விவசாயி மகன் ’ஏர் ஹிமாலயாஸ்’ விமான சேவையை தொடங்கி உயர்ந்த ஊக்கமிகு வளர்ச்சிக்கதை!

3

ஹிமாச்சல் பிரதேசத்தில் அழகிய மலைகுன்றுகளுக்கு நடுவில் உள்ள குல்லு மாவட்ட கிரமமான காக்னல் எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர் புத்தி ப்ரகாஷ் தாகுர். அவரது அப்பா ஒரு விவசாயி. அங்குள்ள நிலத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். புத்தி ப்ரகாஷ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்துக்கொண்டே, விவசாயம் செய்து தன் குடும்பத்துக்கும் உதவிவந்தார். அதை நினைவு கூறுகையில்,

”எங்கள் மாடுகளை மேய்க்க வயலுக்கு கூட்டிச்செல்வேன், நிலத்தை உழுவேன், நாத்து நடுவேன் மற்றும் களைகள் எடுப்பேன். என் அப்பாவுக்கு உதவியாக அவரது அரிசி வயலில் வேலை செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்,” என்றார். 

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சண்டிகருக்கு மேற்படிப்பிற்காக சென்றார் புத்தி. அங்கே டிஏவி பள்ளியில் படிப்பை தொடர்ந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் கிராமத்துக்கு சென்று தன் தந்தைக்கு உதவுவதை நிறுத்தவில்லை அவர். தனது கஷ்டத்தை விட தன் அப்பாவின் கஷ்டத்தை பெரிதாக உணர்ந்தவர் புத்தி. 

“என் அப்பா கடுமையான உழைப்பாளி. என் தாத்தா இறந்த போது, என் அப்பாவுக்கு மூன்று வயது தான். அவர் தினக்கூலியாக வேலை செய்தும் குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார். அதனால் அவருக்கு வேண்டிய உதவியை செய்ய நினைப்பேன். நான் சண்டிகரில் படித்து வந்தாலும் என் கிராமத்தையும், அப்பாவையும் நினைத்துக்கொண்டே இருப்பேன்,” என்றார்.

காலம் மாறியது

தனது மகனின் உதவியோடு, புத்தி ப்ரகாஷின் தந்தை ஆப்பிள் வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்தார். அந்த ஆப்பிள்களை ஏற்றுமதி செய்ய தேவையான மரப்பெட்டிகளையும் தயார் செய்ய ஆரம்பித்தார். தொழில் நன்றாக வளர்ந்தது. சண்டிகர் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த புத்தி ப்ரகாஷ், தன் தந்தையின் தொழிலில் உதவி செய்ய காக்னல் திரும்பினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் முடித்தார் அவர். 

தனது கல்வி பயிற்சியின் போது, தங்கள் மாநிலத்தின் மீது வெளிநாட்டவர்களுக்கு இருக்கும் மோகத்தை கவனித்தார் புத்தி. அதன் அடிப்படையில், தனது கிராமத்தில் ரிசார்ட் ஒன்றை கட்ட முடிவெடுத்தார். மணாலி’ யில் இருந்து 9 கிமி தூரத்தில் இருந்த இவரது கிராமம், சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்தது. ஆண்டுக்கு ஆண்டு இந்த இடத்துக்கு கூட்டம் கூடிக்கொண்டே போனது. 1996 இல் தனது ஆசைப்படி, பல ஆண்டுகளின் திட்டப்படி, முதலீட்டை எப்படியோ பெற்று, தன் கிராமத்தில் ரிசார்ட் கட்டும் பணிகளை தொடங்கினார் புத்தி ப்ரகாஷ். 

ஆனால் அதே ஆண்டு, அவர்களின் விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் ரிசார்ட் கட்டும் வேலை தடைப்பட்டது. 1999’ ஆண்டிற்குள் எப்படியோ 5 அறைகள் கொண்டு ரிசார்ட் தயார் ஆனது. சுற்றுலா பயணிகளும் இங்கே குவியத் தொடங்கினர்.

“எங்கள் ரிசார்ட் சிறியதாக இருந்தது, ஆனால் வீட்டு சூழ்நிலையை தந்தது. சில அறைகளில் சமையலறை வசதி இருந்தது, அது பயணிகளுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. அங்கே தங்களுக்கு பிடித்த உணவை சமைத்து உற்சாகமடைந்தனர். எங்கள் கிராமத்தில் இருந்து கொண்டே தங்களின் வீட்டு உணர்வை பெற்றனர்,” என்கிறார்.

2001 இல் புத்தி ப்ரகாஷ், 40 மெத்தைகள் கொண்ட ஒரு விடுதியை கட்டுவதற்கான ப்ரான்சைஸ் காண்ட்ராக்ட் ஒன்றை பெற்றார். இது இளம் பயணிகளுக்காக கட்டப்படும் விடுதி. ட்ரெக்கிங் மற்றும் மலையை ஏறி சுற்றிப்பார்க்கவரும் இளைஞர்களுக்கு குறைந்த விலையில் விடுதி இருந்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் ஹிமாலயா அடிவாரத்தில் அதை கட்ட ஆரம்பித்தார் புத்தி. 

கடந்த சில ஆண்டுகளாக, புத்தியின் தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு, தான் கட்டிய ரிசார்டில் மேலும் அறைகளை கட்டி விரிவுப்படுத்தியுள்ளார். ‘சர்தக் ரிசார்ட்’ என்று அழைக்கப்படும் இந்த ரிசார்டில் தற்போது 55 அறைகள் உள்ளன. நாட்டில் எங்கு சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான விழா மற்றும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றால் அதில் தவறாமல் கலந்துகொள்கிறார் புத்தி ப்ரகாஷ். இதன் மூலம் காக்னல் கிராமத்தை மாநிலத்தின் சுற்றுலா மேப்பில் கொண்டுவந்துள்ளார். 

இவரின் திசை நோக்கி காற்று அடித்தது... 

சர்தக் ரிசார்ட்ஸ் அமோக வெற்றி அடைந்ததை அடுத்து, புத்தி ப்ரகாஷ் தனது தொழிலை இதற்கு மேல் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்தார். ஹிமாச்சல் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தரும் துறைகளில் பணிபுரிந்த புத்தி, இதற்கு மேல் பெரிதாக எதையாவது செய்து சாதிக்க முடிவெடுத்தார். 

தனது பகுதியில் ஒரு விமான சேவையை தொடங்க முடிவெடுத்தார் புத்தி ப்ரகாஷ். அத்துறை பற்றி போதிய அறிவு இல்லாது இருந்தாலும் தனது கனவு திட்டமாக இதை செய்ய ஆயத்தமானார். 

“ஹிமாச்சல் ஒரு அழகிய மாநிலம். நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால் என் அனுபவத்தில் சொல்கிறேன், ஹிமாச்சலை போல் வேறு எந்த ஊரும் அழகாய் இல்லை. ஆனால் இங்கு போக்குவரத்து வசதி குறைவு, ஒரு பெரிய குறை. இங்கே ரயில் சேவை, விமான சேவை என்று எதுவும் இல்லை. சாலை வழிப்பயணம் இன்றும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. அதனால், மக்கள் எளிதாக இங்கு வந்து என் மாநிலத்தை அடைய, விமான சேவையை தொடங்க முடிவெடுத்தேன்,” என்றார். 

’ஏர் ஹிமாலயாஸ்’ என்ற விமான சேவையை தொடங்கினார் புத்தி ப்ரகாஷ். ஹிமாச்சல் ஹாலிடேஸ் என்ற தனது பயண நிறுவனத்தின் கீழ் இதை தொடங்கினார். ஆனால் அவரது தேவைக்கு எந்த ஒரு விமான நிறுவனமும் உதவி செய்யவோ, பார்ட்னராகவோ தயாராக இல்லை. ஆனால் புத்தி ப்ரகாஷ் சோர்ந்து போகவில்லை, தொடர்ந்து முயற்சித்து, இறுதியாக பெங்களுருவை சேர்ந்த ’டெக்கன் சார்ட்டெர்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து தன் மாநிலத்துக்கு விமான சேவையை தொடங்கலானார். 

ஏப்ரல் 2, 2014 இல் இவர்களது முதல் விமானம் பறந்தது. ஹிமாச்சல் பிரதேசத்திற்கு முதன் முறை பிசினஸ் கிளாசில் பறந்த முதல் தனியார் விமான சேவை இவர்களதே. அந்த நாள் கனவு நினைவான நாள் என்று தன் நினைவை பூரிப்புடன் பகிர்ந்தார் புத்தி. 

ஆனால் கதையில் ஏற்பட்ட மாற்றம்

புத்தி ப்ரகாஷின் மகிழ்ச்சி நீடித்து இருக்கவில்லை. ஏப்ரல், ஜூலை மாதத்தில் இவர்களது “ஏர் ஹிமாலயாஸ்” சண்டிகர் முதல் குல்லு வரையான விமான சேவையில் ஒரு சில பயணிகள் மட்டும் புக் செய்தனர். 9 பேர் கொண்டு செல்லும் அந்த விமானம் பெரும்பாலும் காலியாக சென்றது. 

“நாங்கள் மார்கெட்டிங் சரியாக செய்யவில்லை. ஒரு சில பயணிகளுக்கு மட்டுமே எங்கள் விமான சேவையை பற்றி தெரிந்திருந்தது,” என்றார். 

இவரது நிறுவனத்துக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. முதல் ஆண்டிலேயே ஏற்பட்ட இந்த நஷ்டத்தை கண்டு அஞ்சி அவர் இத்திட்டத்தை கைவிடவில்லை. மெல்ல இவர்களின் விமான சேவை பிரபலமாகி பயணிகள் வரத்தொடங்கினர். நஷ்டம் 25 லட்சட்திற்கு குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு நஷ்டமின்றி சென்றது மகிழ்ச்சி தகவல். மேலும் சரியான திட்டம் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் வரும் ஆண்டில் நல்ல லாபம் ஈட்டுவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார் புத்தி ப்ரகாஷ். 

விரைவில், மணாலியில் இரண்டாவது ரிசார்ட் ஒன்றை தொடங்குகிறார் புத்தி. தினமும் ஏர் ஹிமாலாயாஸ் சேவையை தக்கவைத்துக்கொள்ள அதன் செலவீனங்களை சமாளிக்க போராடி வருகிறார். ”ஹிமாச்சலில் விமான சேவைக்கு நல்ல வருங்காலம் உள்ளது. ஆனால் அதற்கான காலத்துக்கும், நேரத்துக்கும் காத்திருக்கவேண்டி உள்ளது. ஒரு பெரிய சேவையை கட்டமைக்க பொறுமையாக இருக்கவேண்டும். அப்போதே அதன் பலனை அடையமுடியும்,” என்று கூறுகிறார்.  

ஆங்கில கட்டுரையாளர்: செளரவ் ராய்