FC மெட்ராஸ்: சென்னையில் ஃபுட்பால் ஃபீவரை துவக்கி வைத்த Freshworks கிரீஷ் மாத்ருபூதம்!

1

சென்னையின் அடையாறு, டி.நகர், வேளச்சேரி பகுதிகளின் காலைப் பொழுதுகள் தற்போது புதிய உற்சாகத்தில் இருக்கின்றன. காரணம் பில்டர் காபியினால் மட்டுமல்ல. சென்னையை சேர்ந்த ஃப்ரெஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிரீஷ் மாத்ருபூதம், ஃபுட்பால் கிளப் மெட்ராஸ் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் சென்னையில் ஃபுட்பால் ஜூரம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இவரது இந்த அகாடமியில், ஏராளமான சிறுவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஸ்டார்ட்-அப் துறையில் கிரீஷ் மிகவும் முக்கியமானவர். கடும் போட்டிகளுக்கு இடையே தமது நிறுவனத்தை நிலை நிறுத்திக்கொள்ள கிரீஷ் எவ்வளவு போராடுகிறார் என்பது மென்பொருள் துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால் அவர் ஒரு ஃபுட்பால் அகாடமியை தொடங்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரது இந்த முடிவு பலரையும் ஆனந்த அதிர்ச்சியில் தள்ளியுள்ளது என்றே கூறலாம்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், ஃபுட்பால் அகாடமியை ஆரம்பிக்க இது தான் சரியான தருணமாக இருக்க முடியும். அதைத்தான் செய்திருக்கிறார் கிரீஷ். கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக, அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி இருக்கிறார் இவர். இந்த ஃபுட்பால் கிளப், 13 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்யும்.

"விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், நமது சாம்பியன்களை கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த அகாடமி ஆரம்பித்துள்ளேன். இங்கு பயிலும் மாணவர்கள் பெரிய ஃபுட்பால் சாம்பியன்களாக உருவாகாவிட்டாலும், அனைத்து வகையிலும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள்,"

என நம்பிக்கையுடன் கூறுகிறார் கிரிஷ். கால்பந்து விளையாட்டையே தங்களது வாழ்க்கையாக்கிக் கொள்ள நினைக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது. மகோகனி ஃபுட்பால் கிளப்புடன் இணைந்து, இந்த கால்பந்து அகாடமி செயல்படும். அங்கு கிடைக்கும் பயிற்சிகள் அனைத்தும் இங்குள்ள மாணவர்களுக்கும் கிடைக்கும்.

‍2010ம் ஆண்டு துவங்கப்பட்ட ப்ரெஷ்ஒர்க்ஸ் நிறுவனம், எதிர்காலத்தில் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நோக்கத்தோடு பயணிக்கிறது. இருப்பினும், கிரீஷ் மாத்ருபூதம் ரிஸ்க் எடுக்க தயங்கவில்லை. அவரது லட்சத்தின் ஒரு தொடர்ச்சியாகவே இந்த ஃபுட்பால் கிளப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென சென்னை துரைப்பாக்கத்தில், உலகத் தரம் வாய்ந்த கால்பந்து மைதானம் ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். இதற்கு ஃபிஃபா அமைப்பிடம் இருந்து அங்கீகாரம் பெறும் முயற்சியும் நடக்கிறது.

முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள FC மெட்ராஸ் கால்பந்து அகாடமி, ஜூனியர்களுக்கு பயற்சி அளிக்கும் வேலையை செய்து வருகிறது. இங்கு உருவாக்கப்படும் சிறந்த வீரர்கள், அண்டர்13, அண்டர்15, அண்டர்18 என அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வர்.

சென்னையில் அடையாறு, டி.நகர், துரைப்பாக்கம் உள்பட 20க்கு மேற்பட்ட இடங்களில் FC மெட்ராஸ் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்.

இந்தியாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமடைந்து வரும் வேளையில், FC ஃபுட்பால் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன், சுனில் செத்திரியின் கோரிக்கையை ஏற்று, ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்தில் மைதானத்தில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‍

‍இந்திய கால்பந்து அணி தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உலகளவில் கடந்த ஆண்டு 173வது இடத்தில் இருந்த இந்திய அணி, இந்த ஆண்டு 97வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் வீரர்களை சரியாக தயார் செய்து, முதல் 100 அணிகளின் பட்டியலில் இடம்பெற செய்துள்ளார். இது ஒரு மைல்கல் என்றே குறிப்பிடலாம்.

நாடு முழுவதும் உள்ள திறமையான கால்பந்து வீரர்களை கண்டறிந்து, அவர்கள் முழுநேர கால்பந்து வீரராக உருவாவதற்கான அடிதளத்தை அமைத்துக்கொடுப்பதே, எப்சி மெட்ராசின் நோக்கம் என்கிறார், அதன் இளைஞர் மேம்பாட்டுத்துறை தலைவர் அரிந்தம் மகோகனி.

"களப்பணி மற்றும் அதை சாராத உயர்தர பயிற்சியை வழங்குவதுடன், படிப்பு, சத்தான உணவு ஆகியவையும் மாணவர்களுக்கு வழங்கப்படும். கால்பந்தில் திறமையாக உள்ள குழந்தைகளை அனைத்து வகையிலும் மேம்படுத்துவதே எங்கள் லட்சியம். எங்களுடைய தற்போதைய நோக்கம், உடனடியாக ஒரு இளைய கால்பந்தாட்ட அணியை உருவாக்க, அகில இந்திய ஃபுட்பால் பெடரேஷன் நடத்தும் இளைஞர்களுக்கான போட்டியில் பங்கேற்க செய்வதுதான்," என்கிறார் அவர்.

தமிழ் கட்டுரையாளர்: ஜெயசித்ரா