம் ஆகியிருக்கும். ஸ்ரீ, அரார், ரைசா, அனுயா, வையாபுரி, சக்தி என்று பலரும் மிகவும் போரிங்கான ரகமாக வலம்வருவது நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவு. மீதம் இருப்பவர்களில் ஜல்லிக்கட்டு போராட்டப் பெண் ஜூலியை பிரதானப்படுத்த சேனல் முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவரை சுற்றிய சர்ச்சைகளும், விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் பரப்பிவிடுவதும் ரியாலிட்டி இல்லாத ஷோ என்ற வாடையை முதல் வாரத்திலேயே வெளிப்படுத்தியுள்ளது.

இதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் புகழைப்பெறவே வருகின்றவர்கள். அந்த வகையில், சமூகப் பிரச்சனைக்கு குரல் கொடுத்த ஜூலி என்ற சாதாரண பெண் எப்படி இதில் பங்குபெறலாம் என்பன போன்ற விமர்சனங்கள் தேவையற்றது. ஜல்லிக்கட்டின் போது ஆக்ரோஷமாக பொங்கிய பெண் பிரபலமாக காரணமாக இருந்த சமூக ஊடகம், அதே பெண்ணின் மீது சேற்றை வாரி ஊற்றுவது கண்டிக்கத்தக்கது.

ஆங்கில பிக் பிரதர், ஹிந்தி பிக் பாஸ் என எல்லா நிகழ்ச்சியிலும் சண்டைபோடும் பிரபலங்களை முன்னிலைப்படுத்துவது மட்டுமே இதில் டிஆர்பி-யை உயர்த்தும் என்பதால் வரும் வாரங்களில் காதல், சர்ச்சை, சண்டை, ரகசியங்கள், அழுகை, மன உளைச்சல் என்று நடிகர்களின் நவரசங்களையும் நிஜம் என்பது போல காட்டுவார்கள். அதை பார்வையாளர்கள் ஆகிய நாமும் நடிப்பு என்று தெரிந்தும் தவறவிடாமல் டிவி பெட்டியின் முன் அமர்ந்து, விமர்சனங்களை அள்ளித் தெளிப்போம் என்பதே உலக புகழ் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி மந்திரம்.