விளைச்சல்களை விவசாயிகளிடம் நேரடியாக பெற்று வணிகங்களுக்கு அனுப்ப உதவும் 23 வயது அனு மீனா

அனு மீனா தொடங்கியுள்ள ஏழு மாதங்களே ஆன இந்த அக்ரி ஸ்டார்ட் அப், விவசாயிகளையும் வணிகங்களையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைக்கிறது.

2

அனு மீனா; ராஜஸ்தானின் மனோலி கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயியான அவரது தாத்தா தனது விளைச்சலை விற்பனை செய்ய சந்தித்த சவால்களை அருகிலிருந்து பார்த்துள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் காய்கறிகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பது போன்ற வழிமுறைகள் குறித்து சிந்திக்கத் துவங்கினார். ஆனால் அவரது தாத்தாவிற்காக மட்டுமோ அல்லது ஒரே ஒரு விவசாயிக்காக மட்டுமோ இது குறித்து சிந்திக்கவில்லை. 

“இந்தியாவின் 13 சதவீத GDP விவசாயத்திலிருந்தே கிடைக்கிறது. ஆனால் இந்தத் துறை ஒழுங்குப்படுத்தபடாமல் உள்ளது. தொழில்நுட்பத்தை இணைத்து இதை ஒழுங்குப்படுத்துவதற்கு அதிக நேரம் எடுக்கும்,” என்றார் அனு.

இடைத்தரகர்களை நீக்கிவிட்டு நேரடியாக விவசாயிகளுக்கு நல்ல விலையை வழங்கும் நோக்கத்துடன் ஏழு மாதங்களுக்கு முன்னால் அக்ரோவேவ் (AgroWave) என்கிற ஸ்டார்ட் அப்பை துவங்கினார் அனு. ஆராய்ச்சி, பகுப்பாய்வு, தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விவசாய விநியோக சங்கிலியை மேம்படுத்தவேண்டும் என்பதுதான் இந்த வென்சச்ரின் நோக்கம்.

ஐஐடி டெல்லியில் தனது பேட்ச்சில் உடன் படித்த பவல் ஜவால்கரை உடன் இணைத்துக்கொண்டார். இவர் அக்ரோவேவின் பகுப்பாய்வை மேற்பார்வையிடுகிறார். மேலும் விவசாய விநியோக சங்கிலியில் ஆறு ஆண்டுகால அனுபவமிக்க அருண் யாதவை குழுவில் இணைத்துக்கொண்டார். இவர் அக்ரோவேவின் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கிறார்.

இந்த ஸ்டார்ட் அப் ஃப்ரெஷ் பழங்கள் மற்றும் காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொண்டு நேரடியாக வணிகங்களுக்கு விநியோகிக்கிறது. எந்த பொருட்கள் வாங்கப்படுகிறது, எவ்வளவு வாங்கப்படுகிறது, எந்த இடைவெளியில வாங்கப்படுகிறது போன்ற முந்தைய தரவுகளின் மூலம் தேவையை கணிக்கிறது. பகுப்பாய்வைப் பயன்படுத்தி தேவையையும் விநியோகத்தையும் சரியாகப் பொருத்துகிறது.

இந்நிறுவனம் குர்கானில் அமைந்துள்ளது. பானிபட், சோனிபட், ஹர்பூர், ராஜஸ்தான் போன்ற பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து பொருட்களை பெறுகின்றனர். விவசாயிகளுக்கு சிறப்பான விலை வழங்கப்படுவது குறித்து விவரிக்கையில், ”தற்போதைய அமைப்பில் கிராமத்திலுள்ள ஒரு தரகர் விளைச்சலை வாங்கிக்கொண்டு உள்ளூர் மண்டியில் விற்பனை செய்வார். அதன் பிறகு அவை வணிகத்திற்கு அனுப்பப்படும். நாங்கள் விளைச்சலை நேரடியாக விவசாயியிடமிருந்தே வாங்குவதால் சிறப்பான விலையை வழங்குகிறோம். உதாரணத்திற்கு ஒரு விவசாயி உருளைக்கிழங்கை ஒரு கிலோ 3-4 ரூபாய்க்கு விற்பனை செய்தால் நாங்கள் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் கொடுக்கிறோம். அதாவது 25 சதவீத உயர்வு.”

கேட்டரர்ஸ், சில்லறை வர்த்தக கடைகள், ரெஸ்டாரண்டுகள், கேன்டீன்கள் என 30-க்கும் மேற்பட்ட நிலையான வாடிக்கையாளர்கள் அக்ரோவேவ் நிறுவனத்திற்கு உள்ளனர். இங்கு சுமார் 50,000 ரூபாய் தினசரி விற்பனையாகிறது.

இந்நிறுவனத்தின் செயலி உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு மாதங்களில் விவசாயி செயலி ஒன்றையும் வாடிக்கையாளர் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்த இந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தானுக்கு காய்கறிகளையும் பழங்களையும் டெலிவர் செய்ய விரும்புகின்றனர். 

”விவசாயிகள் தங்களது பொருட்களை தாங்களே விற்பனை செய்யவும் பயிற்சியளிக்கிறோம். இதற்காக அரசாங்க முயற்சிகள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கங்கள் (FPO) ஆகியவற்றுடன் இணைய திட்டமிட்டுள்ளோம். போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொள்ள முடியாத விவசாயிகளுக்கு போக்குவரத்து வசதியும் செய்து தருகிறோம்,” என்றார் அனு.

அக்ரோவேவ் டாஃபோடில் சாஃப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து சீட் நிதியாக வெளியிடப்படாத தொகையை உயர்த்தியுள்ளது. இதன் நிறுவனரான யோகேஷ் அகர்வால் ஸ்டார்ட் அப் துவங்கப்பட்ட ஆரம்ப நாட்கள் முதல் உதவி வருகிறார். இந்த நிதி நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.

ஸ்டார்ட் அப்பை துவங்கி நடத்துவதில் சந்தித்த சவால்கள் குறித்து இந்த இளம் தொழில்முனைவோர் கூறுகையில், “தற்சமயம் போக்குவரத்தில் மூன்றாவது நபர் யாரையும் அனுமதிக்கவில்லை. இதுவே ஒரு சவாலாக உள்ளது. அடுத்தது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவாறான தரம் சார்ந்த நடவடிக்கைகளில் சவால்களை எதிர்கொள்கிறோம். அதிக நேரம் செலவிட நேர்கிறது. ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைவது சுலபமல்ல. கிட்டத்தட்ட 50 விவசாயிகளை இணைத்துக்கொண்டுள்ளோம். ஆனால் பெரிய அளவில் செயல்படுத்துவது சுலபமல்ல. அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொண்டால் நிறைய விவசாயிகளை சென்றடையலாம்.”

விவசாயிகளிடமிருந்து ரெஸ்டாரண்டுகளுக்கு அனுப்பப்படும் வணிக மாதிரியில் நுகர்வோர், விவசாயி என இருவருக்கும் பலனளிக்கும் விதத்தில் செயல்படுகிறது. இது இந்திய மெட்ரோக்கள் முழுவதும் பிரபலமாகி வரும் நிலையில் இவர்களால் வளர்ச்சியடைய முடியவில்லை. அக்ரோவேவ் விவசாயிகளிடமிருந்து வணிகங்களுக்கு அனுப்பப்படும் முறையில் வணிகங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : வல்லப் ராவ்