தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

0

தென் கிழக்கு ஆசிய பகுதியினர், நாட்டை பெண் வசம் ஒப்படைத்திருப்பது முதன்முறையில்லை. மியான்மரில் போராடிவரும் ஆங் சான் சூக்யி மற்றும் தென் கொரியாவின் பார்க் க்வென் ஹ்ய் போன்றோரோடு கைகோர்க்கும் விதமாக தைவான் வரலாற்றில் முதன்முறையாக 'ட்சாய் இங்-வென்' அதிபராக தேர்வாகியுள்ளார். முந்தைய ஆட்சியிலிருந்த சீன ஆதரவு தேசியக் கட்சியான குமிண்டாங்கின் வேட்பாளர் எரிக் சூ-வை அதள பாதாளத்துக்குத் தள்ளி வெற்றிவாகை சூடி தன்னை பலம்வாய்ந்த பெண்ணாக அடையாளப் படுத்திக்கொண்டுள்ளார்.

அரசியலிலும், பொருளாதாரத்திலும் ட்சாய் எடுக்கப்போகும் முடிவுகள் பற்றித் தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். ஆசியாவின் வல்லமைப் படைத்த பெண்ணாக உருமாறியுள்ள மைல்கல் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் அறிந்துகொள்வோம்.

நன்றி: விக்கிபீடியா காமன்ஸ்
நன்றி: விக்கிபீடியா காமன்ஸ்

வளர்ச்சி

இங்-வென்னின் வெற்றி பல்வேறு தளங்களின் முதன்முறையாக வந்துள்ளது. பழங்குடி வம்சமான ஹக்காவிலிருந்து தேர்வாகியிருக்கும் முதல் அதிபராக உள்ள இவர், திருமணமாகாத முதல் அதிபரும் கூட. இந்தத் தேர்தலுக்கு முன், அலுவலகப் பணிக்கான தேர்தலில் வெல்லாத முதல் அதிபரும் இவர்தான் என்பது கூடுதல் தகவல்.

மாபெரும் அரசியல்வாதிகள் இல்லாத படித்தவர்கள் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராக அதிபர் பதவியை வென்ற முதல் பெண்ணும் இவர்தான். தைவானின் தேசிய பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டமும், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழத்தில் முதுநிலை சட்டப் படிப்பும் மற்றும் பிரிட்டனின் லண்டன் பொருளாதார பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அத்துடன் அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வகையில், பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார் ட்சாய். தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, சுதந்திரமான பெண்ணாக தன்னுடைய செல்லப் பூனைகளுடன் வசித்து வருபவராக முன்னிருத்தப்பட்டார். இதர வேட்பாளர்களைப் போல அல்லாது வெளி உலகத்தின் பார்வையிலிருந்து தனித்தே இருந்தார்.

அரசியல் நாட்டம்

நாட்டின் அரசியலமைப்புடன் தன்னைத் தொடர்புப்படுத்திக்கொண்டது 1993-ம் ஆண்டு. பல்வேறு அரசுப் பணிகளில் முந்தைய ஆட்சியாளர்களின் கீழ் பணிபுரிந்தார். அதிபர் லீ டென்ங்-ஹுய்க்காக மாநில வாரியான உறவுகளைப் பற்றிய கோட்பாடுகளை வகுக்கும் குழுவில் இருந்தார்.

2000 முதல் 2004-ம் ஆண்டு வரை உள்நாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் குழுவின் தலைவராக விளங்கினார். இந்தப் பணியை எதிர்க் கட்சியாக உருவெடுத்த டி.பி.பி.-யின் சட்ட ஆலோசகர் பணிக்காக உதறினார். இந்தக் கட்சிப் பணிக்கு வந்த பின்னர் தலைநகர் டாய்பேயில் மேயர் பதவிக்கு போட்டியிட எண்ணி 2010-ம் ஆண்டு தோல்வியடைந்தார். மீண்டும் 2012-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு அப்போதைய ஆளுங்கட்சியான தேசியக் கட்சியிடம் தோல்வியைத் தழுவினார்.

வெற்றி

2012-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவிய ட்சாய் மீண்டும் போட்டியிட, நாட்டில் நிலவிய பொருளாதாரத் தடை காரணமானது. முந்தைய ஆட்சியின் தவறுகளை சரியாக எடுத்துக் காட்டினார். சீனாவின் தலைமைக்கு இசைந்து ஆட்சி நடத்திய தேசிய கட்சியால் ஒரு சதவிகித பொருளாதார வளர்ச்சியே ஏற்பட்டிருந்தது. இதனை முன்னிறுத்தி இம்மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட தயாரானார். இத்தீவு நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை யாரும் காணாத அளவிளான மாபெரும் சதவிகித ஓட்டுக்களைப் பெற்றார் ட்சாய். மக்களின் அறுபது சதவிகித ஓட்டுக்களைத் தனதாக்கிகொண்டார். இதன்மூலம் கடந்த 2012-ம் ஆண்டு தனக்கு எதிராக போட்டியிட்டு வெற்றியடைந்த மா யிங்-ஜ்யூவின் 2008 ஆண்டு சாதனையை முறியடித்தார்.

அவரது திட்டம்

தனது ஆட்சி முறையை அவ்வப்போது ஜெர்மனியின் ஏஞ்சலே மெர்கலின் ஆட்சியோடு ஒப்பிடுவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை கூறுகின்றது.

அதில் ஒன்று சீனாவின் பிடியிலிருந்து 67 ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டாலும் தைவான் தனது தனித்தன்மையோடு திகழ வழிசெய்வது. இவர் அதிபர் பதவி தேர்தலில் வெற்றியடைந்ததும், ஆதரவாளர் ஒருவர் ‘தைவான் சீனாவுக்குக் கீழ் இல்லை. தைவானுக்கு ஆதரவளியுங்கள்’ என்ற கோஷத்துடன் பாதகை ஏந்திச் சென்றார்.

இது நாட்டில் நிலவும் மோசமான பொருளாதாரத்தையே கண்கூடாகக் காண்பிக்கின்றது. இந்த புதிய ஆட்சியில் சீனாவுடனான உறவில் மாற்றம் நிகழும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் கிழக்கு ஆசியாவின் வல்லமை பொருந்திய பெண் அதிபரிடன் முன் வைக்கப்படும் எதிர்பார்ப்பு:

சீனாவுடனான வெளியுறவு கொள்கையில் மாற்றம் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆனால், இதில் மாற்றம் ஏற்படவில்லையெனில் கட்சியின் மூத்தவரான ஷூய்-பியனுக்கு 2000 ஆண்டு ஆட்சியின்போது ஏற்பட்ட நிலைதான் மீண்டும் ஏற்படும். தைவானிய அரசியலில் பெண்ணியக்கவாதிகளின் பங்களிப்பே இவர் ஆட்சிக்கு வர காரணமாகியது எனலாம். மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஆட்சியில் அமர வாய்ப்பளிக்கும் தைவான் அரசியலமைப்பில் பணியிடத்தில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் பல சட்டங்களைக் கொண்டுவர ட்சாய் காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண் தலைவரை ஊக்குவிப்பதுதான் தற்போதைய ட்ரெண்ட் என சிலிக்கான் வேலியின் கருத்தரங்கு ஒன்றில் கூறினார். மேலும், ‘சிந்திக்கும் திறன், அமைதி, நிதானம், நிர்வாகம் மற்றும் வளைந்துகொடுப்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தலைவனுக்கும் அவசியமான குணங்கள்’ என குறிப்பிட்டார்.

எல்.ஜி.பி.டி.-யினரின் உரிமைகளுக்காகவும் ட்சாய் வெளிப்படையாக குரல் கொடுத்தார். இவர், ‘காதலை ஒவ்வொருவரும் சுதந்திரமான பார்வையுடன் பார்க்கவும், கொண்டாடவும் வேண்டும்’ என ஒரு பேரணியில் தெரிவித்திருந்தார். இதுவும், வானவில் வண்ணத்தில் அதிக மக்களால் அவர் விரும்பப்பட்டதற்கு காரணமானது.

ஆக்கம்: பின்ஜால் ஷா | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற தலைமைப் பொறுப்பில் பெண்கள் தொடர்பு கட்டுரைகள்:

இந்தியாவின் துணை ராணுவப் படையின் முதல் பெண் இயக்குனர்- அர்ச்சனா ராமசுந்தரம்

'இவ்வுலகம் காட்சியின் ஊடாக இயங்குகிறது, என் மகள்கள் எனக்கு அதை காண்பிக்கிறார்கள்: கிருத்திகா ரெட்டி